உலகிற்கு உணவாகத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு 
I: வி.ப :16: 2-4, 12-15
II  : தி.பா: 78: 3,4bc. 23-24. 25,54
III: எபே: 4: 17, 20-24
IV:  யோவா:  6: 24-35

வேலைதேடி அலைந்து கொண்டிருந்த பட்டதாரி இளைஞன் ஒருவர் சோகத்தோடு சாலையிலே நடந்துகொண்டிருந்தார். வழியில் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் அவ்விளைஞனுடன் நடந்துகொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்தார் அந்த முதியவர். பதறிய அந்த இளைஞன் அம்முதயவரைத் தூக்கிப்பிடித்து நிழலுள்ள இடத்தில் அமரவைத்தார். பின்பு இருவரும் உரையாட ஆரம்பித்த போது சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதாக அம்முதியவர் கூறினார். அதைக்கேட்ட அவ்விளைஞன் மிகவும் வருந்தினான். ஆனால் அவனிடமும் உணவு வாங்கிக்கொடுக்க போதுமான பணம் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது வருகின்ற வழியல் உள்ள கோயிலில் அன்னதானம் கொடுத்துக்கொண்டிருந்தது நினைவிற்கு வரவே, அம்முதியவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அக்கோயிலுக்குச் சென்று உணவு வாங்கிவந்து அம்முதியவருக்குக் கொடுத்தான் அவ்விளைஞன். அப்போது அம்முதியவர் அவ்விளைஞனை நோக்கி "என் பிள்ளைகளுக்குக் கூட என்மீது இவ்வளவு அக்கறை இல்லை. உன் அக்கறையால் என் மனதையும் சேர்த்து நிரப்பிவிட்டாய் தம்பி " என்று கூறி தேம்பித் தேம்பி அழுதாராம் .

மேற்கூறிய அவ்விளைஞனைப் போல இச்சமூகத்தில் எத்தனையோ பேர் தன்னிடம் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் பிறருடைய தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்கின்றனர்.அதற்காகப் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களெல்லாம் தேவையில் இருப்போர்க்கு உணவாக உறவாகத் திகழ்கின்றனர் என்று சொல்வதில் எவ்விதத் தவறும் இல்லை.அவர்களில் ஒருவராக நாம் திகழ்கின்றோமா எனச் சிந்திக்கவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

மனித வாழ்க்கைக்கு உணவு மிகமிக இன்றியமையாதது. ஏனெனில் நாம் உண்ணுகின்ற உணவுதான் நாம் இருப்பதற்கும் இயங்குவதற்கும் ஆற்றல் தருகிறது. உணவு என்று சொல்லும் போது வயிற்றுப்பசிக்காக நாம் உண்ணுகின்ற உணவு மட்டுமல்ல. அறிவுப்பசிக்காக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு கல்வி. ஆன்ம பசிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு இறைநம்பிக்கை. அன்புப் பசிக்காக நாம் உண்ணுகின்ற உணவு உறவும் நட்பும்.இவ்வாறாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றுள் எவை சரியாகப் பூர்த்தி செய்யப்டவில்லை என்றாலும் நம் இருத்தலும் இயக்கமும் நிச்சயம் பாதிக்கப்படும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு " வாழ்வு தரும் உணவு நானே" என்று கூறுவதை நாம் தியானிக்கின்றோம். எவ்வாறு அவரால் அப்படிக் கூற முடிந்தது? ஏனென்றால் அவர் வாழ்ந்ததையே அவர் கூறினார். இயேசு தன்னுடைய போதனைகளையெல்லாம் யாருக்கு அதிகமாகக் கொடுத்தார் என சிந்திக்கும் போது, படிப்பறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஏன் அவருடன் இருந்த சீடர்களில் ஒருசிலரைத் தவிர அனைவருமே கல்வியறிவில் குறைந்தவர்கள் தான். அவர்களின் அறிவுப்பசியை தன்னுடைய எளிமையான போதனைகளால் அவர் நிறைவு செய்தார்.

அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், எப்போது மெசியா வருவார் தங்களை விடுவிப்பார் என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், தன்னுடைய வல்ல செயல்களால் இறைநம்பிக்கையை ஊட்டி அவர்களின் ஆன்மப் பசியைப் போக்கினார்.
பசியாய் இருந்த மக்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து களைப்பைப் போக்கினார்.பாவிகள், நோயாளிகள் என ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மக்களைத் தேடிச் சென்று, அவர்களோடு உறவாடி நட்புடன் பழகி அன்புப் பசியைப் பூர்த்திசெய்தார் இயேசு. எனவே தான் வாழ்வு தரும் உணவு நானே  என இயேசுவால் சொல்லமுடிந்தது.

இன்று நம்மால் இவ்வார்த்தைகளைக் கூற முடியுமா? நம்முடைய நல்ல சிந்தனைப் பரிமாற்றங்களால், உறவால், நட்பால், பகிர்தலால் எத்தனைபேருடைய பசியை நாம் ஆற்றியிருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போமா? அவ்வாறு செய்திருந்தால் நாமும் " வாழ்வு தரும் உணவு நானே" என்னும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. 
அழிந்து போகின்றவைக்களுக்காக நம் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவதைத் தவிர்த்து நம்மால் இயன்றவரை இயேசுவைப் போல பசித்திருப்போருக்கு உணவாகமாற முயற்சிப்போம்.

இறைவேண்டல்

இயேசுவே, வாழ்வு தரும் உணவே உம்மைப்போல எங்களுடைய அன்பால் பகிர்வால் உறவால் நம்பிக்கையால் உலகிற்கு உணவாகும் ஆற்றலைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

14 + 4 =