மனம் மாறி நிறைவாழ்வு பெற்றிட தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்; I: 1 யோ:  3: 22 - 4: 6; II : திபா 2: 7-8. 10-11; III: மத்:  4: 12-17, 23-25

மனிதகுலம் மனமாற்றம் அடைந்து மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்  ஆண்டவர் இயேசு இந்த மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தார். மனமாற்றம் அடைந்து கடவுளின் அருளை நிறைவாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இறைவனாகிய  இயேசு இம்மண்ணுலகில் பிறந்தார். எனவேதான் திருக்காட்சிப் பெருவிழாவுக்கு அடுத்தநாள் ஆண்டவர் இயேசு இறையரசை  போதித்ததைப் பற்றி வாசிக்கிறோம்.
ஆண்டவர் இயேசு இறையரசை அறிவித்த நல்ல ஆசிரியராகவும் நோயினாலும் பேயினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வளிக்கும் நல்ல மருத்துவராகவும் விளங்கினார்.

இறைவன் மனிதனை தேடி வந்ததது  மனிதனின் வாழ்வு மாறவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தான். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். புதிய ஆடை புதிய உணவு புதிய பயணம் போன்றவற்றை இவ்விழாக்காலங்களில் செய்கிறோம். பல நேரங்களில் அந்த விழாக்கள் வெறும் கொண்டாட்டங்களாகவும் வெற்று சடங்காகவும் மாறிவிடுகின்றன. ஆனால் அந்த விழாக்கள் உணர்த்தும் சிந்தனை என்னவென்றால் மனமாற்றம். பல நேரங்களில் கொண்டாட்டங்களை கொண்டாடிவிட்டு இயேசு பிறப்பு செய்தி கொண்டு வந்த செய்தியை மறந்து விடுகிறோம். எனவே இந்த நாளில்  இயேசு மனம் மாறி நற்செய்தியை நம்பி மீட்புப் பெற அழைப்பு விடுக்கிறார். அவர் நமக்கு  ஒளியாக வழியாக இருந்து வாழ்வில் அனைத்து சாதனைகளையும் புரிந்திடத் துணையாக இருந்து வருகிறார். கடவுளுடைய அருள் நமக்காக காத்திருக்கிறது. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படுவது மனமாற்றம்.

இந்தப் புதிய ஆண்டின் புதிய வாரத்தில் இருக்கின்ற நாம் புதுமையைத் தேடி பயணமாவோம். கடந்த ஆண்டில் நாம் தூக்கி வந்த தேவையற்ற சிந்தனைகள், செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள், மனநிலை போன்றவற்றை முற்றிலும் அகற்றி ஒளி நிறைந்த வாழ்வு வாழ இயேசுவிடம் நம்மை முழுவதும் ஒப்படைப்போம். இயேசுவின் போதனைகளைக் கேட்டு நம்பிய அனைவரும் புதுவாழ்வு பெற்றனர். இயேசுவின் போதனைகளை கேட்டு மனமாறதவர்கள்  கடவுளின் அருளை இழந்தனர்.  

இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் நம்முடைய வாழ்வை புதிதாகத் தொடங்குவோம். மனமாற்றமுள்ள தூய வாழ்வு வாழ முன்வருவோம். அப்போது நிச்சயமாக இந்தப் புதிய ஆண்டு நமக்கு ஆசீர்வாதத்தின் ஆண்டாகவும் பாதுகாப்பைத் தரும் ஆண்டாகவும் அமைதி அளிக்கும் ஆண்டாகவும் திடப்படுத்தும் ஆண்டாகவும் கடவுளின் அருளை நிறைவாகத் தரும் ஆண்டாகவும் இருக்கும்.

எனவே இனி வரும் காலங்களில் இறைவனை மையமாகக்கொண்டு வாழ முற்படுவோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஆண்டவரின் வருகைக்காகத் தயாராக இருக்கும் பொழுது அவர் தரும் மீட்பினையும் அருளையும்  நிறைவாகப் பெறமுடியும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவின் திருத்தொண்டராக செயல்பட அழைக்கப்படுகின்றார். திருமுழுக்கு என்ற அருள்சாதனத்தின்  வழியாக இறையரசின் உறுப்பினர்களாக மாறுகிறோம். உறுதிப்பூசுதல் வழியாக இறையரசை பரப்புவதில் உரிமை பெறுகிறோம். எனவே இறையரசின் மதிப்பீடுகளை நாம் வாழ்ந்து பிறரும் வாழ்ந்திட நம் மனமாற்றமுள்ள வாழ்வு உதவி செய்ய வேண்டுமாய் நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோம்.

 இறைவேண்டல்
 வல்லமையுள்ள இறைவா! இறையரசின் மதிப்பீடுகளை வாழ்ந்து மனமாற்றமுள்ள சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 0 =