இறைவிருப்பத்தை நாடுபவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி; I: 1 யோ:   5:5-13; II: திபா: 147:12-13, 14-15, 19-20; III: லூக்: 5: 12-16

ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது அருட்தந்தை சிறுகுழந்தைகளுள்ள வகுப்பிற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவ்வகுப்பின் ஆசிரியர் குழந்தைகளிடம் அவர்கள் எவ்வாறு செபிப்பார்கள் என்று கேட்டார். மாணவர்கள் பதிலளித்துக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தை எழுந்து நின்று தான் நன்றாகப் படிக்க வேண்டும்,அம்மா அப்பா நல்லாருக்கணும், அப்பாவிற்கு நிறைய பணம் கிடைக்கணும் என்றெல்லாம் வேண்டுவேன் எனக் கூறிக்கொண்டிருந்தார். உடனே அருட்தந்தை குறுக்கிட்டு கடவுள் நீ கேட்ட எல்லாவற்றையும் தருவாரா பாப்பா?  எனக் கேட்டார். உடனே அக்குழந்தை கண்டிப்பாகத் தருவார் என பதிலளித்தார். அப்போது அந்த அருட்தந்தை எல்லா மாணவர்களையும் நோக்கி நாம் செபிக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் எனப் பட்டியலிடுகிறோம். அது நாம் அப்பாவிடம் உரிமையாக் கேட்பது.  அதில் தவறில்லை. ஆனாலும் நாம் கேட்பதில் கடவுளுக்கு விருப்பமிருக்க வேண்டாமா? அவருக்கும் நாம் கேட்பதில் விருப்பமிருந்தால்தானே தருவார் என்று கூறினார். பின் தொடர்ந்து அவர் கூறியது நீங்கள் கடைக்குச் செல்லும் போது அப்பாவிடமோ அம்மாவிடமோ ஒரு பொருளை வாங்கிக் கேட்கிறீர்கள். அவர்கள் உடனே அதை வாங்கித் தருவதில்லை. அவர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே வாங்கித் தருவார்கள். எனவே நீங்கள் செபிக்கும் போது " ஆண்டவரே உங்களுக்கு விருப்பமென்றால் இதை செய்யுங்க" என்று செபிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த வகுப்பை பார்வையிடச் சென்றார்.

ஆம் அன்புக்குரியவர்களே.  அக்குழந்தையைப் போலத்தான் நமது செபங்களும் அமைகின்றன. நமது விருப்பத்தை ஆண்டவரிடம் திணிக்கிறோமே தவிர ,ஆண்டவரின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். அதனால்  வேண்டுதலைக் கடவுள் நிறைவேற்றவில்லை, செபிப்பது வீண் என நம் நம்பிக்கையைக் கூட இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அத்தொழுநோயாளர் இயேசுவிடம் " நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும் " என வேண்டினார். இவ்வார்த்தைகளை நாம் உள்ளத்தில் இறுத்தி தியானிக்கும் போது நமக்கு இயேசு கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. 
 “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.(மத் 26:39)

தந்தையின் விருப்பத்தை தன் விருப்பமாகக் கொண்டவர் நம் இயேசு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் உணவு எனக் கூறுகிறார் அவர்.  நாம் தந்தையிடம் கேட்பதில் தவறில்லை. அது நமது உரிமை. நமது நம்பிக்கை. அதேவேளையில் அவரது விருப்பத்தை நாம் நாடும் போது நாம் கேட்பதை மட்டுமல்ல கேட்காததையும் சேர்த்து அவர் தருவார். நம்மை விட்டு துன்பங்கள் அகன்று போகாததைப் போல சிலவேளைகளில் தமக்குத் தோன்றினாலும், அதை துணிச்சலாக எதிர்கொள்ளும் சக்தியைத் தருவார். ஏனெனில் கடவுளின் விருப்பம் அவருடைய பிள்ளைகளாகிய நாம் நலமுடன்  வாழ வேண்டுமென்பதே. இறைவிருப்பத்தை நாடத் தயாரா?

 இறைவேண்டல் 

அப்பா தந்தையே!  இயேசுவைப் போல, தொழுநோயாளியைப் போல உமது விருப்பத்தை நாடக்கூடியவர்களாய் எம்மை உருவாக்கும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 7 =