பிறர் வாழ்வு பெற உன்னை தரத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு; I: 1 அரசர் 19:4-8; II  : தி.பா:  33:2-9; III: எபே 4:30-5:2; IV:  யோவான் 6:41-51

ஒரு பங்கில் பங்குப் பணியாளர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக சென்று திருப்பலி நிறைவேற்றலாம் என முடிவு செய்திருந்தார் அப்போது அந்த தெருவில் உள்ள அனைவரும் இணைந்து திருப்பலிக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண்டிருந்தனர். வீடுவீடாகச் சென்று ஒலி அமைக்கவும் சிற்றுண்டிகள் வாங்கவும் பணம் வசூலித்துக்கொண்டிருந்தனர் சிலர். அப்போது அத்தெருவிலே வசிக்கும் ஒரு ஏழைத்தாய் " என்னிடம் தருவதற்கு பணமில்லை. என்னால் முடிந்த அளவு என் உடலுழைப்பைத் தருகிறேன்" என்று கூறி திருப்பலி நிறைவேற்றப்படுகின்ற இடத்தை சுத்தம் செய்வது, பிறர் அமர்வதற்காக நாற்காலிகளை போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செவ்வனே செய்து திருப்பலி நல்லமுறையில் நிறைவேற்றப்பட சிறப்பாக உதவினார். எல்லாம் முடிந்தவுடன் அத்தெருவிலே உள்ள சிலர் அத்தாயிடம் சென்று "நாங்கள் கொடுத்த பணத்தினாலல்ல உங்களுடைய சுயநலமற்ற உழைப்பினால்தான் இத்திருப்பலி சிறப்பாக நடந்தேறியது. இறையாசிரை நாங்கள் அனைவரும் பெற நீங்கள்தான் மிக முக்கிய காரணம்" எனக் கூறி அத்தாயை வாழ்த்தினர்.

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.” என்று இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். என் சதையை கொடுக்கிறேன் என இயேசு கூறியதன் பொருள் என்ன? 

சதை என்பது மனிதனுக்கு உருவத்தைக் கொடுக்கும் ஒன்று. சதை இல்லாத மனிதன் வெறும் எலும்புக்கூடாகத்தான் இருப்பான். சதை அல்லது திசுக்கள் தான் நமது உடலின் மிக முக்கிய உள்ளுறுப்புக்களை மூடிப் பாதுகாக்கிறது. நமது உடலில் ஏற்படும் காயங்கள் எல்லாம் சதையைத் தாண்டிதான் உறுப்புக்களைத் தீண்டும்.சதை என்பது ஒரு முழுமனிதனை அவன் உணர்வுகளைக் கூட குறிப்பதாக இருக்கிறது. 

 இயேசு தன் சதையை நமக்குத் தருகிறார் என்றால் அவர் தம்முடைய எல்லாவற்றையும் நமக்குத் தருகிறார் என்பது தான் பொருள். 
அவருடைய  ஆற்றலை, பாதுகாப்பு ,நல்லுணர்வுகள் என அனைத்தையும் தன் சதையைத் தருவதன் மூலம் இயேசு நமக்குத் தந்து வாழ்வை அருளுகின்றார். 

அன்புக்குரியவர்களே பிறர் நலனுக்காக, அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நம் சதையைக் கொடுப்பதற்கு சமம் என்ற ஆழமான செய்தியை இன்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளுக்காக செய்யும் அனைத்தின் வழியாகவும் தங்கள் சதையை அல்லவா தருகின்றனர். அவர்களின் உழைப்பும் வியர்வையும் தியாகமும் குடும்பத்திற்கு வாழ்வளிக்கிறது. கடமை உணர்வுடன் பணிபுரியும் தொழிலாளிகள் தங்ளுடைய நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் பொழுது அவர்களின் சதையை தங்கள் கடின உழைப்பின் வழியாகக் கொடுக்கின்றனர் . எத்தனையோ சமூக ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை முன்னேற்ற தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி உழைத்து தங்களையே முழுமையாகக் கையளிக்கின்றனர்.

எனவே நம்முடைய வாழ்விலும் இயேசுவைப் போல பிறர் வாழ்வு பெற நம்மையே கொடுக்க தயாராவோம். நம் உழைப்பையும் ஆற்றலையும் தியாகத்தையும் பிறர் வாழ்வு பெறும் பொருட்டு கையளிப்போம். 

இறைவேண்டல்

உம்மையே எமக்காகக் கையளித்த இயேசுவே பிறர் வாழ்வு பெற எம்மையே கொடுக்கும் மனம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 5 =