அவரது விண்மீன்! | யேசு கருணா | Sunday Reflection | Epiphany


ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

I. எசாயா 60:1-6 II. எபேசியர் 3:2-3அ,5-6 III. மத்தேயு 2:1-12

கடைசியா எப்போ நட்சத்திரம் பார்த்தீங்க? தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு அண்ணாந்து பார்க்கும் திருப்பாடல் ஆசிரியர், 'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?' (திபா 8:3) என்று வியந்து பாடுகின்றார். எபிரேயத்தில் 'கோகாவ்,' கிரேக்கத்தில் 'அஸ்டேர்' என அழைக்கப்படும் விண்மீன் அல்லது நட்சத்திரம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. பண்டைக்காலத்தில் வானுடல்கள் (கதிரவன், நிலா, நட்சத்திரங்கள்) கடவுளர்களாக வணங்கப்பட்டன. பகலில் ஒளி கொடுக்கின்ற கதிரவன் மண்ணுலகில் வாழும் தாவரங்களுக்கு உயிர் கொடுக்கிறது. இரவில் வலம் வரும் நிலா பயணத்திற்கும் ஓய்வுக்கும் வெளிச்சம் தருகிறது. ஆனால், விண்மீன்களே அன்று முதல் இன்று வரை மனிதர்களுக்குப் பெரிய ஈர்ப்பாக இருக்கின்றன. இவற்றைச் சுற்றி நிறைய புனைகதைகளும் மரபுக் கதைகளும் உள்ளன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு மின்விளக்குகள் வந்தவுடன் வான் பார்க்கும் பழக்கம் வெகுவாகவே குறைந்துவிட்டது. சிறிய வயதில் நிலாவுடன் ஓடிய பொழுதுகள், நம் அன்புக்குரியவரின் முதலெழுத்தை நட்சத்திரக் கூட்டங்களில் தேடிய பொழுதுகள் மறக்க முடியாதவை.

எகிப்தியர்கள், அசீரியர்கள், மற்றும் பாபிலோனியர்கள் வானவியலை மிகவே வளர்த்தனர். நட்சத்திரங்களின் நகர்வை அறிவதற்கான நுணுக்கத்தைக் கற்றிருந்தனர். விண்மீன்களை வழிபடவும் செய்தனர். இறந்த நம் முன்னோர்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டு மறு உலகிற்குச் சென்றனர். மறுவுலகின் ஒளி இந்த உலகத்திற்கு வருகின்ற துவாரமே நட்சத்திரம் என்கின்றனர் செல்டிக் நாகரீக மக்கள். விவிலியம் வான்கோள்கள் வழிபாட்டை எதிர்க்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் சமகாலத்தில் வழிபடப்பட்ட வான்கோள்கள் மேல் அதிகம் நாட்டம் கொண்டிருந்தனர். இதைத் தடுக்கவே, ஆண்டவராகிய கடவுளால் படைக்கப்பட்டவையே வான்கோள்கள் என்றும், அனைத்துக் கடவுளர்களும் தங்கள் கடவுளுக்குக் கட்டப்பட்டவர்கள் என்றும் படைப்புக் கதையாடலை உருவாக்குகின்றனர்.

ஏன் இவ்வளவு நீளமான முன்னுரை? 'விண்மீன்' - இதுதான் இன்றைய திருநாளின் மையமாக இருக்கிறது. 'விண்மீன் வழிநடத்த, உம் திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர்' என்று இன்றைய நாளின் சபை மன்றாட்டு தொடங்குகிறது. 'அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தோம்' என்று தங்களின் தொடக்கத்தையும் இலக்கையும், 'கண்டோம், வந்தோம்' என்னும் இரு சொற்களில் பதிவு செய்கின்றனர் கீழ்த்திசை ஞானியர். 'விண்மீன்' அவர்களுக்கு முன்னே செல்கின்றது. 'விண்மீன்' அவர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீனைப் புரிந்துகொள்வதற்குப் பின்புலமாக முதல் ஏற்பாட்டில் உள்ள மூன்று விண்மீன் பாடங்களைப் புரிந்துகொள்வோம்: (அ) ஆபிரகாமின் விண்மீன், (ஆ) யோசேப்பின் விண்மீன், மற்றும் (இ) பிலயாமின் விண்மீன்.

(அ) ஆபிரகாமின் விண்மீன் (தொநூ 15:5). நிகழ்வின்படி ஆபிராம் (ஆபிரகாம்) தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி ஆண்டவர் கட்டளையிட்டபடி கானானில் குடியேறுகின்றார். 'உனக்கு ஒரு மகன் பிறப்பான்' என்னும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆண்டவர் காலம் தாழ்த்துவதாக எண்ணி, தானே தன் அடிமை எலியேசரை உரிமை மகனாக எடுத்துக்கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டுகின்றார். அந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமுக்குக் காட்சி தருகின்றார். கூடாரத்திலிருந்து ஆபிராமை வெளியே அழைத்து வருகின்ற கடவுள், 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்று மொழிகின்றார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்' (15:6) எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர். இந்த நிகழ்வு பகலில் நடந்ததாகவும், பகலிலும் ஆபிராம் விண்மீனைக் கண்டது நம்பிக்கையால்தான் எனப் பதிவு செய்கின்றது தால்முத் இலக்கியம். ஆபிரகாமின் விண்மீன் அவருக்கு நம்பிக்கை தருகிறது.

(ஆ) யோசேப்பின் விண்மீன் (தொநூ 37:9). நிகழ்வில் யாக்கோபு மிகவும் நேசித்த யோசேப்பு என்னும் இளவல் தன் வீட்டில் உள்ள அனைவரிடமும் தான் கண்ட இரண்டாவது கனவை இப்டிப் பகிர்கின்றார்: 'நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்.' இக்கனவுக்கு விளக்கம் தருவது போல கேள்வி ஒன்றைக் கேட்கின்றார் யாக்கோபு: 'நானும், உன் தாயும் உன் சகோதரர்களும் தரை மட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?' எனக் கேட்கின்றார். இக்காரியத்தை தம் மனத்தில் கொள்கின்றார் (37:10-11). யோசேப்பின் விண்மீன் யோசேப்புக்கு எதிர்நோக்கைத் தருகிறது.

(இ) பிலயாமின் விண்மீன் (எண் 24:17). இஸ்ரயேல் மக்களின் பாலைவனப் பயணத்தில் அவர்களை மோவாபு அரசர் பாலாக்கு எதிர்கொள்கின்றார். மக்கள்மேல் வெற்றி கொள்வதற்கு கடவுளர்களின் ஆற்றலைப் பயன்படுத்தினால்தான் இயலும் என நினைக்கின்ற அவர், பிலயாம் என்னும் இறைவாக்கினரை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கும்படி கட்டளையிடுகின்றார். ஆனால், ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிலயாம், இஸ்ரயேல் மக்களை சபிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆசி கூறுகின்றார்:  'யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும். அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்!' மெசியா பற்றிய முதல் முன்னறிவிப்பாக இந்த இறைவாக்கு புரிந்துகொள்ளப்படுகிறது. பிலயாமின் விண்மீன் பிறையை நசுக்கும் அடையாளமாக முன்னுரைக்கப்படுகின்றது.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளை ஒருங்கே இணைத்துப் பார்க்கும்போது, ஆபிராமின் விண்மீன் நேரடியாக் காண்கின்ற ஒன்றாக இருக்கிறது. யோசேப்புக்கு அது கனவில் தோன்றும் ஒரு வார்த்தைப் படமாக இருக்கிறது. பிலயாமுக்கு அது ஓர் உருவகமாக உள்ளது.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:1-12), கீழ்த்திசை ஞானியருக்குத் தோன்றுகின்ற விண்மீன் முதலில் வார்த்தைப் படமாக, உருவகமாக ஞானியரின் உள்ளத்தில் தோன்றுகிறது. பின்புதான் நேரடியாக அவர்கள் அந்த விண்மீனைக் கண்டுகொள்கின்றனர். ஆக, உள்ளத்தில் விண்மீன் தோன்றாதவரை வெளியில் உள்ள விண்மீனை நாம் அடையாளம் காண இயலாது. அன்றைய நாளில் எல்லாரும் வானில் தோன்றிய அந்த வித்தியாசமான விண்மீனைக் கண்டிருப்பார்கள். ஏரோது, மறைநூல் அறிஞர்கள், எருசலேம்வாழ் மக்கள் என அனைவரும் விண்மீனைக் கண்டனர். ஆனால், 'அவரது விண்மீன்' அவர்கள் உள்ளத்தில் தோன்றாததால், வெளியே உள்ள விண்மீனை அவர்களால் அடையாளம் காண இயலவில்லை.

'அவரது விண்மீனை' அடையாளம் காண நாம் என்ன செய்ய வேண்டும்?

(அ) பயன்பாட்டு மனநிலையிலிருந்து விடுபடுவது

அது என்ன பயன்பாட்டு மனநிலை? கதிரவன் பகலில் ஒளி கொடுக்கிறது. இரவில் நிலா ஒளி கொடுக்கிறது. ஆக, இவற்றால் நமக்குப் பயன் உண்டு. ஆனால் விண்மீன்கள் இவற்றைப் போல ஒளி தருவதில்லை. விண்மீன் ஓர் அழகுப் பொருளே அன்றி, பயன்பாட்டுப் பொருள் அல்ல. பயன்படாத எதையும் உன்னுடன் வைத்துக்கொள்ளாதே! எனக் கற்பிக்கிறது இன்றைய உலகம். அதனால்தான், உறவுகளும் பயன்தரவில்லை என்றால் தூக்கி எறியப்பட்டு மறந்து போகப்படுகின்றன. வானில் தோன்றிய விண்மீனைக் கண்டதாலும், அதைக் கண்டு புறப்பட்டு வந்ததாலும் ஞானியருக்கு என்ன கிடைத்தது? வாழ்வின் முக்கியமானவை பயன்பாட்டையும் கடந்தவை என்று உணர்ந்தனர் இந்த ஞானியர். ஏரோது, மறைநூல் அறிஞர்கள், மற்றும் எருசலேம்நகர் மக்கள் பயன்பாட்டு மனநிலையில் இருந்ததால்தான், விண்மீனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) லாஜிக் இல்லா மேஜிக்

நம் வாழ்வின் இயக்கங்கள் அனைத்தும் 'லாஜிக் படியே நடக்க வேண்டும்' என நாம் நினைக்கின்றோம். ஒரு சிறிய நட்சத்திரத்தில் விண்மீனைக் காண்பதும், ஒரு குழந்தையில் யூதர்களின் அரசரைக் காண்பதும் லாஜிக்குக்குள் அடங்குவதில்லை. இவர்களது நீண்ட பயணத்தையும் விந்தையான ஆர்வத்தையும் கண்டு ஏரோது சிரித்திருப்பார். அனைத்தையும் லாஜிக் கொண்டு பார்ப்பவர்கள், லாஜிக்குக்குப் புறம்பாக ஒன்று நடக்கும்போது, அதைத் தடுத்து நிறுத்தி, தங்கள் லாஜிக்கைத் தக்க வைக்க நினைப்பர். அதைத்தான் ஏரோதும் செய்கின்றார். குழந்தையில் அரசரைக் காண்பதற்குப் பதிலாக, குழந்தையைக் கொன்றுவிட்டால் தானே அரசர் என்பதை உறுதி செய்துவிடலாம் என நினைக்கின்றார். ஞானியர் புத்திசாலிகள்! அவர்கள் விண்மீனின் நகர்வை அறிந்திருந்ததுபோல, தங்கள் உள்ளுணர்வையும் அறிந்தவர்களாக இருந்தனர். ஆகையால்தான், கனவு போல எழுந்த உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாக நாடு திரும்புகின்றனர். உள்ளுணர்வு லாஜிக்கிற்குள் வருவதில்லை. அது மேஜிக் என்னும் தளத்தில் செயல்படுகிறது.

(இ) உறுதியற்றவற்றைத் தழுவிக்கொள்வது

உறுதியான தங்கள் பாதுகாப்பு மற்றும் ஊரை விட்டு, உறுதியற்ற, நகரும் விண்மீனைத் தொடர்கின்றனர் ஞானியர். உறுதியான ஏரோதுவைக் கண்டு, 'நீரே யூதர்களின் அரசர்!' என்று பாடிப் பரிசில் பெற்று தங்கள் நாடு திரும்புவதை விட்டு, வலுவற்ற குழந்தையைக் கண்டு, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள். நம் வாழ்வில் நாம் அனைத்தையும் உறுதிசெய்துகொள்ளவே விரும்புகிறோம். 'இன்று நான் இப்படி இருக்கிறேன். நாளை இப்படி இருப்பேன் அல்லது இருக்க வேண்டும். நாளை நான் இப்படி இருக்க வேண்டும் என்றால், நான் இன்று இப்படி இருக்க வேண்டும்' என்று அனைத்தையும் உறுதியாக்கிக்கொள்ள நினைக்கின்றோம். கதிரவன் போல, நிலா போல அனைத்தும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்தான், பகலிலும் பார்க்க இயலும் விண்மீன்களை நம்மால் காண இயலாமல் போய்விடுகிறது.

'அவரது விண்மீனை' அடையாளம் கண்டவுடன் என்ன ஆகும்? நாம் அவரது விண்மீனாக மாறிவிடுவோம். என்ன ஆச்சர்யம்! கீழ்த்திசை ஞானியர் அவரது விண்மீனைக் கண்டவுடன் அவரது விண்மீனாக மாறுகின்றனர். எப்படி? குழந்தையின் முன் படிந்த தங்கள் கால்கள் அரசன்முன் படியக் கூடாது என்றும், அமைதியின் அரசருக்கு வணங்கிய தலை, பொறாமை உள்ளம் கொண்ட ஏரோதுவை வணங்கக் கூடாது என்று வேறு வழி செல்கின்றனர். இதுவே அவர்கள் பெற்ற மாற்றம்.

முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-6) அப்படியொரு மாற்றத்தையே வாசிக்கின்றோம். 'எருசலேமே! எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!' என்று எருசலேமைத் தட்டி எழுப்புகின்றார் இறைவாக்கினர் எசாயா. பாபிலோனிய அடிமைத்தனத்தின் இருளிலும், குளிரிலும், இறப்பிலும் நின்ற மக்கள், அடிமைகளாக வழிகளில் இழுத்துச் செல்லப்பட்ட மக்கள், தங்கள் பொன்னும், வெள்ளியும், வீடுகளும், கால்நடைகளும், விளைநிலங்களும் எதிரிகளால் சூறையாடப்பட்டுப் பறித்துக்கொள்ளப்பட்ட மக்கள், ஆண்டவரின் தலையீட்டால், 'அவரது விண்மீனாக' மாறுகின்றனர். இருள் ஒளியாக மாறுகின்றது. இழுத்துச் செல்லப்பட்டவர்கள் தூக்கி வரப்படுகின்றனர். சொத்துகள் மீண்டும் வருகின்றனர். மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பதிலாக ஒட்டகத்திரள் கிடைக்கின்றது. சேபா நாட்டும் பொன்னும் நறுமணப் பொருளும் எருசலேம் நோக்கி வருகின்றது. என்ன ஒரு தலைகீழ் மாற்றம்!

'அவரது விண்மீனை' தமஸ்கு நகர் செல்லும் வழியில் கண்ட பவுல் (சவுல்), தானே 'அவரது விண்மீனாக' மாறிய நிகழ்வை எபேசு நகரத் திருச்சபைக்கு எடுத்துச் சொல்கின்றார். தான் மட்டுமல்ல, யூதர்கள் மட்டுமல்ல, மாறாக, புறவினத்தாரும் - அதாவது, எபேசு நகர மக்களும் - இறைவெளிப்பாட்டின் வழியாக, கிறிஸ்து இயேசுவின் வழியாக, உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினருமாக மாறினர் என எழுதுகின்றார். ஆக, கிறிஸ்து வழியாக நாம் அனைவரும் 'ஆண்டவரின் விண்மீனாக' மாறியுள்ளோம்.

ஆபிரகாம் எண்ணற்ற விண்மீன்களைக் கண்டார். யோசேப்பு பதினொரு விண்மீன்களைக் கண்டார். பிலயாம் ஒரே விண்மீனைக் கண்டார். கீழ்த்திசை ஞானியரோ, அந்த ஒற்றை விண்மீனே பெத்லகேம் குழந்தை என்று கண்டனர். இன்றும் 'அவரது விண்மீன்' தோன்றுகிறது. நாம்தான் மின்விளக்குகளைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, மெழுகுதிரிகளைப் பார்த்து அழுதுகொண்டே விண்மீனைப் பார்க்கத் தவறிவிடுகின்றோம். 'அவரது விண்மீனை' காணும் அனைவரையும் அவர், 'அவரது விண்மீனாகவே' மாற்றுகிறார். ஏனெனில், அவரே நம் அரசர்! (பதிலுரைப்பாடல், காண். திபா 72).

 

__________  

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

Add new comment

8 + 0 =