காவல் தூதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 26 ஆம்  சனி 
தூய காவல் தூதர்களின் விழா; I: பாரூ:  4: 5-12, 27-29; II: தி.பா: 69: 32-34. 35-36; III : லூக்: 10: 17-24

"காவல் தூதர்கள் நம்மை ஆபத்துக்கள் அனைத்திலிருந்தும் காத்து நமக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். குறிப்பாக நாம் அனைவரும் நிலையான வாழ்வு பெற்று நம் ஆன்மாவை காத்துக்கொள்ள உதவி செய்கிறார்கள். சோதனை நேரத்தில் நம்மை சாத்தானிடமிருந்து காப்பாற்றுகிறார்கள். நம்மை நன்மைகள் பல செய்யத் தூண்டுகிறார்கள். நாம் விண்ணப்பங்களை எல்லாம் கடவுளிடம் கொண்டு போய் சேர்த்து அது கிடைக்க வழி காட்டுகிறார்கள். நம் மரண வேளையில் நமக்காக ஜெபித்து மன்றாடுகிறார்கள்" என்று காவல் தூதர்களின் மேன்மையான பணிகளை பிரியன் ஜெம்ஸ் அல்பேரியோன் பட்டியலிட்டு கூறியுள்ளார்.

நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அந்த நொடி முதல் கடவுள் நமக்காக ஒரு காவல் தூதரை கொடுத்துள்ளார். இந்த காவல் தூதர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி பாவங்கள், தீமைகள், ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க உதவி செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதரும் காவல் தூதரை  கொண்டுள்ளார்.எனவே ஒவ்வொரு மனிதரையும் நாம் மதிக்க வேண்டும். ஒரு மனிதரை அவமரியாதை செய்வது அவரின் காவல் தூதரை அவமரியாதை செய்வதற்கு சமம். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு "இச்சிறியோருள்  ஒருவரையும் நீங்கள் இழிவாக கருத வேண்டாம். கவனமாயிருங்கள். இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கின்றார்கள், என நான் உங்களுக்குச் சொல்கிறேன் " (மத்: 18:10) என்று கூறியுள்ளார். எனவே இன்றைய நாளில் கடவுள் நமக்கு காவல் தூதர்களை கொடுப்பதன் வழியாக அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களை அன்பு செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே ஜாதி, மதம், மொழி ,இனம் போன்ற பாகுபாடுகளை தாண்டி எல்லா மனிதரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒரு குடும்பத்தவர் என்ற மனநிலையில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம். பிறரை இழிவாகக் கருதுவது அவரின் வானதூதரை இழிவாக கருதுவதற்கு சமம். வானதூதர் இழிவாகக் கருதுவது கடவுளை இழிவாக  கருதுவதற்கு சமம். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் எல்லா மனிதரையும் மதித்து அன்பு செய்ய முயற்சி செய்வோம்.

இன்றைய விழாவானது இரண்டு முக்கிய சிந்தனையை வலியுறுத்துவதாக இருக்கின்றது. முதலாவதாக நாம் அனைவரும் காவல் தூதர்களையும் பிரசன்னத்தை உணர வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த காவல் தூதரை நம்மில் செயல்பட வைக்க நம் உள்ளம் தூய்மையின் உள்ளமாக மாற வேண்டும். மேலும் இறைவார்த்தையின் மீது தாகம் கொண்ட வாழ்வாக இருக்க வேண்டும். தூய ஆவிஉறையும் ஆலயமாகநம் உடலும் உள்ளமும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருக்கின்ற பொழுது தான் நம்மிடமுள்ள சுயநலமும் ஆணவமும் தற்பெருமையும் அகங்காரமும் ஒழிந்து,  இறையாசீர் நமக்கு முழுமையாக கிடைத்து காவல் தூதர்களின்  வழிகாட்டுதலை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இரண்டாவதாக காவல் தூதர்கள் நம்முடைய செபங்களையெல்லாம் இறைவனிடத்தில் கொண்டு செல்பவர்களாக இருக்கின்றனர். இன்றைய நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுமெனில் காவல் தூதரை  துணைக்கு அழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் காவல் தூதருக்கு நன்றி சொல்லி நம்மையே ஒப்புக் கொடுக்க வேண்டும். பகலிலே நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் காவல் தூதரிடம் ஒப்படைக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பாக காவல் தூதரிடம் நம்மையே ஒப்புக்கொடுத்து செபிக்க வேண்டும். நாம்  பாதுகாப்பாக ஓய்வெடுக்க காவல் தூதரை துணைக்கு அழைக்க வேண்டும். ஒரு நண்பனோடு பேசுவதைப் போல காவல் தூதருக்கு திறந்த மனநிலையோடு செவிமடுத்து பேசவேண்டும். இவ்வாறாக காவல் தூதரோடு  நல்லுறவு வைத்துக் கொள்ளும் பொழுது, நம்முடைய விண்ணப்பங்கள் கடவுளிடம் விரைவாகச் செல்லும். எனவே காவல் தூதர்களிடம் நம்மை ஒப்புக் கொடுத்து இறையாசீர் பெறுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! காவல் தூதர்களை எங்கள் வாழ்வில் கொடையாக கொடுத்ததற்கு நன்றி. காவல் தூதர்களின் குரலுக்கு செவிமடுத்து எந்நாளும் எங்கள் வாழ்வில்  வளமோடும் நலமோடும் வாழ தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 12 =