Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறையாட்சிக்கு சான்றாய் வாழத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 30 ஆம் செவ்வாய்; I: உரோ: 8:18-25; II : திபா: 125:1-6; III : லூக்: 13:18-21
நம் ஆண்டவர் இயேசு கற்பித்த இறையாட்சி என்பது தனிப்பட்ட இனத்திற்கோ,சமயத்திற்கோ அல்லது வரையறுக்கப்பட்ட குணநலன்கள் கொண்டவர்களுக்கோ மட்டும் சொந்தமில்லை. மாறாக இறையாட்சி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. அனைவரையும் உள்ளனுமதிக்கிறது. எல்லாரும் இறைவனில் மகிழ வேண்டும் என்பதே இறையாட்சியின் நோக்கமாகும். இத்தகைய இறையாட்சிக்கு சான்றாய் நாம் வாழ வேண்டும் என்பதே இன்று நமக்கு விடுக்கப்படும் அழைப்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சியை இயேசு கடுகுவிதைக்கும் புளிப்பு மாவிற்கும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். கடுகு விதையானது சிறிய விதையாக இருந்தாலும் வளர்ந்து பெரிய மரமாகும் போது பறவைகளுக்குப் புகலிடமாகவும் மனிதருக்கு நிழல் தரும் மரமாகவும் பயன்தருகிறது. இவ்வுவமை நமக்குக் கூறும் செய்தி யாதெனில் இறையாட்சிக்குச் சான்றாக வாழ நாம் பெரிய மனிதர்களாகவோ அல்லது பெரிய பெரிய காரியங்கள் செய்பவர்களாகவோ எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நாம் இருக்கின்ற நிலையிலேயே, நம்முடைய எளிய செயல்கள் மூலம் இறையாட்சி விழுமியங்களை விதைக்க முடியும் என்பது தான்.
இதற்குச் சான்றாக நாம் குழந்தை இயேசுவின் புனித தெரசாவைக் கூறலாம்.நான்கு சுவற்றுக்குள் தான் இருந்த நிலையிலேயே தன்னுடைய சின்னச் சின்ன செயல்களால் இயேசு விதைக்க விரும்பிய இறையாட்சிக்கு அவர் சான்றானார். அவருடைய வாழ்வு இன்று உலகம் முழுதும் அறியப்பட்டு இறையாட்சியை அமைக்க விரும்புவோருக்கு உந்துதலாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.
இரண்டாவதாக புளிப்பு மாவு உவமையானது தரப்பட்டுள்ளது. புளிப்பு மாவானது பிசையப்பட்ட மற்ற எல்லா மாவிலும் பரவி மாவினை புளிப்புள்ளதாக்கி உணவுப்பண்டங்கள் தயாரிக்க ஏதுவானதாக மாற்றுகிறது. அதைப்போலவே இறையாட்சி என்னும் புளிப்புமாவு நம்மிடமிருத்து மற்றெல்லாருக்கும் பரவ வேண்டும் என்ற கருத்தை நமக்குத் தருகிறது. இறையாட்சியின் விழுமியங்களான அன்பு ,நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ,
இரக்கம் போன்ற உயர் பண்புகள் நம்முடைய நற்சொல் மற்றும் செயல்களால் பிறருக்குப் பரவி அவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அப்புளிப்பு மாவு உவமை நமக்கு எடுத்துரைக்கிறது.
எனவே இறையாட்சிக் சான்று பகரும் மக்களாய் வாழ கடுகு விதையைப் போலவும் புளிப்பு மாவைப் போலவும் செயல்படுவோம். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்ற பழமொழிக்கேற்ப நம்மால் இயன்ற சின்னச் சின்ன நற்செயல்களால் இறையாட்சியை பரவச் செய்து சான்று வாழ்வு வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா கடுகு விதையைப் போலவும் புளிப்பு மாவைப்போலவும் செயல்பட்டு நாங்கள் அனைவரும் இறையாட்சிக்கு சான்று பகர்பவர்களாக வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment