சிறிய செயல்களையும் நிறைந்த அன்போடு செய்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 26 ஆம்  வெள்ளி; I: பாரூ: 1: 15-22; II : தி.பா: 79: 1-2. 3-5. 8. 9; III : லூக்: 10: 13-16

இன்று தாய் திருஅவையானது குழந்தை இயேசுவின் புனித தெரசாவை அன்புடன் நினைவு கூறுகிறது. புனித குழந்தை தெரசா நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்தவர் தான். ஆயினும் இன்று அகில உலகத் திருஅவையால் அவர் நினைவுகூறப்படக் காரணம் என்ன?

அவருடைய மறைவான வாழ்வின் சின்னச் சின்ன செயல்களும் கடவுளுடைய நிறைவான அன்பைத் தாங்கியதாக இருந்ததுதான் அதற்குக் காரணம். சாதாரண அன்றாட செயல்களைக் கூட ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் பாவிகள் மனம்திரும்புவதற்காகவும்  ஒப்புக்கொடுத்து நிறைந்த அன்போடு செய்வாராம் அவர். ஆம் அன்புக்குரியவர்களே இவ்வுலகால் நாம் அறியப்படவும் அதைவிட மேலாக கடவுளின் அன்பை பிறக்குக்குப் பகிர்ந்து அவர் மீட்புத் திட்டத்தில் நாமும் கருவிகளாக உருமாற நாம் செய்யவேண்டியவை அசாதாரண பெரிய காரியங்களை அல்ல. மாறாக சிறிய காரியங்களை நிறைந்த அன்போடும் கடைமை உணர்வோடும் பிறருக்குப் பயன்படும் வகையிலும் செய்தாலே போதும். இதைத்தான் இன்றைய விழாவின் புனிதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

நாம் நிறைவான அன்போடு செய்யக்கூடிய அச்சிறிய செயல்கள் எவை ?
1.நடை பாதையில் கூர்மையான கற்களோ அல்லது கண்ணாடித்துண்டுகளோ இருந்தால் பிறரைக் காயப்படுத்தாத வண்ணம் அதை எடுத்துப்போடுவது.
2.தனிமையில் இருப்பவர்கள் நம் இல்லத்தின் அருகிலிருந்தால் அவர்களோடு ஐந்து நிமிடம் செலவழிப்பது
3.நமது உடலில் ஏற்படும் வலிகளை ஆன்மாக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் ஒப்புக்கொடுப்பது
4. முதியவர்களுக்கு உதவுவது
5. பேருந்துகளில் பயணம் செய்யும் போது கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு இடம் கொடுப்பது
6.சிறு சிறு துன்பங்களை சகித்துக்கொள்வது

இன்னுமாக பல காரியங்களை நாம் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இத்தகைய காரியங்கள் ஒன்றும் நாம் செய்ய இயலாத அரிய பெரிய காரியங்கள் அல்ல. மாறாக நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கின்ற நிகழ்வு தான். இவற்றை புனித குழந்தை இயேசுவின் தெரசாவைப் போல மறைவாக செய்யவும், நிறைவான அன்போடு செய்யவும் இறையருளையும் புனிதையின் பரிந்துரையையும் நாடுவோம். 

இறைவேண்டல்

நிறைவான அன்புடையவரே இறைவா ,புனித தெரசாவைப் போல சின்னச் சின்ன பீறரன்புகௌ காரியங்களை நிறைந்த அன்போடு செய்ய உமதருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 8 =