கிறிஸ்தவம் ஒரு வாழ்வியல் மதிப்பீடா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 23 ஆம்    வியாழன்; I: கொலோ:  3: 12-17; II: தி.பா: 150: 1-2. 3-4. 5-6; III: லூக்:  6: 27-38

மனித வாழ்வு என்பது அறநெறி மதிப்பீட்டோடு வாழக்கூடிய ஒப்பற்ற வாழ்வியல். நாம் நிறைவுள்ள வாழ்வு வாழ்ந்திட ஆண்டவர் இயேசு மிகச்சிறந்த போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார். கிறிஸ்தவம் என்பது  சமயம் சார்ந்த ஒன்று என நிறுத்திவிட முடியாது. மாறாக,  கிறிஸ்தவம் ஒரு வாழ்வியல் அறநெறியாகும். மனிதமும் மனித மாண்பும் போற்றிப் புகழப்பட்ட எண்ணற்ற சித்தாந்தங்களை உயர்த்திப் பிடிக்கும் பண்புகளைக் கொண்ட சமயம் தான் கிறிஸ்தவம். ஆண்டவர் இயேசு சமயத்தைப் பரப்பப்வில்லை.
மாறாக,   மனிதத்தைப் பரப்பினார். மனித மாண்பு  புறக்கணிக்கப்பட்ட இடத்தில் மனிதநேய சிந்தனைகளை விதைத்தார். "பலியை அல்ல ;இரக்கத்தையே விரும்புகிறேன் " என்ற வாழ்வியல் மதிப்பீட்டை நமக்குப் பறைசாற்றியுள்ளார். இன்றைய நற்செய்தியின் வழியாக மனித வாழ்வின் உயரிய மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்பு என்ற உயரிய மதிப்பீட்டை இயேசுவின் போதனைகள் அனைத்திலும்  பார்க்கலாம். மோசே இஸ்ரயேல் மக்களுக்கு பல்வேறு சட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும்  கற்பித்தார். அதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் மனிதத்தன்மையை விட்டு விட்டு மிருகத் தன்மையோடு பிறரை கொல்லும் மனநிலை கொண்டவராக இருந்தனர். இத்தகைய மிருகத் தன்மையான மனநிலையை விட்டுவிட்டு ஓரளவுக்கு அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சில சட்டங்களை அவர்களுக்குக் கொடுத்தார். "பல்லுக்குப் பல் ;கண்ணுக்கு கண் "என்ற சட்டம் இதற்கு அவர்களின் கடுமையான மனநிலைக்கு உதாரணமாக இருக்கின்றது.

ஒருவன் ஒருவருடைய பல்லை எடுத்தால் அவரைக் கொல்லும் அளவுக்கு துணிந்தனர். எனவேதான் மோசே ஒரு பல்லை எடுத்தால் ஒரு பல்லை மட்டும் எடுங்கள் என்ற சட்டத்தை கொடுக்கும் அளவுக்கு உள்ளானார். காரணம் பல்லுக்கு உயிர் ஈடாகாது. இவ்வாறாக  ஒவ்வொரு சட்டத்தையும் நாம் ஆய்வு செய்து பார்க்கலாம். 

ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதத்தை அழிக்க வல்ல எல்லா சட்டங்களையும் உடைத்தெறிபவராக தன்னுடைய போதனையை செய்தார். ''இயேசு, 'உங்கள் பகைவர்களிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்;
உங்களை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார்'' (லூக்கா 6:27-28). பகைவரை அன்பு செய்வது என்பது இயேசு வாழ்ந்த காலகட்டத்தில்  இயலாத காரியமாக இருந்தது. ஏனென்றால் நமக்கு தீங்கு செய்தவர்களை பழி வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான பார்வையும் இஸ்ராயேல் மக்களிடத்தில் இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசு பகைவரிடம் அன்பு - வெறுப்போருக்கு நன்மை - சபிப்போருக்கு ஆசி - இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுதல் - கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னம் - மேலுடையை எடுத்துக் கொள்பவனுக்கு அங்கி - கேட்கும் எவருக்கும் கொடுங்கள் - எடுத்துக் கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காதீர்கள். "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" போன்ற உயரிய மதிப்பீடுகளைப் பறைசாற்றியுள்ளார்.

அன்புக்குரியவர்களே கிறிஸ்து வழங்கிய இம்மதிப்பீடுகள் நமக்கு கடினமாகத் தோன்றலாம். கடைபிடிக்க இயலாததாகத் தென்படலாம். பிறர் இவற்றை கடைபிடிக்காத போது நான் மட்டும் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று கூட எண்ணலாம். ஆனால் இவற்றையெல்லாம் நாம் செய்யும் போது நம் வாழ்வு நிறைவைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும். ஏன் நம் வாழ்வு கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலிப்பதாக அமையும். எனவே கிறிஸ்துவின் மதிப்பீடுகளை நமது வாழ்வாக்க விழைவோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசு நீர் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வாழ்வாக்கி நிறைவை நோக்கி பயணிக்க அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

18 + 0 =