மனமாற்றம் என்பது தொடர்மாற்றம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் முதல் திங்கள்
I: 1சாமு: 1: 1-8
II: திபா: 116: 12-13. 14,17. 18-19 
III: மாற்: 1: 14-20

கிறிஸ்து பிறப்பு காலத்தை முடித்து நாம் பொதுக்காலத்தைத் தொடங்குகிறாம். நேற்றைய நாளில் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடினோம். இவ்விழாவில் திருமுழுக்கு பெற்ற நாமும் மனமாற்றம் அடைந்தவர்களாய் இறைவனோடு இணைய வேண்டும் என்ற கருத்தைச் சிந்தித்தோம். இன்று அதையே இன்னும் ஆழப்படுத்தும் விதமாக இயேசு தன் பணிவாழ்வின் தொடக்கத்திலேயே மக்களுக்கு   " காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கிவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் "என அறைகூவல் விடுகிறார். 

இந்த மனமாற்றம் என்ற வார்த்தையை நாம் மிக மிக அதிக தடவை கேட்கிறோம். சிந்திக்கிறோம். மனமாற்றம் என்பது வெறும் முடிவுகளை மாற்றுவதல்ல. அது அடிப்படை மனநிலையில் ஏற்படும் மாற்றம். நம்முடைய நம்பிக்கை, கொள்கைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் என அனைத்தையும் மாற்ற வல்லதே மனமாற்றம். அம்மனமாற்றம் கடவுளாலும் பிறராலும்  விரும்பத்தக்கதாக, நமக்கும் பிறருக்கும்  நன்மையளிப்பதாக, மகிழ்வூட்டுவதாக அமைந்தால் அதுவே உண்மையான மனமாற்றம். எல்லாவற்றையும் தாண்டி மனிதன் கடவுளோடும் பிறரோடும் இயற்கையோடும் தன்னோடும் சுகமான சுமூகமான ஆரோக்கியமான உறவில் வளர இந்த மனமாற்றம் முக்கியமானது.

நம் அன்றாட வாழ்வில் அதிலும் குறிப்பாக நமது கிறிஸ்தவ வாழ்வில்  நாம் மனமாற்றத்திற்காக பல முறை முயன்று இருக்கிறோம். அதில் சிலமுறை வெற்றி பெற்றிருக்கலாம். சிலமுறை தோற்றிருக்கலாம்.  வென்றதனால் மீண்டும் மனம் மாறத் தேவையில்லை எனவும், தோற்பதால் இயலவில்லை என எண்ணி மனம் மாற முயற்சியை கைவிடுவதும் அல்ல உண்மையான மனம் மாற்றம். மனமாற்றம் என்பது தொடர்கதை. அது வாழ்க்கை முடியும் வரை நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். ஏனெனில் உண்மையான மனமாற்றம் நமக்கு மட்டுமல்ல நம்மோடு வாழ்பவர்களுடைய மீட்புக்கும்  அடித்தளமாக அமைகிறது.

நீதிமான்கள் கூட ஒரு நாளில் ஏழுமுறை தவறுதாக நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். ஆனாலும் அவர்கள் நீதிமான்கள் என அழைக்கப்படக் காரணம் அவர்கள் மனம்வருந்தி மனம்மாறி இறைவனைத் தேடிச் செல்வதாலேயே. தாவீது தன் மனமாற்றத்தால் ஆண்டவருக்கு நெருங்கியவனார். சக்கேயுவின் மனமாற்றம் ஆண்டவருடைய மீட்பைத் தந்தது. இயேசுவை மறுதலித்து விட்டேனே என மனம்மாறிய பேதுரு திருச்சபை தலைவர் ஆனார். திரு அவையைத் துன்புறுத்திய சவுல் மனம் மாறி பவுல் என்ற திருஅவையின் தூணாக மாறினார். இன்று நம்மையும் இயேசு அழைக்கிறார். மனம் மாறி, நற்செய்தியை நம்பவும் அவருடைய சீடர்களாகி பிறரை மனமாற்ற வாழ்வுக்குத் தூண்டவும் நம்மை இயேசு அழைக்கிறார். ஒருநாள் மட்டுமல்ல, வாழ்நாள் முழுதும் மனமாற்ற வாழ்வைக் கைகொண்டு வீழ்ந்த போதெல்லாம் தளராமல்  எழுந்து நடக்க கற்றுக் கொள்வோம். ஏனெனில் மனமாற்றம் என்பது தொடர்மாற்றம்.

 இறைவேண்டல் 
ஆண்டவரே! மனம் மாறி மீட்புப் பெற எம்மை விடாது அழைக்கின்றீர். உமது குரலைக் கேட்டு நாங்களும் மனமாறி வாழவும்,மீண்டும் மீண்டும் தவறினாலும், மீண்டும் மீண்டும் எழுந்து நடந்திடவும் அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 14 =