மகிழ்ச்சியும் நன்மையும் தருவதா நமது சந்திப்பு? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் நான்காம் செவ்வாய்
I : இ.பா 2:8-14
II: திபா: 33:2-3,11-12,20-21
III : லூக்: 1:39-45

இன்றைய சமூகத்தில் பலவித சந்திப்புகளை நாம் மேற்கொள்கிறோம்.
பணியின் அடிப்படையிலான  சந்தித்தல், தேவைக்காகப் பிறரைச் சந்தித்தல் , பொழுதுபோக்கிற்காகவும் நேரத்தைக் கடத்துவதற்காகவும் சந்தித்தல் போன்று பல வகைகள் அதிலே உண்டு. ஆனால் இன்று நற்செய்தியில் வாசிக்கும் சந்திப்பு வித்தியாசமானது. அதுதான் மரியா மற்றும் எலிசபெத்தின் சந்திப்பு.

தன் தேவைக்காக பிறரைச் சந்திக்கத் துடிக்கும் மனிதருக்கு நடுவில்
தேவையில் இருக்கும் ஒருவரைத் தேடிச் சந்திப்பதோடல்லாமல் உதவி செய்யும் மனம் கொண்டவராய் சந்திக்கச் செல்கிறார் மரியா. பிறரன்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இச்சந்திப்பு.

தன்னைவிட வயதில் மிகச் சிறியவராய் இருந்தாலும் மரியாவுக்கு ஆண்டவர் அளித்த வாக்குறுதியை மதித்து "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? " எனத் தன்னையே தாழ்த்தி நின்றார் எலிசபெத். தாழ்ச்சிக்கு இலக்கணமாக விளங்குகிறது இச்சந்திப்பு.

சந்திக்கின்ற போதெல்லாம் பிறரைப் பற்றி புறணி பேசுபவர்களைப் போல அல்லாமல் ஆண்டவரையும் அவர்தம் அருஞ்செயல்களையும் பற்றி பகிர்ந்து, மகிழ்ந்து,  நம்பிக்கையை ஆழப்படுத்திய சந்திப்பு தான் மரியா - எலிசபெத்தின் சந்திப்பு. 

இவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், ஆசிரையும் பெற்று தந்தது. மரியாவின் குழப்ப மனநிலையை மாற்றுபவராக எலிசபெத்தையும், எலிசபெத்தின் முதிர்வின் காரணமான இயலாமைக்கு கைகொடுப்பவராக  மரியாவையும் மாற்றியது இந்த சந்திப்பு. நமது சந்திப்புகள் எத்தகையது எனச் சிந்திப்போம். மகிழ்ச்சியையும், இறை ஆசிரையும் நன்மையான காரியங்களையும் பகிரட்டும் நமது சந்திப்புகள். 

இறைவேண்டல்

அன்பு இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும், பயனுள்ளவர்களாகவும் விளங்க அருள் புரியும். ஆமென்.

.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 0 =