இறைவனின் அடிமையானாள் இன்று நமக்கு பரிந்து பேசுகிறாள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


அன்னை மரியா இறைவனின் தாய் பெருவிழா 

I:எண் 6:22-27
II : தி.பா 66:2-3,5,6,8
III: கலா 4:4-7
IV: லூக் 2:16-21

அன்புக்குரிய இறைமக்களே உங்கள் அனைவரையும் இப்புதிய ஆண்டில் இறைவார்த்தைப் பகிர்வின் வழியாக சந்திப்பதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆண்டின் முதல்நாளே அன்னையின் திருவிழாவோடு நாம் தொடங்குவதே இறைவன் நமக்கு அளித்த மிகப்பெரிய ஆசிர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம் இன்று நாம் இறைவனின் தாய் அன்னை மரியா என்ற பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். இறைவனின் தாய் என்பது இயேசுவின் தாயான கன்னி மரியாவின் சிறப்பு பெயர்களுள் ஒன்றாகும். இதன் மூலச்சொல்லான தியோடோக்கோஸ் என்பதற்கு கடவுளைச் சுமந்தவர் என்பது பொருள். மகனாகிய கடவுளுக்கு இவ்வுலகில் பிறப்பு அளித்தவர் என்பதால், மரியா 'கடவுளின் தாய்' அல்லது 'இறைவனின் தாய்' என்று அழைக்கப்படுகிறார். 

அன்னை மரியாவை முதன்முதலில் ஆண்ட ரின் தாய் என்று அழைத்தவர் எலிசபெத். உறவினரான எலிசபெத் முதிர்ந்த வயதில் கருவுற்றதை அறிந்த மரியா அவருக்குப் பணிவிடைச் செய்யச் சென்ற போது தூய ஆவியாரால் நிரம்பப் பட்டவளாய் " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?  "  என்று கூறியதை நாம் லூக்கா (1:41) லே வாசிக்கக் கேட்கிறோம். இந்த விவிலிய வார்த்தையைவிட  நமக்கு வேறு சான்றுகள் தேவையில்லை மரியா ஆண்டவரின் தாய் என்பதற்கு.

ஆனால் மரியாவோ தான் ஆண்டவரின் தாய் என்பதில் பெருமிதம் அடையவில்லை. பிறரை ஏளனம் செய்யவுமில்லை. அவர் கபிரியேலின் வார்த்தைகளைக் கேட்டு இறைசித்தத்திற்குத் தன்னை அர்ப்பணித்த போது " இதோ ஆண்டவரின் அடிமை " லூக் (1:38) என்றார். ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய பாட்டிலே கூட " 
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். (லூக் 1:48) என்று தன்னை ஒரு அடிமை நிலைக்கு தாழ்த்திக்கொண்டாள். 

இத்தருணத்தில் எனக்கு ஒரு சிறு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு பெரியவர் அவ்வழியே வந்த சிறுவனிடம் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அம்மாவைப் பற்றி கேட்டார். அம்மா என்ன செய்கிறார் எனப் பெரியவர் கேட்க சும்மா இருக்கிறார் என அவன் பதிலளித்தான். இப்பதிலைக் கேட்டவுடன் அப்பெரியவர் மீண்டுமாக அம்மா தூங்கப் போகும் நேத்தையும் காலையில் கண்விழிக்கும் நேரத்தையும் கேட்டார். அப்பையனோ அம்மா எல்லாரும் தூங்கின பின்பு தான் தூங்குவாங்க. எல்லாரும் கண்விழிக்கும் முன் எழும்பி விடுவாங்க என்றான் . சும்மா இருக்கிற அம்மா நாள் முழுதும் தூங்க வேண்டியதுதானே என்ற பெரியவர் கேட்டபின் தான் தன் அம்மா காலையிலிருந்து இரவுவரை தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைப்பதை அவன் உணர்ந்தான்.

ஆம். அன்புக்குரியவர்களே  நம் அம்மாக்கள் எல்லாம் சம்பளமில்லாத பணியாள் போல அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார்கள். அதற்காக அவர்கள் பணியாளர்களா இல்லை. நம்மை உருவாக்குபவர்கள். நம்மைக் கண்டித்து, தட்டிக் கொடுத்து, தேவையான நேரங்களில் நமக்காக பரிந்து பேசவும் செய்பவர்கள் தான் தாய்மார்கள்.   ஆகவே தான் House wife என்ற சொல்வழக்கு இப்போது மாறி Home maker என அழைக்கப்படுகிறது.

அப்படித்தான் அன்னை மரியா தன்னை அடிமையாகத் தாழ்த்தினார். ஆகவே இறைவனின் அன்னையானார். இயேசுவைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். இயேசு மரி யோசேப்பு குடும்பத்தின் பணிகளைச் சிறப்பாகச் செய்தார். தன் மகனோடு கல்வாரி வரை நடந்து இதோ உன் தாய் என உலகிற்கே தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டார். இன்று இறைவனுக்குத் தாயாக அருள் தருபவராகவும் நமக்குத் தாயாக பரிந்து பேசுபவளாகவும் திகழ்கிறார். அத்தகைய அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவரைப் போலவே இறைத்திட்டத்திற்குப் பணிந்து, பிறருக்கு பணிவிடை செய்பவர்களாகவும் பரிந்து பேசுபவர்களாகவும் மாறும் போது தான் அவரின் பிள்ளைகளாக மாறமுடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களே என் தாயும் சகோதரர்களும் என்றார் இயேசு. நாமும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினால் இறைவனுக்கு தாயாகவும் சகோதரர்களாகவும் மாறமுடியும்.

பிறக்க இருக்கும் இப்புத்தாண்டு நமக்கு இறைவனின் அருளையும், அன்னையின் உடனிருப்பையும் தந்து இறைவிருப்பத்தை நிறைவேற்றும் பணியாளர்களாய் நம்மை மாற்றட்டும்.

இறைவேண்டல்

ஆசிர் வழங்கும் இறைவா!  இப்புதிய ஆண்டில் உமது ஆசிரால் நாங்கள் நிரப்பப்பட்டு, அன்னையின் பிள்ளைகளாய் உம் விருப்பத்தை நிறைவேற்றுவோமாக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 1 =