Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஞானத்தோடு விண்ணகத்தில் செல்வம் சேர்க்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் 28 ஆம் ஞாயிறு; I: சஞா: 7: 7-11; II : திபா: 90: 12-13. 14-15. 16-17; III: எபி: 4: 12-13; IV : மாற்: 10: 17-30
மனைவியை இழந்து தன்னந்தனியாக ஒரு சிறுமகனையும் வளர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தார் ஒரு பணக்காரர். பணக்காரராக இருந்த போதிலும் பகட்டாக வாழாமல் எளிமையாக வாழ்ந்தார் அவர். தனக்குப்பின் தன் மகனுக்குத் துணையாக யாரும் இல்லை என்ற கவலை இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆழ்ந்து யோசித்த பிறகு ஒரு ஆதரவற்றவருக்கான காப்பகத்தை உருவாக்கி பராமரிக்கத் திட்டமிட்டார். அதன்படியே செயல்படவும் தொடங்கினார். பலரும் அவரை விமர்சனப்படுத்தினர். மகனுக்கு சொத்தை வைக்காமல் செலவளிக்கிறான். மூளை இல்லை என்றெல்லாம் பேசினர். நாளடைவில் மகனும் வளர ஆரம்பித்தான். அவன் கூட தன் அப்பா சிந்திக்காமல் செயல்படுகிறார் என்று விரக்தியடைந்தான். அப்பாவும் காலமானார். தனக்கென்று யாருமில்லை என்று ஏங்கிக்கொண்டிருந்த மகனுக்கு தன் தந்தை நியமித்த காப்பகம் நினைவிற்கு வரவே, விருப்பமில்லாமல் செல்லத் தொடங்கினான். போகப் போக அங்குள்ளோரிடம் அன்பாகப் பழகத் தொடங்கினான். தனக்கென்று நிறைய பேர் இருப்பதை உணர்ந்தான். தன் தந்தை மூளை இல்லாதவர் அல்ல. சிந்தித்து ஞானத்தோடு செயல்பட்டு நிறைய சொந்தங்களையும் அன்பு மகிழ்ச்சி அமைதி மனநிறைவு போன்ற எல்லா செல்வங்களையும் தனக்கென சேர்த்து வைத்துள்ளார் என உணர்ந்தான்.
இன்றைய முதல் வாசகத்தில் ஞானம் மற்ற எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது என்ற சிந்தனை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது உலக அறிவையும் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் தகுந்த சூழ்நிலையில் சரியாகப் பயன்படுத்த கடவுள் நமக்கு அளித்த கொடையாகும். இது தூய ஆவியாரின் கொடைகளில் முதன்மையானது. இந்த உன்னதமான கொடையே தெய்வ பயத்தையும் மனசாட்சிக்குப் பயந்து வாழ்கின்ற மனநிலையையும் தருகின்றது. தவறானவற்றிலிருந்து விலக்கிக் காக்கிறது.
திறன்களையும் செல்வத்தையும் சரியாகப் பயன்படுத்தி அதைப் பெருக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. முழுமனிதனாக நம்மை உருவாக்குகிறது. நற்காரியங்களை செய்ய ஊக்குவிக்கிறது. நற்பெயரை பெற்றுத்தருகிறது. இதை உணர்ந்ததாலேயே சாலமோன் அரசர் ஞானத்தை விரும்பிக் கேட்டார்.
இத்தகைய ஞானத்தின் மற்றொரு முக்கியமான செயல் உலகச் செல்வங்கள் நிலையற்றவை என்பதை உணரவைத்து அவற்றின் மேல் பற்றில்லாத நிலையைத் தருவதாகும். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அந்த இளைஞர், செல்வம் நிலையற்றது என்பதை உணராதவராய் இருந்தார். இது அவருடைய ஞானமின்மையைத் தான் நமக்கு உணர்த்துகிறது.
கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தபோதும் உலகப் போக்கை விடாததால்,அழிந்து போகும் செல்வத்தின் மேலுள்ள பற்றை அகற்றாததால் உண்மையான ஞானம் அவரிடம் தங்கவில்லை. அதனால் தர்மம் என்ற நற்செயலால் கடவுளிடமிருந்து பெறும் நிலையான செல்வத்தை அவன் கைவிட்டான்.
ஆம் அன்பு நண்பர்களே அறிவியலும் கலையும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வரும் இன்றைய நாளில் உலக அறிவுக்கும் பொது அறிவுக்கும் பிற செல்வங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் நாம் காட்டுகின்ற ஆர்வத்தை ஞானத்தை வளத்துக்கொள்வதில் செலுத்துவதில்லை. முந்தைய காலத்தில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளை "ஞான உபதேசம் " என்றே அழைப்பர். இந்த வகுப்புகளுக்கு ஆர்வத்தோடு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும், ஆர்வத்தோடு அனுப்பி வைக்கும் பெற்றோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதல்லவா? இது ஞான காரியங்களில் நமக்குள்ள அசட்டைத் தனத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என்பதே உண்மை.
கோவிலுக்கு வந்தால் " பாதர் அறுக்கிறார் " என்று கேலிப் பேசிக்கொண்டு மறையுரை சமயத்தில் இளையோர்கள் வெளியேறும் நிகழ்வுகள் அம்மனநிலைக்கு மற்றொரு உதாரணம்.
இத்தகைய மனப்போக்கை நாம் மாற்ற நமக்கு பல வழிகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் எல்லாம் முதன்மையானது இறைவார்த்தை. இறைவனின் வார்த்தைகளை நாம் பக்தியுடனும் ஆர்வமுடனும் வாசித்து ஆழ்ந்து தியானிக்கும் போது கடவுளே நம்மை வழிநடத்துவதை நாம் உணரமுடிகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல நம் உள்ளத்தை வாளாய் ஊடுருவி நல்லது கெட்டதை அறிந்து கொள்ளச் செய்கிறது. எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தைக் களைந்து இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது. உலக மாயைகள் செல்வங்கள் இவற்றின் மேல் நமக்குள்ள பற்றுகளை அகற்றி விண்ணக செல்வங்களை சேர்க்கவும் நம்மை வழிநடத்துவது இறைவார்த்தையே.
எனவே இறைவார்த்தையைத் தியானித்து ஞானத்தில் வளர்ந்து இறைவன் விரும்பும் செல்வத்தை விண்ணகத்தில் சேர்த்து வைக்க முற்படுவோம்.
இறைவேண்டல்
எங்களை வழிநத்தும் இறைவா! உம் வார்த்தையால் எங்கள் உள்ளத்தை ஊடுருவி ஞானமென்னும் தூய ஆவியாரின் கொடையால் எம்மை நிரப்பி நிறைவான செல்வத்தை விண்ணகத்தில் சேர்க்க வரமருளும். ஆமென்
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment