மிகுதியாகக் கொடுக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 32 ஆம்  ஞாயிறு; I: 1 அரசர்: 17: 10-16; II : திபா: 146: 7. 8-9. 9-10; III: எபி: 9: 24-28; IV : மாற்:  12: 38-44

நம்முடைய வாழ்க்கையில் பிறருக்குக் கொடுத்து உதவுவது மிக உயர்ந்த பண்பாக கருதப்படுகின்றது. கொடுப்பதில் தான் உண்மையான மனிதமும் புனிதமும் இருக்கின்றது. இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மதத்தின் பெயராலும் சட்டத்தின் பெயராலும் மறைநூல் விளக்கங்களின் பெயராலும் செல்வங்களைச் சூறையாடும் மனநிலை கொண்டவர்களாக பரிசேயர்களும் சதுசேயர்களும்    மறைநூல் அறிஞர்களும் இருந்தனர். இரக்கச் செயல்பாடுகளுக்கு பதிலாக பலிகளை நிறைவேற்றுவதற்கும் சட்டங்களைத் தூக்கிப் படிப்பதற்கும் மட்டும் அதிக  முக்கியத்துவம் கொடுத்தனர். இதன் வழியாக  எண்ணற்ற ஏழை எளிய மக்கள் துன்பப்பட்டனர். 

செல்வந்தர்கள் கடவுளுக்கு காணிக்கை அதிகமாக கொடுப்பது ஒரு வியப்பான காரியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து கொடுக்கின்றனர். ஆனால் ஏழை எளிய மக்கள் காணிக்கை செலுத்துவது என்பது சற்று கடினமான காரியம். இருந்தபோதிலும் வழிநடத்திய தலைவர்கள் காணிக்கைச் செலுத்த வற்புறுத்தினர். காணிக்கை செலுத்த இல்லாதவர்களை பாவிகளாகச் சித்தரித்தனர். இப்படிப்பட்ட அவலநிலை இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தது.

இத்தகைய மனநிலை தவறானது என்ற ஆழமான சிந்தனையை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியின்  மூலமாக நமக்குத் தந்துள்ளார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில்  பெயருக்காகவும் புகழுக்காகவும் ஏங்கியவர்களை இயேசு கண்டிப்பதை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.  மறைநூல் அறிஞர்கள் சிறப்பான ஆடையணிந்து மக்களிடமிருந்து தங்களை உயர்ந்தவர்களாக  அடையாளப்படுத்திக் கொண்டனர். வேத நூல்களை மக்களிடம் விளக்கி,  தங்கள் திருவாய் மலர்ந்து ஜெபங்களை மணிக்கணக்காக சொல்வதைப்போல பிதற்றி மக்களை மயக்கினர். ஆனால் இயேசு இந்த மயக்கநிலை இறைவேண்டலை முற்றிலும் எதிர்ப்பவராக   இருந்தார்.  

இயேசு மறைநூல் அறிஞர்களை ஒருபோதும் பாராட்டவில்லை. மாறாக இரக்கத்தோடும் அன்போடும் இறைவனுக்கு தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாக கொடுத்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டினார். இதன் வழியாக நமக்கு இயேசு  சொல்ல விரும்பக்கூடிய செய்தி  நம்மைப் படைத்த கடவுள் உள்ளத்தை ஊடுருவக்கூடிய இறைவனாக இருக்கிறார். நம் உள்ளத்தின் எண்ணங்களை முற்றிலும்  அறிந்தவராகக் கடவுள் இருக்கிறார். நாம் காணிக்கை போடுவது முக்கியமல்ல ; மாறாக, அந்த காணிக்கையை நம் கடவுளுக்கு எந்த மனநிலையில் போடுகிறோம் என்பது தான் முக்கியம். ஏழைக் கைம்பெண் நல்ல மனநிலையில் தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாகக் கடவுளுக்கு போட்டார். ஆனால் சட்டங்களையும் சமயங்களையும் சரியாக பயன்படுத்தினால் போதும் மற்ற அனைத்து பாவங்களையும் செய்து கொள்ளலாம் என்று பேருக்காகவும் புகழுக்காகவும் காணிக்கை போட்டவர்களை இயேசு ஒருபோதும் பாராட்டவில்லை.

இயேசு காணிக்கைப் பெட்டி முன்பாக அமர்ந்து காணிக்கை போடுவதை பார்த்த பொழுது,  எண்ணற்ற செல்வர்கள் காணிக்கை போட்டார்கள். ஆனால் ''இயேசு தம் சீடரை வரவழைத்து, 'இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட
மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மாற்கு 12:43)    என்று கூறியுள்ளார்.

நமது அன்றாட வாழ்விலும் நாம் ஆண்டவர் இயேசுவுடைய  இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு சான்று பகர  அழைக்கப்பட்டுள்ளோம். நம்மால் முடிந்தவரை கடவுளுக்கும் அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல மனநிலையை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அந்த நல்ல மனநிலையை எல்லாம் வல்ல கடவுள் அறிந்தவராக இருக்கின்றார். அந்த மனநிலைதான் இயேசுவின் உண்மையான பாராட்டை நமக்கு கொடுக்கும். முதல் வாசகத்தில்  ஏழைக் கைம்பெண் எலியாவுக்கு தன்னிடம் இருந்த உணவை வயிறார உண்ண கொடுக்கிறார். எனவே கடவுள் அற்புதமாக அந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு உணவு கிடைக்கும்படி செய்தார்.    நாம் கொடுக்கின்ற பொழுது கடவுள் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பார் . அன்னை தெரசா இரக்கத்தோடு பிறருக்கு அனைத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தார். எனவே கடவுள் மென்மேலும் அவரை ஆசிர்வதித்தார். அதே போல நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருப்போம். அப்போது மிகுதியான ஆசீர்வாதத்தையும் செல்வத்தையும் கடவுளிடமிருந்து நாம்  பெற முடியும். 

 இறைவேண்டல்: 
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் எங்களிடம் இருக்கும் செல்வங்களை சுயநலத்தோடு பயன்படுத்தாமல், பிறருக்கு கொடுக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 1 =