Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அடிமை நிலையை மாற்றிய ஆண்டவர் | யேசு கருணா | Sunday Reflection
பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு; I. எரேமியா 31:7-9 II. எபிரேயர் 5:1-6 III. மாற்கு 10:46-52
'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம் ... ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்!'
இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 126), ஆசிரியர் மேற்காணும் அழகான வரிகளைப் பாடுகின்றார். இஸ்ரயேலுக்கு நாம் இன்று செல்லும்போது நிறைய வறண்ட ஓடைகளைக் காணலாம். ஆனால், வற்றிய அந்த ஓடைகளுக்கு வெளியே, 'ஓடையைக் கடக்க வேண்டாம்' என்று எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பார்கள். 'தண்ணீர் இல்லாத ஓடையைக் கடந்தால் என்ன?' என்று நாம் கேட்கலாம். ஆனால், இஸ்ரயேலின் நில அமைப்பின்படி, எங்காவது ஓரிடத்தில் மழை பெய்தால், அனைத்து ஓடைகளும் உடனடியாகத் தண்ணீரால் நிரம்பி விடும். அல்லது வறண்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆக, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வறண்ட ஓடை வெள்ளம் ஓடும் நீரோடையாக மாறிவிடும். ஆகையால்தான், 'கடக்க வேண்டாம்' என்னும் எச்சரிக்கை. திருப்பாடல் ஆசிரியர் இந்த நிகழ்வை அப்படியே எடுத்து, 'ஆண்டவரே எங்கள் அடிமை நிலையை நீர் இவ்வளவு விரைவாக மாற்றியருளும்!' என்று பாடுகின்றார். பாடலின் முதற்பகுதியில் தங்கள் அடிமைநிலை மாற்றப்பட்டதாக உணர்கின்றார்.
அடிமை நிலை என்றால் என்ன?
'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. அடிமைக்கு வீட்டில் நிலையானதொரு வீடில்லை' என்கிறார் இயேசு. ஆக, 'அடிமை' என்பது 'தற்காலிகம்.' அல்லது 'அடிமை' நிரந்தரமானவர் அல்ல. அல்லது அடிமைக்கு நிரந்தரத்தின்மேல் உரிமை இல்லை. அடிமை மனப்பான்மையில் ஒருவர் தன் தான்மையையும் தன்மதிப்பையும் இழந்துவிடுகிறார். ஓர் அடிமை தனக்கென எதையும் உறுதிசெய்ய முடியாது.
இஸ்ரயேல் மக்கள் அசீரிய அடிமைத்தனத்தின்போதும், பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதும் மிகவும் இழிவான நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் நாடு, மண், அரசு, வீடு, ஆலயம் என அனைத்தையும் இழந்த பாபிலோனியாவில் அவர்கள் அடிமைகளாக இருந்த நிலையை, ஆண்டவராகிய கடவுள் ஒரே நாளில் மாற்றினார் என்று புகழ் பாடுகின்றனர்.
இந்த நிகழ்வு எப்படி நடந்தது?
'நாங்கள் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என்கிறார் ஆசிரியர். அதாவது, 'எல்லாம் கனவுபோல இருந்தது' என்கிறார் ஆசிரியர்.
கனவுபோல இருப்பது என்றால் என்ன?
கனவு போல நடக்கும் ஒன்றுக்கு மூன்று பண்புகள் உண்டு. (அ) கனவில் நடக்கின்ற எதுவும் எதிர்பாராமல் நடக்கின்றது. 'இன்று எனக்கு இது கனவில் வரும்!' என்று நாம் எதையும் நினைத்துத் தூங்கச் செல்வது கிடையாது. கனவு என்பது எதிர்பாராமல் நிகழக் கூடியது. ஆக, ஆண்டவர் தங்களுடைய அடிமை நிலையை மாற்றியது எதிர்பாராத நேரத்தில் நடந்தது என்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். (ஆ) கனவில் நடக்கின்ற எதுவும் விரைவாக நடக்கும். நாம் ஒரே கனவில் பிறந்து, வளர்ந்து, உயர்ந்துவிட முடியும். கனவில் ஒரே நொடியில் பெரிய கட்டடத்தை நம்மால் எழுப்பிவிட முடியும். இப்படியாக, இஸ்ரயேல் மக்களின் விடுதலை விரைவாக நடக்கின்றது. (இ) கனவில் நடக்கும் எதற்கும் நம் முயற்சி தேவையில்லை. அதாவது, நீட் தேர்வுக்குப் படிக்காமலேயே கனவில் நான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும். கனவில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நம் முயற்சி தேவையில்லை. ஆக, மனிதர்களின் முயற்சி இல்லாமலேயே அனைத்தும் நடந்தேறியதாக இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அளப்பரிய செயலைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் காணும் இந்த உருவகங்கள் இன்றைய வாசகங்களின் கருத்துகளை மிக அழகாகச் சுருங்கச் சொல்கின்றன.
இன்றைய முதல் வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், 'ஆறுதலின் புத்தகம்' என்ற பகுதியிலிருந்து (எரே 30-31) எடுக்கப்பட்டுள்ளது. யூதாவின் அழிவைப் பற்றி இறைவாக்குரைக்கின்ற எரேமியா இப்பகுதியில், யூதாவின் மீட்பு குறித்து இறைவாக்குரைக்கின்றார். 'இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை ஆண்டவர் மீட்டருளினார்' என்கிறார் எரேமியா. 'எஞ்சியோர்' என்னும் பதம், முதலில், 'நாடுகடத்தப்பட்டு உயிருடன் இருக்கும் அடுத்த தலைமுறையினரையும்,' 'ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், பெண்கள், அநாதைகள், குழந்தைகள்' ஆகியோரையும் குறிப்பிடுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றார். அனைவரையும் ஒன்று சேர்த்தல் என்பது, 'யூதா' மற்றும் 'எப்ராயிம்' என்னும் இரு பெயர்கள் வழியாகக் குறிக்கப்படுகின்றது.
'அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதல் அளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்' என்கிறார் ஆண்டவர். 'அழுகை' என்பது அவர்களுடைய மனமாற்றத்தைக் குறிக்கின்றது. தங்கள் முன்னோர்கள் தங்களுடைய சிலைவழிபாட்டால் அடிமை நிலைக்கு உட்படுத்தப்பட்டதை எண்ணி இவர்கள் அழுது தங்கள் மனத்தை இறைவன்பக்கம் திருப்புகின்றனர். இறைவனும் அவர்களுக்கு ஆறுதல் தருகின்றார்.
ஆக, அடிமைத்தனத்தில் எஞ்சியிருத்த மக்களின் நிலையை விடுதலையின் நிலைக்கு மாற்றுகின்றார் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் வாசகம் (காண். எபி 5:1-6) இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில், அருள்பணியாளராக ஒருவர் பணிசெய்வதற்குத் தேவையான பண்புகள் வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், இயேசுவின் குருத்துவத்தின் பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்ரயேல் மக்களின் குருக்கள் லேவி குலத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அல்லது லேவி குலத்தில் பிறத்தல் என்பது அவர்களை, 'குருக்கள்' நிலைக்கு உயர்த்தியது. தலைமைக்குரு என்பவர் லேவி குலத்தில் பிறந்தவராக இருப்பதோடு, அவர் ஆரோனின் குடும்பத்தில் பிறந்த அவருடைய வழிமரபினராக இருக்க வேண்டும். அவர் மனிதர்களின் வழிமரபினராக இருப்பதால் அவரும் பாவத்திற்கு உட்பட்டவராக இருக்கிறார். ஆக, அவர் தனக்கென முதலில் பலி செலுத்தி, பின்னர், மற்றவர்களுக்காக பலி செலுத்த வேண்டும்.
இயேசு லேவி குலத்தில் பிறந்தவர் அல்லர். அவர் யூதா குலத்தில் பிறந்தவர் அல்ல. ஆக, அவர் ஆரோனின் வழிமரபினரும் அல்லர். இப்படி இருக்க, அவரை நாம் எப்படி தலைமைக்குரு என அழைக்கலாம்? எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரு நிலைகளில் இயேசுவை, 'தலைமைக்குரு' என முன்வைக்கின்றார். ஒன்று, திபா 2:7இன் படி, கடவுளின் மகனாக இருக்கிறார். ஏனெனில், 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆக, கடவுளின் மகன் என்ற முறையில் இயேசு இறைவனின் திருமுன் பணியாற்றும் உரிமையையும், இறைவனின் திருத்தூயகத்திற்குள் நுழையும் உரிமையையும் பெறுகின்றார். இரண்டு, திபா 110:4இன் படி, இயேசுவின் அருள்பணி நிலை இறைவனின் ஏற்படுத்துதலால் வருகிறது. 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே!' என்று ஆண்டவராகிய கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆபிரகாமைச் சந்திக்க வருகின்ற மெல்கிசதேக்கு எந்தவொரு தொடக்கமும் முடிவும் இல்லாமல், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமல் வருகின்றார். இயேசுவும் தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுளாகவும், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமலும் வருவதால், மெல்கிசதேக்கின் முறைப்படி அவர் நிலையான குருவாக இருக்கின்றார்.
ஆக, நம் வலுவின்மையில் பங்குபெறும் தலைமைக்குரு இயேசு நமக்காக ஒரே பலி செலுத்தி நம் அடிமை நிலையை மாற்றினார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:46-52), திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை தருகின்றார் இயேசு. இது ஒரு வல்ல செயல் போல இருந்தாலும், இதை ஓர் உருவகம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள், இயேசுவை நேரில் கண்டவர்கள், அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், பார்வையற்ற பர்த்திமேயு, 'இயேசுவே, தாவீதின் மகனே!' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்னும் இவரின் வார்த்தைகள், 'இவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தார்' என்றும், 'இவர் இரண்டாவது பெற்றது நம்பிக்கை பார்வை' என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.
மாற்கு கதையாடல்களை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்யக்கூடியவர். இந்த நிகழ்வை அவர் பதிவு செய்வதிலும் அது வெளிப்படுகின்றது. இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்கு வந்துவிட்டு மீண்டும் வெளியேறுகின்றனர். 'திரளான மக்கள் கூட்டம்' என்பது இயேசுவைப் பின்பற்றியவர்களையோ, அல்லது இயேசுவோடு உடன்பயணித்தவர்களையும் குறிக்கலாம். வழியோரம் அமர்ந்து பிச்சையெடுக்கின்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதாம் போகிறார் எனக் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' எனக் கூக்குரலிடுகின்றார். இயேசுவே தனக்கு நலம் தர இயலும் என்றும், இந்த வாய்ப்பைத் தவற விட்டால் இனி தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும் அறிந்தவராகக் குரல் எழுப்புகின்றார் பர்த்திமேயு. மக்கள் கூட்டம் அவரை அதட்டுகின்றது. ஆனால், அதே மக்கள் கூட்டம், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று தன் இயல்பை மாற்றிக்கொள்கின்றது. அவர் பார்வை பெறுவதற்குத் தடையாக இருந்த மக்கள் கூட்டம், அவர் பார்வை பெறுவதற்கு உதவியாக மாறுகின்றது.
அவர் தன் 'மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வருகின்றார்.' இங்கே மேலுடை என்பதை அவர் அணிந்திருந்த ஆடை எனப் புரிந்துகொண்டால் அவர் நிர்வாணமாக இயேசுவிடம் வந்திருக்க வேண்டும். மேலுடை என்பது தனக்கு முன்பாக அவர் விரித்து வைத்து பிச்சை கேட்கப் பயன்படுத்திய ஆடை என்று நினைத்தால், தன் பழைய வாழ்க்கையையும், பாதுகாப்பு வளையத்தையும் அவர் விட்டுச் சென்றார் என்று புரிந்துகொள்ளலாம். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு உடனடியாக, 'என் போதகரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' எனச் சொல்கிறார் அவர். தன் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தார் அவர். 'நீர் போகலாம். உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' எனச் சொல்கின்றார் இயேசு. அவரும் பார்வை பெற்றவராக இயேசுவைப் பின்தொடர்கின்றார்.
ஆக, பர்த்திமேயுவின் பார்வையற்ற நிலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு. இது மூன்று நிலைகளில் நடந்தேறுகின்றது: (அ) இயேசுவைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்கின்றார், (ஆ) மக்கள் கூட்டத்தின் அதட்டலிலும் தன் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை, (இ) தன் மேலுடையை (பாதுகாப்பு வளையத்தை) இழக்க அவர் தயாராக இருந்தார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி என்ன?
ஆண்டவராகிய கடவுள் நம் அடிமை நிலையை இன்றும் மாற்றுகின்றார். பாவத்தில் விழுந்து கிடக்கும் அடிமை நிலை, நாம் விட்டு விலக இயலாத தீமை என்னும் அடிமை நிலை என அனைத்திலுமிருந்து நம்மை விடுவிக்க அவர் நம் நடுவே வருகின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்வதும், அறிக்கையிடுவதுமே.
புனித அகுஸ்தினார் தன், 'ஒப்புகைகள்' நூலில், 'மேலுடை' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, மனமாற்றம் அடையத் தயாரா உடன், அவருடைய பழைய பழக்கங்கள், அவரின் ஆடையின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, 'நீ போய்விடப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் நீ இருந்துவிடுவாயா? நீ மீண்டும் வருவது எப்போது? எங்களைவிட்டுப் போகாதே!' எனச் சொல்கின்றன. ஆனால், தன் மேலுடையைக் களைந்துவிட்டு மனமாற்றத்தைத் தழுவிக்கொள்கின்றார் அகுஸ்தினார். பல ஆண்டுகள் முயற்சி எடுத்துக் கிடைக்காத மனமாற்றம் கனவுபோல ஒரு நொடியில் நடந்தேறுகிறது.
நம் வாழ்விலும் ஆண்டவர் மாபெரும் செயல்களை இப்படித்தான் நடத்துகின்றார். கண்ணீரோடு விதைவிதைக்கும் நம்மை அறுவடையின் மகிழ்ச்சியால் நிரப்புகின்றார்.
பார்வையற்று வறண்டு கிடந்த பர்த்திமேயு என்னும் ஓடையை இயேசு வான்மழை நிறைந்தோடும் நீரோடையாக மாற்றுகின்றார்.
நம் அடிமைநிலையும் மாறும்! கனவு காண்பது போல நமக்குத் தெரிய அனைத்தும் மாற்றம் பெறும்!
__________
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
Add new comment