Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாழ்ச்சியால் உயர்வடையும் மக்காளாய் வாழத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 30 ஆம் சனி: I: உரோ: 11: 1-2, 11-12, 25-29; II : திபா: 94: 12-13. 14-15. 17-18; III : லூக்: 14: 1,7-11
தாழ்ச்சி என்கிற உன்னதமான பண்பைப் பற்றி நாம் எத்தனைமுறை தியானித்தாலும் அதன் முழுப் பொருளை அறிதலும் வாழ்வாக்குதலும் நமக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இவ்வுலகில் வாழும் நாம் அனைவருமே பிறர்முன் மதிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். அதற்காக பலசமயங்களில் நாமே நம்மைப் பற்றி பெருமைபாராட்டுவதும், நமக்கென்று முதன்மையான இடங்களை தேர்வுசெய்வதுமாக இருக்கிறோம். இப்பழக்கத்தை நாம் விலக்க எண்ணினாலும் நம் முயற்சியில் தோற்றுவிடுகிறோம்.
தாழ்ச்சி என்பது நம்மைப் பற்றிய உண்மையை நாம் ஏற்றுக்கொள்வது. நம்முடைய பலத்தையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொண்டு சரிப்படுத்துவதுதான் உண்மையான தாழ்ச்சி. தாழ்ச்சியால் உயர்ந்த பலரைப் பற்றி நாம் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் அவர்களைப் போல நாம் வாழ முயன்றிருக்கிறோமா என சிந்தித்துப்பார்த்தால் விடை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ மிக எளிய எடுத்துக்காட்டை நம் ஆண்டவர் இயேசு கூறியுயள்ளார். விருந்திற்கோ அல்லது பொதுவிழாக்களுக்கோ நாம் செல்லும் போது முதன்மையானை இடத்திற்கு ஆசைப்படாமல் தாழ்மையாக நடந்து கொள்ளும் போது உயர்வான மதிப்பும் முதன்மையான இடமும் நம்மைத் தேடிவரும் என இயேசு கூறியுள்ளார். எளிய காரியமாக இச்செயல் தோன்றினாலும் இதில் ஆழமான செய்தி நமக்கு தரப்பட்டுள்ளது. அதாவது பிறரைவிட நான் உயர்ந்தவன் என்ற ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் இருக்கும் போது நாமாகவே நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறோம்.
இதற்கு சிறந்த உதாரணமாக இஸ்ரயேலர் இருக்கின்றனர். தம்மை உயர்ந்தவர்களாகவும் மதிப்பு மிக்கவர்களாகவும் அவர்கள் கருதினர். அது உண்மைதான். அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தான். ஆனால் அவர்கள் பிற இனத்தவரைத் தங்களைவிடக் கீழானவர்களாகக் கருதினர். இப்பெருமையே அவர்களை பாவத்தில் தள்ளியது. மனம்மாற மறுத்தனர். எனவே மீட்பு பிறஇனத்தவருக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு முதன்மையாக இருந்த அவர்கள் கடையர் ஆயினர் என இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.
எனவே அன்புக்குரியவர்களே நம்மை நாமே உயர்த்திக்கொண்டு முதன்மையான இடத்தைக் கைப்பற்றும் மனநிலையை மாற்ற முயலுவோம். மதிப்பும் மாரியாதையும் தானே நம்மைத் தேடி வரும்.
இறைவேண்டல்
அன்பு இயேசு தாழ்ச்சி என்ற உன்னதமான புண்ணியத்தை வாழ்வாக்கி உயர்வு பெற உம் அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment