மனமாறி கனிகொடுக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 29 ஆம்  சனி; I: உரோ:  8: 1-11; II : திபா: 24: 1-2. 3-4. 5-6; III : லூக்:  13: 1-9

2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த பொழுது வேளாங்கண்ணியில் கடல்நீர் புகுந்து பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி நாம் அறிந்ததே.
இந்நிகழ்வை பலரும் பலவாறு விமர்சித்தனர். அதில் பெரும்பாலாக வந்த கருத்து என்னவென்றால் உயிரிழந்தோர் பலர் பாவிகள். அதனால்தான் கோவிலில் வைத்தே அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்பதுதான். இக்கூற்றினை சற்று ஆழமாக நாம் யோசித்துப்பார்த்தால்   இதைக் கூறியவர்களின்  குறுகிய மனநிலை நமக்கு விளங்குகிறது அல்லவா.

இத்தகைய குறுகிய மனநிலையைக் களைந்து மனம் மாறவே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது. பிலாத்துவினால் கொல்லப்பட்ட கலிலேயர்கள் அனைவரும் பாவிகள் என்ற மனநிலையை  யூதர்கள் பெற்றிருந்தனர்.  தங்களை நேர்மையாளர்களாய் கருதிய அவர்கள் இத்தகைய நிகழ்வுகளைக் கண்ட பின்னும் மனம்மாறாமல், பிறருடைய குற்றங்களையே சுட்டிக்காட்டுபவர்களாகத் திகழ்ந்தனர். எனவேதான் இயேசு "நீங்கள் மனம்மாறாவிடில் அவ்வாறே மடிவீர்கள்" என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே நம்மிடமும்  ஒருவித ஒப்பிட்டுப்பார்க்கும் மனநிலை இருக்கத்தான் செய்கிறது. "அவனை விட நான் நல்லவன்" "அவரளவுக்கு நான் மோசமானவன் இல்லை " என்ற எண்ணம் நம்மிலே உண்டாகும் போது வெளியில் நடக்கின்ற நிகழ்வுகளை விமர்சனப்படுத்துபவர்களாகவும் பிறரின் அழிவிற்கு காரணத்தை கணிப்பவர்களாகவும் மட்டுமே நாம் இருக்கிறோம். அதனால் நம் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. 

இத்தகைய மனநிலையைக் களைந்து நடக்கின்ற நிகழ்வுகளை பாடமாக எடுத்துக்கொண்டு நம் வாழ்வுப்பாதையை நாம் மாற்றியமைத்தால் நாமும் நிச்சயமாக கனிதருபவர்களாக வாழ முடியும். கடவுள் நமக்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். பலவீனத்தில் தவறி விழுந்தாலும் அவருடைய மன்னிப்பால் நமக்கு மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகளைத் தருகின்றார். தோட்டக்காரர் களைகளை அகற்றி உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது போல, நம் தேவைகளை நிறைவேற்றி, நமக்கு அருள் வழங்கி மன்னித்து மனம்மாற்ற வாழ்வு வாழ வாய்ப்பளிக்கிறார். எனவே நம் வாழ்வுப் பாதையை மாற்றி கனிதரும் மக்களாய் வாழ முயற்சிப்போம்.

இறைவேண்டல் 

அன்பு ஆண்டவரே மனம் மாறி புதுவாழ்வு வாழ நீர் எமக்கு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்ந்து கனிதந்திட எமக்கு வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

20 + 0 =