நேர்மையானதைத் தீர்மானிக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 29 ஆம்  வெள்ளி; I: உரோ:  7: 18-25; II: திபா:119: 66,68. 76,77. 93,94; III : லூக்:  12: 54-59

அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் நாம் நம்மைச் சுற்றி நநடக்கும் நிகழ்வுகளையும், கால சூழ்நிலைகளையும் நம்முடைய அறிவையும் அனுபவங்களையும் கொண்டு  கணித்து விடுகிறோம். அது பலவேளைகளில் சரியானதாகவும் இருக்கின்றது. அவ்வாறே சிலவற்றை சரி எனவும் பலவற்றை தவறு எனவும் நம்மால் தீர்மானிக்கவும் முடிகிறது. ஆனால்  உண்மை என்ன? நேர்மையானவை எவை என்பதைத் தீர்மானிப்பதில் நாம் தவறிவிடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து நேர்மையானவற்றை அவர்கள் தீர்மானிப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். காற்றையும் மேகத்தையும் கணிக்கத் தெரிந்த அவர்களுக்கு காலத்தைக் கணிக்கத் தெரியவில்லை. அதாவது இறையாட்சியின் அறிகுறிகளை மெசியாவாகிய இயேசுவின் போதனைகள் மற்றும் அறிகுறிகள் மூலம் கண்டுணர்ந்து நேர்மையாளராய் மாறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயேசு.

நேர்மையானதை தீர்மானிக்க இயலாததற்குக் காரணம் என்ன என்பதை சிந்திக்கும் போது இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல் அடியார் எழுதிய வார்த்தைகள் நமக்குச் சரியான விடையைத் தருகின்றன. நன்மை செய்யும் விருப்பம் நம் அனைவரிலும் உண்டு. நேர்மையாளர்களாய் நல்லவர்களாய் வாழும் விருப்பம் நம்மிலே உண்டு. ஆயினும் நாம் விரும்பியபடி நேர்மையாளர்களாய் நல்லவர்களாய் நாம் வாழ்கிறோமா என்றால் இல்லை. ஏனெனில் நமது பலவீனங்கள் நம்மைத் தடுக்கின்றன. நாம் மனதில் நினைப்பது ஒன்றாகவும் நாம் நடந்து கொள்ளும் விதம் வேறொன்றாகவும் இருக்கின்றன. இறைவனில் வேரூன்றி வாழ நாம் ஆசிக்கின்ற போதும் ஊனியல்பின் இச்சைகளும் உலக மாயைகளும் நம்மைத்  தடுக்கின்றன. 
 
அதே வேளையில் நாம் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் நம்மை மீட்க கடவுள் வல்லவர் என்ற உறுதியையும் புனித பவுல் தம் சொந்த அனுபவத்திலிருந்து அளித்துள்ளார். எனவே அன்பு சகோதர சகோதரிகளே கடவுளிடம் நம்மை ஒப்படைத்து நம்மிலும் உலகிலும் நேர்மையானவற்றைத் தீர்மானிக்கக் கற்றுக்கொள்வோம்.நம்முடைய விருப்பப்படியல்ல கடவுளின் விருப்பப்படி வாழ நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றவும் முயற்சி செய்ய விழைவோம்.

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா உம்முடைய பிள்ளைகள் நாங்கள் பலவீனர்களாய் இருந்தாலும் உம் உதவியுடன் நேர்மையானவற்றை தீர்மானிப்பவர்களாக வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 4 =