உண்மையை எடுத்துரைக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 17 ஆம்  சனி; I: லேவி:   25: 1, 8-17; II : தி.பா: 67: 1-2. 4. 6-7; III:  மத்:   14: 1-12

நாம் வாழும் இந்த உலகத்தில் உண்மையை எடுத்துரைப்பதும் உண்மைக்கு சான்று பகர்வதும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. ஒருவர் உண்மையாய் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏமாளி என்றும் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பெயர் சூட்டப்படுகின்றது. ஆனால் உண்மை வாழ்வில் இறுதிவரை நிலைத்திருக்கும் பொழுது நம் வாழ்வில் துன்பப்பட்டாலும் வெற்றி நிச்சயம் நமக்குக் கைக்கூடும். உண்மையாய் வாழ்ந்த எத்தனையோ மாமனிதர்கள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக விவிலியத்தில் உண்மைக்குச் சான்று பகர்ந்த தொடக்க நூல்  யோசேப்பு மிகச் சிறந்த முன்னுதாரணம். தன் எஜமானின் மனைவி தன்னை தவறுதலாக பயன்படுத்த நினைக்கும் பொழுது,  கடவுளுக்குப் பயந்து உண்மை உள்ளவராக இருந்தார்.அவர் மீது பொய் குற்றம் சுமத்தப்பட்ட போதும் உண்மை ஒருநாள் வெல்லும் என்று ஆழமாக நம்பி இறுதிவரையில் உண்மை வாழ்வில் நிலைத்திருந்தார். எனவே கடவுள் எகிப்தின் ஆளுநராக உயர்த்தும் அளவுக்கு திருவுளம் கொண்டார். அதே போல தான் புதிய ஏற்பாட்டு யோசேப்பும் கடவுள் வார்த்தைக்கு உண்மை உள்ளவராக இருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால் அன்னை மரியாவுக்கு கடவுளின் திருவுளம் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டு யோசேப்புக்கு கனவில் தான் இறை திருவுளம் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் யோசேப்பு கடவுளின் திருவுளத்தை ஏற்று அன்னை மரியாவை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார். கடவுளின் வார்த்தைக்கு உண்மை உள்ளவராக இருந்தார். உண்மையாக வாழுகின்றபொழுது  நிச்சயம் கடவுள் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். நாம் துன்பத்தில் அவதிப்பட்டாலும்    இறுதியில் கைவிடாமல் நம்மை காத்து வழிநடத்துவார். 

உண்மைக்கு சான்று பகரத் திருமுழுக்கு யோவான் மிகச் சிறந்த முன்மாதிரி. ஏரோது அரசனாக இருந்த போதிலும் தன் உயிருக்கு அஞ்சாமல் அரசன் செய்த தவற்றை சுட்டிக்காட்டினார். உண்மை நெறிக்கு சான்று பகர உறுதியாய் இருந்தார். எனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உண்மையற்ற வாழ்வில் வாழ்ந்த ஏரோதியாவின் சிற்றின்பங்கள் உண்மை நெறியில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் உயிரை பறித்தது. ஆனால் கடவுள் திருமுழுக்கு யோவானை மாட்சியோடு உயர்த்தினார். இயேசுவைக் கண்டு ஏரோது திருமுழுக்கு யோவான் என அஞ்சினார். அப்படி என்றால் இயேசுவின் மதிப்பீடுகள் திருமுழுக்கு யோவானின் வாழ்வில் பிரதிபலித்திருக்கின்றது. திருமுழுக்கு யோவான் இயேசுவை போல இறுதிவரை உண்மைக்கு சான்று பகர்ந்தார். தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி உண்மை வாழ்வுக்கு சான்று பகர்ந்து உண்மையான கிறிஸ்துவ மதிப்பீட்டை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் உண்மைக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். உண்மைக்கு சான்று பகர்வது என்பது கடவுளுக்கு அஞ்சி நடப்பதாகும். நாம் கடவுளுக்கு அஞ்சி மனச்சாட்சியின் படி வாழ முயற்சி செய்யும்பொழுது  உண்மைக்குச் சான்று பகர முடியும். இதைத்தான் மீக்கா இறைவாக்கினர் " கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்" (மீக்: 5:9) என்று கூறியுள்ளார். நாம் உண்மையுள்ள உள்ளவர்களாக வாழ கடவுளுக்கு அஞ்சினால் மட்டும் போதும். நாம் உண்மைக்குச் சான்று பகர முடியும்.

ஆண்டவர் இயேசு "  "உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" (யோ: 8: 32) என்று கூறியுள்ளார். நாம் உண்மையுள்ளவர்களாக இறுதிவரை இருக்கும் பொழுது,  உண்மையான விடுதலையை முழுமையாக நாம் சுவைக்க முடியும்.ஏனெனில் கடவுள் உண்மையாய் இருக்கின்றார். அந்த உண்மைதான் நமக்கு விடுதலை அளிக்கிறது. எனவே கடவுள் நமக்கு திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாகவும்  சொல்லும் செய்தி நம் வாழ்நாள் முழுவதும் உண்மை உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதேயாகும். உண்மை உள்ளவர்களாக வாழத் தயாரா?

இறைவேண்டல் :
உண்மையின் இறைவனே! எங்கள் அன்றாட வாழ்வில் எந்நாளும் உண்மை வாழ்வுக்குச் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

4 + 2 =