வார்த்தைகளாலல்ல செயல்களால் கடவுளின் திருவுளத்திற்கு கீழ்படிவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் மூன்றாம் செவ்வாய்
I :செப்:  3: 1-2,9-13
II: திபா 34: 1-2. 5-6. 16-17. 18,22
III : மத்: 21: 28-32

நம் வாழ்வில் எது நடந்தாலும் அது கடவுளின் திட்டத்தின் படிதான் நடக்கிறது என்பதே நமது நம்பிக்கை. எதுவும் விபத்தல்ல. கடவுளால் முன்குறிக்கப்பட்டதே. அத்தகைய கடவுளின் திட்டம் அல்லது  திருஉளம் நம் வாழ்வில் நேரடியாக வந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்கள் மூலமாகவோ அல்லது நிகழ்வுகள், இயற்கை என பலவற்றின் மூலமாக வருகிறது. சில வேளைகளில் நமது இறைவேண்டலின் மூலமாகவும் வருகிறது. அவ்வாறு வருகின்ற இறைதிருஉளத்தை நாம் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோமா? 

ஒரு பூசாரி கோவிலுக்கு அர்ச்சனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து செல்லும் போது "பகவானே இன்று நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன். நீர் விரும்புவது மட்டுமே என் வாழ்வில் நடக்க வேண்டும் " என்று சொல்லிவிட்டு சென்றார். போகும் வழியில் சாலையில் ஒரு பிச்சைக்காரர் அசுத்தமானை நாற்றமெடுக்கும் உடையுடனும் கழுவாத தட்டுடனும்  அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட உடன் மூக்கைப் பொத்திக் கொண்டு சிறு உதவி கூட செய்யாமல் வேகமாக நடந்து சென்றுவிட்டார். அவ்வாறு வேகமாக சென்று கொண்டிருக்கும் போது கல்லில் தடுக்கி விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. உடனே எழுந்து கடவுளைத் திட்டத் தொடங்கினார். பின் அதே மனநிலையோடு அர்ச்சனையும் செய்தார்.

 இந்நிகழ்விலே கடவுளின் விருப்பதை அவர் ஏற்று அதை நிறைவேற்றினாரா என ஆராய்ந்தால் இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கிறது. உதவி தேவைப்பட்ட மனிதனை கடவுள் அவனிடம் அனுப்பினார் உதவி செய்யவில்லை. உம் விருப்பம் என் வாழ்வில் நடக்கட்டும் என்று சொன்னவர் சிறுவலியைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தத்தில் கடவுளின் விருப்பம் இதுதான் என உண்மையில் அந்த பூசாரி உணரவில்லை.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் நாம் பல சமயங்களில் இறைவனின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிடுகிறோம். அப்படியே இறைத்திட்டத்தை செயல்படுத்தினாலும் அது நமக்கு சாதகமாக இருக்கும் என எண்ணினால் மட்டுமே நாம் அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறோம். பல சமயங்களில் பின் வாங்கி விடுகிறோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு மகன்கள் ஒப்பிடப்படுகிறார்கள். முதலாவது மகன் தந்தை கொடுத்த வேலையை வார்த்தையால் நிராகரித்தார் ஆனால் செயலால் நிறைவேற்றினார். இரண்டாவது மகனோ வார்த்தையால் வாக்களித்தார். ஆனால் செயலால் நிராகரித்தார். வெறும் வாய் வார்த்தையால் நாம் கடமைகளைச் செய்திட முடியாது. மாறாக கடமைகளை நிறைவேற்ற செயல்பாடு அவசியம். அதேபோல கடவுளின் திருஉளத்தை நிறைவேற்ற வார்த்தைகளால் ஆம் என்றால் போதாது. இறுதி வரையில் உறுதியாக இருந்து நிறைவேற்ற வேண்டும். எனவே கடவுளின் திருஉளத்தை உணர்ந்து அறிந்து செயல்படுத்த விழைவோம். அதுவே நமக்கும் நிறைவைத்தரும். கடவுளுக்கும் மகிழ்வைத் தரும்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! வார்த்தையால் மட்டுமல்ல வாழ்க்கையாலும் உமது திருஉளத்தை நிறைவேற்றும் மக்களாக வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 5 =