மீண்டும் பார்வை பெறத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 30 ஆம்  ஞாயிறு; I: எரே:  31: 7-9; II  : திபா: 126: 1-2. 2-3. 4-5. 6; III: எபி:  5: 1-6; IV: மாற்:  10: 46-52

பக்தர்  ஒருவர் கோவிலுக்குச் சென்று கடவுளிடம் தன்னுடைய துன்ப துயரங்களையெல்லாம் முறையிட்டு " கடவுளே கண் திறந்து பாரும். என் துன்பங்களை நீக்கும் " என்று அழுது புலம்பினார். அவ்வாறாக பிராத்தனை செய்துவிட்டு சோகமாக சாலையில்  நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையிலே இருந்த ஒரு குழியில் கால் தடுக்கி கீழே விழுந்தார். வலி மிக அதிகமாகவே " கடவுளே இப்போது தானே உம்மிடம் பிராத்தித்தேன். மீண்டும் சோதனை தருகிறாயே. என் துன்பங்களைப் பார்க்க முடியவில்லையா? "எனக் கூறினார். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு மனிதர் " உனக்குத் தான் பார்வையில்லை. ஏதோ சிந்தனையில் இருந்து கொண்டு கண்மூடித்தனமாக நீர் விழுந்துவிட்டு எதற்காக கடவுளை குறை சொல்கிறீர்? " என்ற சொல்லிவிட்டு கடந்து சென்றாராம்.

நம் அன்றாட வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் தினமும் அரங்கேறுகின்றன. கண் இருந்தும் பார்வையற்றவர்களாய் வாழ்கிறோம்.நாம் பெற்ற பார்வையை சரியாகப் பயன்படுத்தாமல் பார்க்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதெல்லாம் நாம் பெற்றுக்கொண்ட பார்வையை இழக்கிறோம் என சிந்திப்போம்.

 "உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்; அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்." என நம் ஆண்டவர் இயேசு கூறியதை நாம் லூக்கா நற்செய்தியில் 11:34 ல் வாசிக்கிறோம். அத்தகைய விளக்காய் விளங்குகின்ற நம் கண்கள் கெட்டுப் போகும் படியான காரியங்கள் நாம் செய்யும் போது நம் வாழ்வும் ஒளிஇழந்து விடுகிறது. 

ஆம் நல்லனவற்றை ,
தேவையானவற்றை, பயனுள்ளவற்றை நாம் காணாத போதெல்லாம் நாம் பார்வையற்றோரே. தீமையானவற்றை  காண ஆசிப்பதும் பார்வையற்ற தன்மையே. பிறரிடம் குறை காண்பதும் அதே நேரத்தில் அவர்களின் துன்பங்களைக் கண்டு அலட்சியம் செய்வதும் குருட்டுத் தன்மைக்குச் சமமே. "பார்த்திட நல்ல கண்கள் தந்தார் கனிவுடன் மனிதரைப் பார்த்தாயா? " என்ற கிறிஸ்தவப் பாடல் வரிகள் நாம் கனிவுடன் பிறரைப் பார்க்காத போதெல்லாம்  கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்கிறோம் என்ற செய்தியை நமக்கு வழங்குகின்றதல்லவா!
துன்ப துயரங்கள் நம்மை வாட்டும் வேளையில் அதற்கான சரியான தீர்வினைத் தேடாமல் அத்துன்ப சிந்தனையிலேயே நாம் மூழ்கி இருப்பதும் பார்வை குறைபாடுதான். 
இத்தகைய மனநிலைகளிலிருந்து நாம் விலகும் போது நம் கண்கள் மீண்டும் பார்வை பெறும். நம் வாழ்வும் ஒளியுள்ளதாய் மாறும். 

ஆம் அன்பு சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியில் பார்வையற்ற பார்த்திமேயு இயேசுவிடம் தான் மீண்டும் பார்வை பெற வேண்டுமென மன்றாடினார். இவ்வார்த்தைகள் அவர் பார்வையுள்ளவராய் இருந்து பின் பார்வையற்றவராய் மாறியுள்ளார் என்ற சிந்தனையைத் தருகிறது. ஏற்கனவே   கொண்டிருந்த  பார்வையை இழப்பதால் வரும் இடர்பாடுகள் பிறவியிலேயே பார்வையிழந்தவர் படும் இடர்பாடுகளை விட அதிகம். நமக்கு கடவுள் நல்ல தெளிவான பார்வையைத் தந்து நம் வாழ்வை ஒளியுள்ளதாய் அமைத்துள்ளார். அப்பார்வையை இழக்காமல் வாழ நல்லனவற்றை பயனுள்ளவற்றை நாடுவோம். கனிவோடு மனிதரைக் காண முயற்சிப்போம். பார்வை இழக்கும் தருணங்களில் ஆண்டவரிடம் மீண்டும் பார்வை பெற மன்றாடுவோம். 

இறைவேண்டல்

ஒளியாம் இறைவா!  நாங்கள் மீண்டும் பார்வை பெற்று கனிவோடு பிறரைக் காணவும் நல்லவற்றைப் பார்க்கவும் வரம் தாரும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =