இயேசுவை அறிக்கையிடத் தயங்குகிறோமா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 28 ஆம்  சனி; I: உரோ:    4: 13, 16-18; II: திபா: 105: 6,7. 8-9. 42-43; III : லூக்:  12: 8-12

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு பெண். பேருந்து செல்லும் வழியில் தேவாலயங்களைக் கண்ட போதெல்லாம் தன்மேல் சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டார் அவர். அவருடைய அருகில் பயணித்துக் கொண்டிருந்த அவருடைய தோழி " இவ்வாறு அடிக்கடி செய்யாதே.  பார்ப்பவர்கள் தவறாக எண்ணுவர். மேலும் பேருந்தில் பிற சமயத்தவரும் பயணிக்கிறார்கள் அல்லவா? " என்று கூறினார். அதற்கு அப்பெண் பிறருடைய எண்ணங்களைக் குறித்தோ அல்லது எனக்கெதிராக யாரும் ஏதாவது செய்து விடுவார்களோ என நான் பயப்படவில்லை. நான் சிலுவை அடையாளம் வரைவதால் நான் கிறிஸ்தவள் என்பதை மற்றவர் அறிந்து கொள்ளட்டும் என்று துணிச்சலுடன் கூறினாள் அப்பெண். 

அன்புக்குரியவர்களே  இயேசுக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியின் வழியாக நம்மை இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் நற்செய்தியை பறைசாற்றவும் அழைக்கிறார். இதையே  " நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்" என்ற இவ்வார்த்தைகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

நமது கிறிஸ்துவ நம்பிக்கை இத்தனை ஆண்டுகாலமாய் தழைத்து வளர எத்தனையோ பேர் மறைசாட்சிகளாய் தங்கள் உயிரை ஈந்துள்ளனர். கொடுங்கோல் மன்னர்கள் முன்னும் அலுவலர்கள் முன்னும் இயேசுவை தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டனர். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த பரிசு துன்பங்களே. அவர்கள் இறந்து நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவர்கள் திருஅவையால் இன்றும்  நினைவு கூறப்படுகிறார்கள். மரியாதை செய்யப்படுகிறர்கள். அதுவே இயேசு அவர்களையெல்லாம் மனிதர்முன் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார் என்பதை உறுதி செய்கிறது.

இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டிலேயே சிறுபான்மையினர் என்ற அடிக்கோடுடன் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நமக்குப் பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பகிரங்கமாகவே சிலர் "இவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் " என்றெல்லாம் கூறுவதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இத்தகைய சூழலில் இவ்வாறாகப் பேசும் மாந்தர் முன் "இயேசுவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.  "நான் கிறிஸ்தவன் " என்று கூற நம்மில் எத்தனை பேருக்குத் துணிச்சல் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  நம்முடைய நம்பிக்கை ஆழமானதாக இருந்தால் எவ்வளவு பெரிய சபையிலும், எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு நம்மால் அறிக்கையிட முடியும். எனவே நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி மனிதர் முன் ஏன் இவ்வுலத்தின் முன் இயேசுவை அறிக்கையிடத் தயாராவோம்.

இறைவேண்டல்

இயேசுவே! நற்செய்திப் பணிக்காய் எம்மை அழைத்தவரே! துணிவுடனும் நம்பிக்கையுடனும் உம்மை உலகில் அறிக்கையிட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 7 =