உலகை வெல்ல நம்பிக்கையை ஆயுதமாக்குவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்
I: 1 யோ:  4: 19- 5: 4
II: திபா 72: 1-2. 14-15bc. 17 
III: லூக் 4: 14-22

ஒரு குடிநோயாளி ஆற்றுப்படுத்துதலுக்காக சென்றிருந்த இடத்தில் ஒரு பணியாளரிடம் தன்னுடைய இயலாமைக் கூறி வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார். தான் எவ்வளவு தான் முயற்சித்தாலும் இறுதியில் தோற்றுப்போய்விடுவதாகச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அத்தோடு என் மீது என் வீட்டார் மட்டுமல்ல நானே நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் திருந்துவேன் என்று எனக்கே நம்பிக்கை இல்லை. வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன். என் தீய பழக்கத்தால் என் குடும்பமே தோற்றுபோய் நிற்கிறது என பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அப்பணியாளர் நீங்கள் குடித்ததால் தோற்றுப்போகவில்லை. நீங்கள் நம்பிக்கை இழந்ததால் மட்டுமே தோற்றுப் போய்விட்டீர்கள். நம்பிக்கையைத் தட்டி எழுப்புங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் என்று ஆறுதல் கூறி தேற்றினார். 

ஆம் அன்புக்குரியவர்களே, என்று நாம் நம்பிக்கையை இழக்கிறோமோ அன்றே வாழ்வில் தடுமாற ஆரம்பிக்கின்றோம். வென்று விடுவோம் என்று நம்பிக்கையுடன் விளையாடும் விளையாட்டுவீரர் இறுதிவரை போராடுவதை நாம் காண்கிறோமல்லவா. உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த பலர் தங்களின் நம்பிக்கையால் குணம்பெற்று எழுந்து நமக்கு சாட்சியம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதே போல இனி எழவே முடியாத அளவுக்கு வாழ்வில் தளர்ச்சியுற்றவர்கள் பலர் நம் கண்முன்னால் உயரே நிற்கின்ற சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. ஆம். தோற்பதற்கு  சூழ்நிலைகளோ, பலவீனங்களோ தீயமனிதர்களோ அல்லது தீய பழக்கங்களோ காரணமாக இருக்கலாம். ஆனால் வெல்வதற்கு ஒரே ஆயுதம் நம்பிக்கை.முதலாவது இறைவனிடம் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கை.  இரண்டாவது இறைநம்பிக்கையால் நமக்குள் வளர்ந்த தன்னம்பிக்கை.

"கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே" என்ற முதல் வாசகத்தில் கூறப்பட்ட யோவானின் வரிகள் நமக்கு இக்கருத்தையே சுட்டிக்காட்டுகின்றனன்.மேலும் இந்நம்பிக்கைக்கு உருகொடுக்கும் விதமாக இயேசு நற்செய்தி வாசகத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆண்டவரின் ஆவி என் மேலே  என்று விண்ணகத் தந்தையிடமும் ஆவியின் ஆற்றலிலும்  நம்பிக்கை கொண்ட இயேசு, அந்நம்பிக்கையால் தான் ஆற்றப்போகும் செயல்களைப் பட்டியலிடுகிறார். அதன் மூலம் எளியோருக்கும், சிறைப்பட்டோருக்கும், பார்வையற்றோருக்கும், தீய ஆவியின் பிடியில் சிக்கி வாழ்வில் நலிவுற்றவருக்கும் நம்பிக்கைச் செய்தியை அளித்து வாழ்வில் வெற்றிபெற ஊக்கம் தருகிறார்.

நாம் தோற்றுப்போகின்ற தருணம் நம் வாழ்வில் பல எழலாம். நம்முடைய பலவீனங்களும் பாவ வாழ்வும் நம்மைக் கீழே தள்ளலாம். நம்மை வெறுக்கின்றவர்கள் நம் வாழ்வை சீர்குலைக்கலாம். காரணமில்லாமலே நாம் துயருரலாம். ஆனால் அச்சமயங்களில் நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நம்பிக்கையோடு அனைத்தையும் வென்று வாழ்வில் முன்னேற கற்றுக்கொள்ளவேண்டும். ஆண்டவருடைய ஆற்றல் நம்மிலே உண்டு என்பதை இயேசுவைப் போல உணர்ந்து, நாம் நம்பிக்கையோடு வாழவும், வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டவும் இறைவனிடம் வரம் கேட்டு செபிப்போம்.

 இறைவேண்டல் 

அன்பே இறைவா!  நம்பிக்கை தரும் நாயகனே! வலுவிழந்த வேளைகளில்  எம்மைப் பின்னுக்குத் தள்ளும் உலகை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வென்றிட உமது ஆற்றலைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 13 =