திருக்குடும்பங்களாக மாறுவோம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்குடும்ப விழா  
I : 1சாமு:1: 20-22,24-28
II: திபா: 84: 1-2. 4-5. 8-9
III: 1யோவா:   3: 1-2,21-24
IV : லூக்:  2: 41-52

மனித வாழ்வில் குடும்பம் மிக முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் தான் அனைத்து நன்மைகளும் ஊற்றெடுக்கிறது. குடும்ப வாழ்வு இல்லையென்றால் மனுக்குலமே இல்லை.  எனவேதான் குடும்பத்தை ஒரு குட்டித் திருச்சபை என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழும் பொழுது அந்த குடும்பம் சிறந்த திருஅவையாக மாறுகிறது. இந்த நாளில் நம்முடைய தாய்த்திருஅவையோடு இணைந்து திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசு மரி சூசை மூவரும் ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். குடும்ப வாழ்வில் குடும்பத்தலைவர் சூசையப்பரின் மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும்.

சூசையப்பர் தன்னுடைய வாழ்விலே கடவுளின் வார்த்தைகளை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டவராக வாழ்ந்தார். கடவுளின் திருவுளத்திற்குத் தன்னையே முழுவதுமாகக் கையளித்தார். ஒவ்வொரு குடும்பத் தலைவரும் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும். யூத சமூகத்தில் குடும்பத்தலைவர் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் பலி செலுத்துவதாக குறிப்புகள் இருக்கின்றன. இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அந்த குடும்பத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு பொறுப்பாவார் என்பதையே. ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தாலும் அவருக்கு வழிகாட்ட கடவுள் சூசையப்பரைத் தான் தேர்ந்தெடுத்தார். எனவே ஒரு குடும்பம் திருக்குடும்பமாக மாற ஒவ்வொரு குடும்பத் தலைவரும் சூசையப்பராக மாற வேண்டும். சூசையப்பர் கொண்டிருந்த இறைநம்பிக்கை, கடவுளின் திருவுளத்திற்குத் தன்னையே கையளிக்கும் மனநிலை, தன்னுடைய மனைவி மரியாவை அன்போடு ஏற்கும் மனநிலை,  தன்னுடைய மனைவியின் துன்பத்தில் முழுமையாக உடனிருக்கும் மனநிலை போன்றவற்றை வாழ்வாக்க முயற்சி செய்யவேண்டும். திருமணத்திற்கு முன்பாக மரியா கருவுற்றிருந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் சூசையப்பர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். இதை சுட்டிக் காட்டுகிறது என்றால், பெண்மையை எந்தளவுக்கு அவர் மதித்தார் என்பதைச்  வெளிப்படுத்துகிறது. எனவே சிறப்பாக குடும்ப வாழ்வில் திருக்குடும்பமாகத் திளைத்திட ஒவ்வொரு குடும்பத் தலைவரும் மற்றொரு சூசையப்பராக மாற வேண்டும். 

குடும்ப வாழ்வில் குடும்பத் தலைவியின் பொறுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு குழந்தை கடவுளுக்கு உகந்த குழந்தையாக மாற வேண்டும் எனில் தாயின் வளர்ப்பு மிகவும் அவசியம். நம்முடைய குடும்ப வாழ்வில் திருக்குடும்பத்தின் மதிப்பீடுகளை பெறவேண்டுமென்றால் ஒவ்வொரு குடும்பத் தலைவியும் அன்னை மரியாவைப் போல மாற வேண்டும். அன்னை மரியாள் தன்னுடைய கணவருக்குக் கீழ்படிந்தார். எகிப்துக்கு குழந்தையை கூட்டிக் கொண்டு செல்ல வேண்டுமென்று சூசையப்பருக்கு கடவுளின் தூதர் கனவில் வெளிப்படுத்திய பின்பு தன்னுடைய மனைவியை எகிப்துக்கு  செல்ல அழைக்கின்றார். ஒரு குழந்தையை பெற்ற தாய்க்கு உடனே பயணம் செய்வதென்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் தன் கணவரின் வார்த்தையை மதித்து கீழ்ப்படியக் கூடியவராக மாறுகிறார். இறுதியில் எகிப்துக்கு கணவரோடு  நடந்து செல்கிறார். இப்படிப்பட்ட கீழ்ப்படிதல் ஒவ்வொரு மனைவிக்கும் இருக்க வேண்டும். கணவன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். கணவரும்   மனைவியின் நம்பிக்கைக்கு உண்மை  உள்ளவராக இருக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய குடும்பம் திருக்குடும்பமாக மாறும். அன்னை மரியாள் தான் பெற்ற மகனுக்குச் சிறந்த தாயாக விளங்கினார். அதிலும் குறிப்பாக கருவில் சுமந்தது முதல் கல்வாரியில் பாவக்கழுவாயாக கையளித்தது வரை தன் மகனோடு உடனிருந்து திடப்படுத்தினார். தாய் என்பவர் தான் பெற்ற பிள்ளைகளோடு உடனிருப்பவர். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் துணிவோடு பயணிக்க வழிகாட்டுபவர். அப்படிப்பட்ட தாயாகத் தான் அன்னை மரியாள் விளங்கினார். அன்னை மரியா கொண்டிருந்த இறை நம்பிக்கை,  இறைத்திருவுளத்திற்காக தன்னையே கையளிக்கும் மனநிலை, பிறருக்கு உதவி செய்யும் மனநிலை, கணவருக்கு கீழ்படியும் மனநிலை போன்ற  நல்ல மதிப்பீடுகளை ஒவ்வொரு குடும்ப தலைவியும் வாழ்வாக்கினால் அந்த குடும்பம் ஒரு திருக்குடும்பமாக மாறும்.

குழந்தைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிய கூடிய பிள்ளைகளாக வாழும் பொழுது,   அந்த குடும்பம்  திருக்குடும்பமாக மாறும். இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் ஒரு சிறந்த மனிதராக பெற்றோருக்கும் பெரியோர்க்கும் கீழ்ப்படிந்த பிள்ளையாக வாழ்ந்தார். அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கத் தன்னை தந்தையாம் கடவுளிடத்தில் ஒப்படைத்தார். எனவே குடும்பத்திலுள்ள பிள்ளைகள் பெற்றோருக்கும் பெரியோருக்கும் கீழ்படிந்து இறை நம்பிக்கையில் நிலைத்திருக்கும் பொழுது அந்த குடும்பம் திருக்குடும்பமாக மாறும். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடினப்பட்டு பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கடைசி காலத்தில் தன் பெற்றோரைக் கண்டுகொள்ளாமல், முதியோர் இல்லத்திலும் சாலையோரத்திலும் கைவிடுவது வழக்கமாய் வருகிறது. இத்தகைய நிலை மனிதநேயத்திற்கும் மனித மாண்புக்கும் எதிரானது.   இப்படிப்பட்ட தவறை செய்கின்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயதை அடையும் பொழுது, இதே கைமாறைத்தான் பெறுவார்கள். ஏனெனில் கடவுள் நம்மைப் பார்க்கிறார். எனவே ஆண்டவர் இயேசுவைப் போல பெற்றோரை மதிக்கக் கூடியவர்களாக வாழ வேண்டும். அப்பொழுது அந்த குடும்பம் திருக்குடும்பமாக உருமாறும். 

எனவே திருக்குடும்ப விழாவில் சூசையப்பரைப் போல ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அன்னை மரியாவை போல ஒவ்வொரு குடும்ப தலைவியும் ஆண்டவர் இயேசுவைப் போல ஒவ்வொரு குழந்தையும் வாழும் பொழுது நமது குடும்பம் திருக்குடும்பமாக மாறும். அத்தகைய மனநிலையைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறந்த குடும்ப வாழ்க்கை வாழ்ந்திட, திருக்குடும்பத்தில் வாழ்ந்த இயேசு மரி சூசையின் நல்ல மதிப்பீடுகளை நாங்கள் பெற்றுக் கொள்ள உமது அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

6 + 11 =