தூய ஆவியாரின் தூண்டலோடு இறைவனை உணரத்தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் 
I : 1யோ:  2: 3-11
II: திபா 124: 2-3. 4-5. 7-8
III: லூக் 2:22-35

மீட்பு வரலாற்றில் தூய ஆவியாரின் பங்கு மிகப்பெரியது என்பதை நாம் விவிலியத்தில் அறிந்துள்ளோம். தொடக்கத்திலே உலகம் வெறுமையாய் இருந்த போதே அசைவாடிக்கொண்டிருந்தார் ஆவியானவர் என தொடக்கநூலில் நாம் வாசிக்கிறோம். இயேசுவுடைய பிறப்பிலும் தூய ஆவியாரின் செயல்பாடு பெரும் பங்கு வகிக்கிறது. மரியா கருவுற்றது தூய ஆவியால்தான் ( லூக் 2:35). அதே தூய ஆவியால் தூண்டப்பட்டதாலேயே எலிசபெத் தன்னைச் சந்திக்க வந்த மரியாவை ஆண்டவரின் தாய்  பாராட்டினார் (லூக் 1:41). தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட சக்கரியா இறைவனுடைய மீட்புத் திட்டத்தை மகிழ்ந்து பாடலாகப் பாடினார் என லூக் 1:66-78 ல் நாம் வாசித்துத் தியானிக்கிறோம். 

அவ்வரிசையில் இறைமகனின் வருகைக்காக காத்திருந்த சிமியோன் தூய ஆவியால் தூண்டப்பட்டு குழந்தை இயேசுவை கையிலேந்தி இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார் (லூக் 2: 22-35). அவருக்கு பிறந்த குழந்தை இயேசுவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது யோசேப்பையோ மரியாவையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரோ பல ஆண்டுகளாக மெசியாவைக் காணாமல் தான் இறக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு கோவிலிலேயே காத்துக்கிடந்தார். அந்நிலையில் குழந்தைக்கு கோவிலில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வந்த இடத்தில் தூய ஆவியார் அருளிய உள்ளுணர்வால் மெசியாவைக் கண்டடைந்தார் சிமியோன்.

மேற்கூறப்பட்ட இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் மிக முக்கியச் செய்தி யாதெனில் இறைவனை மனதால் உணர தூய ஆவியாரின் துணை நமக்கு மிக அவசியம் என்பதே. பல வேளைகளில் மணிக்கணக்கில் இறைவேண்டல் செய்கிறோம். அருட்சாதனங்கள், தவ முயற்சிகள், தான தருமங்கள் எல்லாம் செய்து இறைவனை அறியவும் உணரவும் முற்படுகிறோம். பல புனிதப் பயணங்களை மேற்கொள்கிறோம். 

இவை எல்லாம் செய்தாலும் தூய ஆவியாரின் தூண்டுதல் இல்லையெனில் கடவுளைக் காண இயலாது. ஏனெனில் கடவுளை அறிய வேண்டுமென்ற ஆவலை நமக்குத் தருபவரே அத்தூய ஆவிதான். அவரே கடவுளைத் தேட நம்மைத் தூண்டுகிறார். கண்டடையவும் வழிகாட்டுகிறார்.
எனவே தூய ஆவியாரின் துணையை வேண்டுவோம். அவர் நமக்குள் இருந்து செயலாற்றுவார். நமக்குள் இருந்து நமக்காக செபிப்பார். நாமும் சிமியோனைப் போல சக்கரியாவைப் போல எலிசபெத்தைப் போல கடவுளை நம் வாழ்வில் கண்டுணர்ந்து அவர் புகழ் பாடுவோம் என்பதில் ஐயமில்லை. 

 இறைவேண்டல் 

அன்பு இறைவா உமது தூய ஆவியாரை எமக்குத் தாரும். அவருடைய தூண்டுதலால் நாங்கள் உம்மை எம்முள் உணர்ந்து புகழ்வோமாக. ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 3 =