இயேசுவால் தொடப்பட விருப்பமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம் 23 ஆம்    ஞாயிறு; I: எசாயா35:4-7; II : தி.பா: 145:6-10; III : யாக் 2:1-5; IV: மாற்கு 7:31-37

தொடுதல் என்பது அன்பின் மற்றொரு பரிமாணம். அத்தொடுதல் உடலால் உணரப்படுவது அல்ல. உள்ளத்தால் உணரப்படுவது.  ஒருவரின் அன்பான சொல், செயல், உடனிருப்பு நமது மனதைத் தொட்டு அம்மனதில் புதைந்துள்ள துயரங்களை நீக்கி நலமளிக்கும்.  மனிதரின் தொடுதலுக்கு இவ்வளவு வல்லமை உண்டென்றால் ஆண்டவர் இயேசுவின் தொடுதலின் வல்லமையை வார்த்தைகளால் விளக்க முடியுமா? விவிலியத்தில் பல இடங்களில் நோயாளிகள் இயேசுவால் தொடப்படக் காத்திருந்தனர் என்ற செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியில் இயேசு செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாத ஒருவரை குணமாக்குகிற நிகழ்வை நாம் தியானிக்கிறோம்.

முதலில் இயேசு அம்மனிதரின் காதுக்குள் தன் விரலை இடுகிறார். அவரின் காதுகளில் ஏற்பட்ட அடைப்புகளை இயேசுவின் விரல் ஊடுருவி நீக்குகிறது. பல வேளைகளில் நாம் காதிருந்தும் செவிடர்களாக வாழ்கிறோம். இறைவார்த்தையையும், சக மனிதர்களின் துயரையும் கேட்க இயலாத அளவிற்கு நம்முடைய காதுகளைமட்டுமல்லநம்  இதயத்தையும் நமது சுயநலமும் உலக மாயைகளும் அடைத்துக்கொண்டுள்ளன. இவ்வடைப்புகளை இயேசுவின் குரல் ஊடுருவி நீக்குமாறு நாம் அவரை அணுகிச்செல்ல வேண்டும் என்ற உண்மையை அச்செயல் நமக்கு விளக்குகிறது. 

அதே போல இயேசு அம்மனிதருடைய நாவைத் தொட்டு அவரைப் பேசச் செய்கிறார். இறைவார்த்தையை உரக்க அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டவருக்காக குரல் எழுப்பவுமே நமக்கு நாவு தரப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்கி பயத்தினால் நாம் ஊமைகளாக, பேச திறன் இல்லாதவர்களாக, இருந்துவிடுகிறோம். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் தந்தையின் அன்பை உரக்கச் சொன்னார். அத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார். அவருடைய வாழ்வால் நாம் தொடப்பட வேண்டும். நமது பேச்சுத்திறனை பிறர் நலனுக்காகவும் இறைவனைப் புகழவும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆழமான செய்தியை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

இன்று நாம் ஆசிரியர் தினவிழாவைக் கொண்டாடுகிறோம். ஆசிரியப்பணி என்பது மிகவும் உயரிய பணி. அறியாமையையும் மூடத் தனங்களையும் அகற்றுகின்ற பணி. இயேசு சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவருடைய வாழ்வும் போதனையும் பல வாழ்வியல் பாடங்களைக் கற்றுத்தந்தது. மூடிக்கிடந்த காதுகளையும் வாய்களையும் அவருடைய போதனை தொட்டு கேட்கவும் பேசவும் வைத்தது. பேசப் பயந்திருந்த சீடர்கள் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கியது இயேசுவாலேயே. 

ஆம் அன்புக்குரியவர்களே இயேசுவைப் போல நம்முடைய வாழ்வாலும் பணிகளாலும் சொற்களாலும் இருத்தலாலும் நல்லாசிரியப் பணி செய்து ஒடுக்கப்பட்டோரின் குரலைக் கேட்கவும் அவர்களுக்காக வாய்திறந்து பேசவும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். இறைவார்த்தை மூலமும் இறை அனுபவங்கள் மூலமும் இயேசு நம் காதுகளையும் நாவையும் தொட அனுமதிப்போம். அதே பணியை நாமும் பிறருக்கு செய்வோம். அதற்கான அருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவை உமது வார்த்தைகளையும் ஒடுக்கப்பட்டோரின் குரலையும் கேட்க எங்கள் காதுகளைத் திறந்தருளும். உம் வாக்கை உரைக்கவும் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் எங்கள் நாவுகளைத் திறந்தருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 3 =