தவறான முன்சார்பு எண்ணங்களைக் களைவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 17 ஆம்  வெள்ளி  
I: லேவி:   23: 1, 4-11, 15-16, 27, 34-38
II  : தி.பா: 81: 2-3, 4-5, 9-10
III:  மத்:  13: 54-58

முன்சார்பு எண்ணம் என்பது ஒரு நபரின் பின்னணி அல்லது முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அவரைப்பற்றிய சாதகமற்ற  கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனநிலையைக் குறிக்கிறது. நம்மில் பெரும்பாலோர் இத்தகைய தவறான எண்ணங்களை  அல்லது முன்சார்புக் கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.
இவை நாம்  நியாயமற்ற முறையில் பிறரை தீர்ப்பளிக்கும் மனப்பான்மைக்கு இட்டுச் செல்கிறது.

 இயேசுவின் வாழ்க்கையிலும் இவ்வாறு நடந்தது. அவரது சொந்த மக்கள் அவரை அவரது குடும்ப பின்னணியை ஒப்பிட்டு அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினர். அவருடைய ஞானம் நிறைந்த  போதனைகளையும்  அருஞ்செயல்களையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஒரு தச்சரின் மகனுக்கு எவ்வாறு படித்த உயர்குடி மக்களைப் போன்ற ஞானம் இருக்க முடியும் என்பது அவர்களின் வாதம். 

இதுபோன்ற நம்முடைய சொந்த அனுபவங்களை நம்மால் நினைவுபடுத்த முடியுமா? அல்லது நாம் வேறு ஒருவருக்கு இப்படி செய்திருக்கிறோமா? எதுவாக இருந்தாலும், நம்முடைய பிறரைப் பற்றிய முன்சார்பு எண்ணங்களும் அவர்களின் பின்னணி அடிப்படையிலான தீர்ப்பிடல்களும்  
 எப்போதும் உண்மை இல்லை என்ற ஒரு பாடத்தை இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய   தொழில், திறமைகள் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் எவரையும்    அவர்களின் குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பிட்டு அவமானப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்பதையும் நாம் இன்று உணரவேண்டும். நம்முடைய எல்லா தவறான முன்சார்பு எண்ணங்களையும் வேருடன் பிடுங்கி எறிய முயற்சிக்கலாமா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! மற்றவர்களிடம் நல்லதைக் கண்டு அவர்களைப் பாராட்டும் நல்மனதைத் தாரும். ஒருபோதும் பிறரை  முன்சார்பு எண்ணங்களைக் கொண்டு காயப்படுத்தாத மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 4 =