இறைவனின் குரலை நம்மால் உணர இயலுகிறதா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் முதல் புதன்
I: 1சாமு:  3: 1-10,19-20
II: திபா 40: 1,4. 6-7. 7-8. 9
III: மாற்: 1: 29-39 

ஒரு பெண் சந்தைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். சென்ற இடத்தில் பயங்கரக் கூட்டம். ஒருவழியாக பொருட்கள் வாங்கிவிட்டார். வெளியே வரும் சமயத்தில் தன்னை யாரோ அழைப்பது போல இருந்தது. அது தன் கணவனின் குரல் என அறிந்த அவர் உடனடியாக தன் கணவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு " நீங்க இங்கதான் இருங்கீங்களா? உங்க குரல கேட்ட மாதிரி இருந்தது?" என்று கூறினார். "ஆம் இங்கதான் இருக்கிறேன். இந்தக் கூட்டத்திலயும் என் குரல சரியா கண்டுபிடிச்சிட்டியே!" என வியந்தார் அப்பெண்ணின் கணவன்.

நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் எப்போதும் தன்னை தன் மக்களுக்கு வெளிப்படுத்துபவராக இருக்கிறார். தன்னை யாருக்கும் அவர் மறைப்பதில்லை. பழைய ஏற்பாட்டில் இயற்கை மூலமாக, இறைவாக்கினர் மூலமாக, நேரடி காட்சிகள் மூலமாக, அடையாளங்கள் மூலமாக அவர் தன்னை தன் மக்களுக்கு வெளிப்படுத்தியதற்கு பல உதாரணங்களை நாம் காட்ட முடியும்.அவற்றின் மூலம் தன் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு அவர் இதையெல்லாம் செய்தார். 

 அவ்வரிசையில் சாமுவேலுக்கு கடவுள்  தன்னை வெளிப்படுத்துவதை  இன்றைய முதல் வாசகத்தில் நாம் தியானிக்கின்றோம். சாமுவேல்  சாமுவேல் என பெயர் சொல்லி அழைக்கின்றார் இறைவன். முதலில் சாமுவேலால் கடவுள் தான் தன்னை அழைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள இயலவில்லை என்றாலும், குரு ஏலியின் உதவியோடு கடவுளின் குரலுக்கு "ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன் " என செவிமடுத்தார்.கடவுளின் வார்த்தையில் நிலைத்தார். இறைவாக்கினர் ஆனார். 

அன்புக்குரியவர்களே அன்று இஸ்ரயேல் மக்களுக்கும், சாமுவேலைப் போன்று இறைவாக்கினர்களுக்கும் தன்னையே வெளிப்படுத்தி தன் வார்த்தைகளைக் கூறிய இறைவன் இன்று பலவழிகளில் நம்மிடமும் தன்னை  வெளிப்படுத்துகிறார். நம்முடன் பேசுகிறார்.  ஆனால் நாம் அவர்தான் என்பதை உணர்கிறோமா?எனச் சிந்திக்க  அழைக்கப்படுகிறோம். 
அவ்வாறு கடவுளின் குரலைக் கேட்க நமக்கு மிகச்சிறந்த வழியைக் காட்டியுள்ளார் நம் ஆண்டவர் இயேசு. இறைவனோடு தனிமையில் மொளனமாய் செபிப்பது ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கான மிகச்சிறந்த முறையாகும். அவ்வாறு கடவுளின் வார்த்தைகளை இயேசு கேட்டதாலேயே அவரால் கடவுளின் வழிநடத்துதலை ஆழமாக உணர முடிந்தது. பலருக்கும் நன்மை செய்ய முடிந்து. வல்ல செயல்கள் ஆற்ற முடிந்தது. அவைமூலம் கடவுளின் வார்த்தைகளை கேட்டபதோடல்லாமல் பிறரும் கேட்கும் வண்ணம் போதிக்கவும் முடிந்தது.

மரியா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து மெளனமாக அவர் கூறியதைக் கேட்டார். அதனால் அவர் நல்ல பங்கை தேர்ந்தெடுத்தார் என நம் ஆண்டவர் இயேசுவாலேயே பாராட்டப்பட்டார்.
 கடவுளின் குரலை நாமும் கேட்க எண்ணினால் அவரோடு இறைவேண்டலில் மொளனமாய் இணையவேண்டும்.இறைவார்த்தை, திருவிருந்து மூலம் அவரின் வழிநடத்துதலை உணரவேண்டும். அவ்வாறு நாம் செய்தால்  பிற மனிதர்கள் , இயற்கை , வாழ்க்கை அனுபவங்கள், தனிமை, கூட்டநெரிசல் என அனைத்தின் வழியாகவும் இறைவனை நம்மால் உணர முடியும். அவர் குரலைக் கேட்க முடியும். அவர் வார்த்தைகளை சாமுவேலைப் போல, இயேசுவைப் போல நம்மோடு உள்ளவர்களுக்கு வழங்கவும் முடியும்.  இறைவனின் குரலைக் கேட்கத் தயாரா?

 இறைவேண்டல் 

எம்மோடு எந்நாளும் பலவழிகளில் பேசுகின்ற இறைவா! உமது வல்லமையுள்ள வார்த்தைகளை நாங்கள் அடையாளம் கண்டு செவிமடுக்க அருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 2 =