Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
"புனித ஜான் மரிய வியான்னி போல வாழ்வோமா! " | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 18 ஆம் செவ்வாய்; I: எண்:13: 1-2,25-33, 14: 1,26-30,34-35; II : தி.பா: 106: 6-7ய. 13-14. 21-22. 23; III: 15: 21-28
ஜான் மரிய வியான்னி குருக்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவர் திருஅவை வரலாற்றில் தலைசிறந்த புனிதராக கருதப்படுகின்றார். மனித அறிவை தாண்டி இறை அறிவில் முழுமையை கண்டவர். இவர் குருத்துவ பயிற்சியில் இருக்கின்ற பொழுது படிக்க சற்று சிரமப்பட்டார். அதன் பின்னணி என்னவென்றால் பிரெஞ்சு புரட்சியின் தாக்கம். பிரெஞ்சு புரட்சியின் போது கத்தோலிக்க வழிபாட்டு முறைகள் அரசால் தடை செய்யப்பட்டனர். எனவே திருப்பலியைத் தொடர்ந்து முழுமையாக பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் பல மைல் தூரம் நடந்து குடும்பத்தினரோடு சென்று மாணவப்பருவத்தில் திருப்பலி காண்பார். அந்த அளவுக்கு அவரின் குடும்பம் பக்தி நிறைந்த குடும்பமாக இருந்தது. மாணவப்பருவத்தில் முறையான கல்வி பெறாததால் குருத்துவ பயிற்சியின்போது இலத்தீன் மொழியில் புலமை பெற மிகவும் கடினப்பட்டார். ஆனால் பலர் இவரை திறமையற்றவர் என கருதினாலும் அவர் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டார். இறைவனின் வழிநடத்துததால் குருவாக மாறி ஆர்ஸ் என்ற நகருக்கு பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இந்த நகரம் பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தின் காரணமாக இறைநம்பிக்கையில் தளர்ச்சி அடைந்த கிராமமாக இருந்தது. இவ்வுலகம் சார்ந்த சிற்றின்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆன்மீக வாழ்வில் தளர்ச்சியோடு வாழ்ந்தனர். ஆனால் புனித ஜான் மரிய வியான்னி மிகுந்த ஆர்வத்தோடு அந்த நகரத்திற்கு சென்று பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
தன்னுடைய செபத்தின் வழியாகவும் மறையுரையின் வழியாகவும் மிகச் சிறப்பான விதத்தில் மக்களை மனமாற்ற பாதைக்கு வழிக்காட்டினார் .கல்லான இதயம் கனிவான இதயமாக மாற அவரின் செபமும் மறையுரையும் தூண்டுகோலாக இருந்தது. இவர் பல மணி நேரம் ஒப்புரவு அருள்சாதனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். பெரும்பாலும் ஆலயத்திலிருந்து செபிக்க கூடியவராக இருந்தார். அவரின் செப வாழ்வும் புனித வாழ்வும் மக்களை வெகுவாக ஈர்த்தது. எண்ணற்ற பகுதியிலிருந்து ஆர்ஸ் நகரத்திற்கு வந்து பாவமன்னிப்புப் பெற வந்தனர். ஆர்ஸ் நகரத்திற்கு வந்தால் விண்ணக வாழ்வுக்கான பாதையை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வளர்ந்தன. இந்த புனிதரின் வாழ்வு எல்லா குருக்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றது. ஒரு குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியை இப்புனிதரின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள முடியும். அவருடைய விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரின் வாழ்வின் மதிப்பீடுகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்.
இவரைப்போல செப வாழ்வில் நிலைத்திருக்கும் முயற்சி செய்வோம். செபிப்பது என்பது குறுகிய நேரத்தில் செபிப்பது அல்ல ; நீண்ட நேரத்தில் ஆண்டவரோடு உறவாடுவது. அவ்வாறு உறவாடும் பொழுது கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் முழுமையாக சுவைக்க முடியும். அவற்றை பிறருக்கும் கொடுக்க முடியும்.
அடுத்ததாக இப்புனிதர் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பாவ மன்னிப்பு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. ஒப்புரவு அருள்சாதனம் வழியாக பாவமன்னிப்பை முழுமையாக பெறும்பொழுது விண்ணக வாழ்வின் முன் சுவையை அனுபவிக்க முடியும். விண்ணகத்திற்காண பாதையை அறிந்து கொள்ள முடியும்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் செப வாழ்விற்கும் மனமாற்ற வாழ்விற்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வோம். நாம் இறைவனோடு உறவாடும் பொழுது அவரின் அன்பையும் அருளையும் பெறுகிறோம். ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக மன்னிப்பை பெறுகின்ற பொழுது விண்ணக மாட்சியின் பாதையில் தெரிந்துகொள்ள முடியும். விண்ணகம் மாட்சியின் முன் சுவையை அனுபவிக்க முடியும். நாம் இப்புனிதரை போல வாழ தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னியைப் போல எந்நாளும் வாழ்ந்திட அருளைத் தாரும் .ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment