இழத்தல் சுகமானதா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 29 ஆம்  ஞாயிறு; I: எசா: 53: 10-11; II: திபா: 33: 4-5. 18-19. 20,22; III: எபி: 4: 14-16; IV : மாற்:  10: 35-45

ஒரு ஊரில் வயதான பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த பாட்டியின் மீது அதிகமான பாசம் வைத்திருந்தனர். காரணம் அந்த பாட்டி அனைவர் மீதும் அதிகமான அன்பு கொண்டிருந்தார். தன் சொந்த உறவுகளைத் தாண்டி எல்லோரையும் தன்னுடைய உடன்பிறப்புகளாகவும் தன்னுடைய சொந்த பிள்ளைகளாகவும் ஏற்றுக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தார். தன்னிடமிருந்த பொருள் செல்வங்களை தேவையுள்ளவர்களுக்குப் பகிர கூடிய மனநிலை கொண்டவராக இருந்தார். அவர் தன்னுடைய பொருளை இழந்தாலும் உறவுகளை பெருக்கிக் கொண்டார். நாம் உறவுகளை பெருக்கிக் கொள்ள வேண்டுமானால் நம்மையே இழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இழத்தல் சுகமானது.

வயலில் விதைக்கின்ற விதைகள் தன்னை இழக்க வில்லை என்றால் அது பயிராக வளர முடியாது. அரிசி தன்னை இழக்கவில்லையென்றால் தோசையாகவோ இட்லியாகவோ மாற முடியாது.  தாய் தன்னுடைய இரத்தத்தை பாலாக கொடுத்து குழந்தைக்காக தன்னை இழக்க வில்லை என்றால்,  அந்தக் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக வளர முடியாது. பெறுவதில் அல்ல ; இழத்தலில்  தான் உண்மையான சுகம் இருக்கின்றது.

இன்றைய வாசகங்கள் இழத்தலின் மேன்மையைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றன. நம்முடைய மனித உறவுகள் பல நேரங்களில் சீர்குலைவதற்கு காரணம்  நாம் இழப்பதற்குத் தயாராக இல்லாததே.  பணிவிடை புரிவதை விட, பணிவிடை பெறவே அதிகம் விரும்புகிறோம். அவனை விட நான் பெரியவன், அதிகம் படித்தவன், மேலானவன், பணக்காரன், திறமையானவன், அழகானவன் என்ற மனநிலையை நாம் சிறுவயதில் இருந்தே கொண்டு வருகிறோம். இந்த மனநிலைகள் நம்மை இழக்கச் செய்வதற்கு பதிலாக எல்லாவற்றையும் கவர்ந்திட வழிகாட்டுவதாக இருக்கின்றது.

குடும்ப வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியும் சுகமும் இருக்க வேண்டுமென்றால் இழத்தல் வேண்டும். கணவன் தன் மனைவிக்காக தன்னை இழக்க வேண்டும். மனைவி தன் கணவனுக்காக தன்னையே இழக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகத் தங்களை இழக்க வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காகத் தங்களை இழக்க வேண்டும். இவ்வாறாக இழக்கக்கூடிய மனநிலை நமக்கு இருக்கும் பொழுது, நம் வாழ்வில் சுகமான உணர்வுகளை உணர முடியும். குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சி பிறப்பதற்கு இழத்தல் என்ற பண்பானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

நாம் இழத்தல் என்ற நிலையை அடையும் பொழுது   பல்வேறு துன்பங்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும். ஆண்டவர் இயேசு நாம் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக தன்னையே முழுவதுமாக இழந்தார். அவர் இறைத்தன்மையிலிருந்து இறங்கி வந்தது மனிதனாக மனுவெருவெடுத்தார். இது அவரின் இழத்தல் மனநிலையை சுட்டிக்காட்டுகின்றது.

இயேசுவை அனைவரும் அரசராக மாற்ற வேண்டும்  ஆசைப்பட்டனர். சீடர்கள் அந்த அரசாட்சியில்     யார் தங்களுக்குள்  பெரியவர் என்றும் யாருக்கு எந்த பதவி கிடைக்கும் என்றும் தங்களுக்குள்ளே சிந்திக்கத் தொடங்கினர். ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாக "உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்களுக்குத் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்" என்றும் " மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று பணிவிடை புரியவும் பலருடைய மீட்புக்கு விலையாகத் தன் உயிரையே அளிக்கவும் வந்தார் " (மாற்: 10: 44-45) என்ற வார்த்தைகளைக் கூறி இழத்தலின் மேன்மையை சிறப்பாக சுட்டிக்காட்டுகின்றார். 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா " தன்னை ஒரு துன்புறும் ஊழியனாக காண்பிக்கின்றார் ". கடவுளின் வார்த்தைகளைப் பிறருக்கு அறிவிக்கும் பொழுது நமக்கு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் வரும். ஆனால் அவற்றை ஒரு பொருட்டாக கருதாமல் கடவுளை நம்பி நம்மை இழக்கும் பொழுது நம் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்க முடியும். இதைத்தான்  இரண்டாம் வாசகம் தன்னையே வெறுமையாக்குகின்ற   தலைவனால் மட்டுமே துன்புறுவோரின் துயரத்தை துடைக்க முடியும். பதவியை பகிர்ந்து கொள்ள முடியும். பணிவிடை புரிய முடியும். சேவையில் நிலைத்திருக்கமுடியும் என்று கூறுகிறது.

நமது அன்றாட வாழ்வில் ஆண்டவர் இயேசுவைப் போல பிறர் வாழ்வு வளம் பெற நம்மிடம் இருப்பதை இழக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இழத்தலின் வழியாக சுகமான அனுபவத்தை உணர முடியும். "நான் உங்கள் பாதங்களை கழுவியது போல நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும் (யோவா: 13:15) என்று ஆண்டவர் இயேசு  தாழ்ச்சி நிறைந்த புண்ணியத்தை உலகமே அறிந்து கொள்ளும் விதமாக சுட்டிக்காட்டி சென்று விட்டார். ஒரு தலைவனின் சான்று  வாழ்வு   எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். பாதம் கழுவும் நிகழ்வு இயேசு  இறைவன் என்ற  மனநிலையை இழத்தலின் வெளிப்பாடாகும். அவர் நினைத்திருந்தால் நான் இறைமகன் நான் ஏன் பிறருடைய கால்களைக் கழுவ வேண்டும் என கருதி இருக்கலாம். ஆனால் அவர் அந்த நிலையிலிருந்து சாதாரண அடிமை செய்யக்கூடிய வேலையை செய்து இழத்தல்  வழியாகத்தான் உண்மையான வாழ்வு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பதவி மோகம், சுயநலம், ஆணவம், அகங்காரம், தற்பெருமை நிறைந்த இந்த உலகில் நாம் இயேசுவின் மனநிலையில் நம்மையே இழந்து பிறருக்கும் வாழ்வு கொடுக்கக்கூடிய நல்ல உள்ளங்களாக மாறிடத் தேவையான அருளை வேண்டுவோம். இழத்தல் சுகமானது. அதை இழத்தலின் வழியாக உணர்ந்து பார்ப்போம்.

இறைவேண்டல் :
இறைவா !
எங்கள் அன்றாட வாழ்வில் பிறரிடம் பெறுவதை மட்டும் நினைக்காமல், எங்களிடம்  இருப்பதை இழந்து கொடுக்கக் கூடியவர்களாக வாழ தேவையான நல்ல மனநிலையை வேண்டி மன்றாடுகிறோம்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 2 =