Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பேறுபெற்றவர்களாக வாழ வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 27 ஆம் சனி; I: யோவேல்: 3: 12-21; II: திபா: 97: 1-2. 5-6. 11-12; III: லூக்: 11: 27-28
நாம் அனைவரும் நம்முடைய வாழ்வில் பேறுபெற்றவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இந்த மனித வாழ்வு இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒப்பற்ற செல்வம். இப்படிப்பட்ட உன்னதமான வாழ்வை நம் அன்றாட வாழ்வில் முழுமையாக வாழும் பொழுது வாழ்வின் நிறைவையும் முழுமையும் சுவைக்க முடியும். "பேறு பெற்றோர்" என்ற ஆசிமொழியானது புதிய ஏற்பாட்டில் 50 இடங்களில் வருகின்றன. 25 இடங்களில் இயேசுவே தன்னுடைய திருவாய் மலர்ந்து பேறுபெற்றோர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வாழ்வையும் பணிகளையும் வல்லமையையும் பார்த்த கூட்டத்திலிருந்த ஒரு பெண் "``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். இதற்கு காரணம் அந்த அளவுக்கு இயேசுவினுடைய பணி வாழ்வும் செயல்பாடுகளும் இருந்தன.
இன்றைய முதல் சிந்தனை நம்முடைய வாழ்வின் வழியாக நம்மைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு நற்பெயர் வாங்கி கொடுக்க வேண்டும். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் " என்ற குரளின் விளக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நம்முடைய பெற்றோர் படிக்காதவர்களாக இருக்கலாம். வெளிவுலகம் தெரியாதவர்களாக இருக்கலாம். நாம் சொல்லும் செய்தியை புரிந்துகொள்ள ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கலாம். நகர்புறத்தில் வசிக்கக்கூடியவல்களைப் போல நாகரீகமாக நடந்து கொள்ளாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இல்லையென்றால் நாம் இந்த உலகத்தைப் பார்த்திருக்க முடியாது. சிறு குழந்தையாக இருந்த பொழுது அவர்கள் பாராட்டி சீராட்டி வளர்க்கவில்லையென்றால் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கு நாம் சென்றிருக்க முடியாது. அப்படி சமூகத்திலே அடையாளம் தெரியாத நம் பெற்றோரை நம்முடைய நல்ல செயல்பாடுகளின் வழியாக பிறருக்கு உயர்வாக அறிமுகப்படுத்த முற்படுவோம். அதுதான் நாம் பெற்றோருக்கு நாம் பெற்றுக் கொடுக்கக் கூடிய உன்னதமான நற்பெயர்.
நம்முடைய பெற்றோருக்கு பெருமை அவர்களின் பெயரை வைத்து நாம் பெருமைப்படுவதில்லை. மாறாக நம்முடைய வளர்ச்சியின் வழியாக நமது பெயரை வைத்து அவர்கள் பெருமைப்படுதல் வேண்டும். அந்தளவுக்கு நம்முடைய வாழ்வும் செயல்பாடுகளும் இலக்கும் இருக்கவேண்டும். நம் வாழ்விலே யாரை மறந்தாலும் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோரை மட்டும் மறக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. இந்த உலகத்தில் "நீ சாப்பிட்டாயா!" என்று வருத்தப்படும் ஒரே ஜீவன் நம்மைப் பெற்றெடுத்த தாய் மட்டுமே. ஏனெனில் அவருக்குத்தான் தெரியும் சிறு குழந்தையாக இருக்கும் இந்த பொழுது பாலூட்டி சீராட்டி உணவு அளித்தது. நாம் வயிறார சாப்பிடுவதைக் கண்டு நிறைவு அடைபவர் தான் நம் தாய். எனவே இன்றைய நற்செய்தியாக நமக்கு இயேசு தர விரும்புவது நமது தாய் தந்தையை இறுதிமூச்சுவரை அன்பு செய்து, அவர்களை பாதுகாத்து தொண்டு செய்ய வேண்டும் என்பதே. தாய் தந்தையரை மதிக்காதவர்கள் கடவுளின் அருளை முழுமையாகப் பெற முடியாது. இதுதான் உண்மை. எனவே நம்முடைய வாழ்வில் நம் பெற்றோருக்கு நற்பெயரையும் மதிப்பையும் கொடுக்க முயற்சி செய்வோம்.
இரண்டாவதாக உண்மையான நற்பேறு பெற்றவர் யார்? என்பதற்கான விளக்கத்தையும் இயேசு நமக்குத் தருகிறார். "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்பதே அவ்விளக்கம். இறைவார்த்தையை கேட்டு அதை கடைபிடித்த பலரைப் பற்றி விவிலியத்தில் பல சான்றுகள் தரப்பட்டுள்ளன.நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் என பலரும் துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவார்த்தையைக் கடைபிடித்து இறைவனின் ஆசிரைப் பெற்று பேறுபெற்றவர்களாகத் திகழ்ந்தனர். அவ்வரிசையில் நமது அன்னை மரியா சிறந்தவராய்த் திகழ்கிறார் எனக் கூறினால் மிகையாகாது. இதோ ஆண்டவரின் அடிமை என்ற சொன்ன நேரத்திலிருந்து தன் உள்ளத்தை வாள் ஊடுருவும் அளவுக்கு வேதனைகள் வதைத்தாலும் இறைவார்த்தையைத் தன் வாழ்வாக்கி இறுதியில் "இதோ உன் தாய் " என மனுகுலத்திற்கே தாயாகும் பேறு பெற்றார் அன்னை மரி. தன்னுடைய வாழ்த்துப்பாடலில் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர் என்ற அன்னைமரியின் கூற்றை இயேசு தன் வார்த்தைகளால் உறுதிப்படுத்துகிறார்.
இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவால் அன்னை மரி பெருமை அடைவதையும் அன்னை மரியாவால் இயேசு பெருமை அடைவதையும் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இதுவல்லவா உண்மையான பேறுபெற்ற நிலை !நமது அன்றாட வாழ்வில் நமது தாய் தந்தையரால் நாமும் நம்மால் நமது தாய் தந்தையரும் பெருமை அடைந்துள்ளோமா? என யோசிப்போம். அதைவிட மேலாக நம்மைப் படைத்த இறைவனுக்கு நாம் பெருமை அளித்துள்ளோமோ எனவும் சிந்திப்போம். எல்லா நேரங்களிலும், வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் நடுவிலும்
அவருடைய வார்த்தையின் படி வாழும்போது நாம் கடவுளைப் பெருமைப்படுத்துகிறோம்.கடவுளும் நம்மைப் பெருமைப்படுத்துவார். அதுவே நாம் பெறும் உன்னதமான பேறுபெற்ற நிலை. பேறுபெற்றவர்களாய் வாழத் தயாரா?
இறைவேண்டல்
அன்பு இறைவா உம் வார்த்தைகளை எம் உள்ளத்தில் இறுத்தி அதன்படி வாழ்ந்து பேறுபெற்றவர்களாக உம்மைப் பெருமைப் படுத்துபர்களாக வாழும் வரமருளும் ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment