Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திறந்த மனம் வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 18 ஆம் வியாழன்; I: எண்:20: 1-13; II: தி.பா: 95: 1-2. 6-7. 8-9; III: மத்: 16: 13-23
நம்முடைய வாழ்வில் வெற்றி பெற திறந்த மனநிலை நமக்கு வேண்டும். திறந்த மனநிலை இருக்குமிடத்தில் தான் முழுமையான வளர்ச்சி இருக்கும். திறந்த மனநிலை இல்லாமல் இறுகிய மனநிலை இருந்தால் அங்கு வளர்ச்சி இருக்காது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம் ஆண்டவர் இயேசு திறந்த மனநிலையோடு வாழ சிறப்பான விதத்தில் அழைப்பு விடுகிறார். இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் தன்னைப் பற்றியும் தன் இறையாட்சி பணிகளைப் பற்றியும் திறந்த மனநிலையோடு பகுப்பாய்வு செய்ய விரும்பினார். எனவேதான் அவர் தம் சீடர்களிடம் "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். சீடர்களும் மக்கள் சொன்ன கருத்துக்களை இயேசுவிடம் கூறினர். அந்த பகுப்பாய்வில் இயேசு திருப்தி அடையவில்லை.
மேலும் ஆண்டவர் இயேசு தன்னோடு பயணித்த சீடர்கள் தன்னுடைய இறையாட்சி பணியை பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வினாவினார். "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு கேட்டார். இது இயேசுவின் ஆழமான திறந்த உள்ளத்தை காட்டுகிறது. இயேசு நினைத்திருந்தால் நான் இறைமகன் எனக்கு எல்லாம் தெரியும். என்னுடைய பணிகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று நினைத்திருக்கலாம். ஆனால் இயேசு திறந்த மனநிலையோடு தன்னுடைய இறையாட்சிப் பணியினை பகுப்பாய்வு செய்ய விரும்பினார். அந்தப் பகுப்பாய்வில் சீமோன் பேதுரு மிக அருமையான அனுபவ ரீதியான பதிலைக் கூறினார்.
இயேசு கேட்ட கேள்விக்கு சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். இயேசுவின் இறையாட்சிப் பணியை புரிந்துகொண்ட பேதுருவை இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்" என்று கூறி பாராட்டினார்.
இந்த சிறிய நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம். நம்முடைய வாழ்விலே பற்பல பணிகளை செய்து வருகிறோம். நம்முடைய இலட்சியத்தை நோக்கி பயணமாகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் திறந்த உள்ளத்தோடு இருப்பதில்லை. நம்முடைய வாழ்க்கை பயணத்தில் தவறு செய்கின்ற பொழுதும் அதைப் பிறர் மேற்கோள்காட்டி நம்மை வழிகாட்டும் போதும் நாம் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். எனவே வளர்ச்சியை நாம் காண தவறி விடுகிறோம். உண்மையான வளர்ச்சி என்பது தாழ்ச்சியில் தான் இருக்கின்றது. தாழ்ச்சியோடு தவறுகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் நம் வாழ்வில் வெற்றியை பெறுகிறோம்.
தவறு செய்யாத நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிகளை திறந்து உள்ளதோடு பகுப்பாய்வு செய்ய நினைக்கின்ற பொழுது, பலவீனமுள்ள நாம் ஏன் திறந்த உள்ளத்தோடு இருப்பதில்லை? நம் வாழ்வின் வெற்றியும் கனியை சுவைக்க திறந்த உள்ளத்தோடு இருக்க முயற்சி செய்வோம்.
இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையானது பனிமய அன்னை விழாவினை கொண்டாடுகின்றது. அன்னை மரியாள் தூய்மையின் அன்னையாக இருக்கிறார். இந்த உலகத்திற்கு மீட்பினை வழங்கும் மிகச் சிறந்த கருவியாக இருக்கிறார். பனிப் படலம் எவ்வாறு வெண்மை நிறைந்த தூய்மையாக இருக்கின்றதோ, அதேபோல அன்னை மரியாவின் உள்ளமும் தூய்மை நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. அவரின் உள்ளம் தூய்மையாக இருந்ததால் தான் கடவுளின் திருவுளத்திற்காக அவர் உள்ளம் திறந்த மனநிலையோடு இருந்தது. அனைத்தையும் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ள முடிந்தது. எனவே கடவுள் தாழ்நிலையில் இருந்த பெண்களை உயர்த்தினார். கடவுள் அன்னை மரியாவை உயர்த்தியது ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு மிகச்சிறந்த அடியாக இருக்கின்றது. இவையெல்லாம் நடந்ததற்கு அடிப்படை அன்னை மரியாவின் திறந்த உள்ளம்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவைப் போலவும் அன்னை மரியாவை போலவும் திறந்த உள்ளத்தோடு இறை அன்பு செய்வோம். நம் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கின்ற பொழுது திறந்த உள்ளத்தோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுளின் ஆசியை முழுமையாக சுவைக்க முடியும். திறந்த உள்ளத்தோடு வாழ்ந்து வாழ்வில் வெற்றியடைய தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் திறந்த உள்ளத்தோடு வாழ்ந்து வாழ்வின் வெற்றியின் கனியை அனுபவிக்க அருள்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment