இறைவா உமது திருஉளம் எம்மில் நிறைவேறட்டும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 16 ஆம் செவ்வாய் I: வி.ப: 14:14:21-15:1; II : விப 15 ; III:  மத்:  12: 12:46-50

நாம் ஒவ்வொருவரும் நமது சொந்தத் திட்டங்களையே செயல்படுத்த விரும்புகிறோம்.   நம்முடைய தனிப்பட்ட கனவுகள், ஆசைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய விருப்பங்களின் நீளமான பட்டியல் நம்மிடம்   மனதில் புதைந்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பெற்றோரின் திட்டத்தை நிறைவேற்ற மறுக்கும்   குழந்தைகளையும், தங்கள் சொந்த குழந்தைகளின் விருப்பத்தை புறக்கணிக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களில் காண்கிறோம். கணவன்-மனைவி, முதலாளிகள் மற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என நாம் நேசிக்கின்ற நெருங்கிப் பழகுகின்ற மனித தர்களின் திட்டங்களையே  நாம் நிறைவேற்றுவதில்லை.    அவ்வாறெனில்  கடவுளுடைய திருஉளத்தை நாம் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

"விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களே  என்னுடைய தாய்  , சகோதர சகோதரிகள் "என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவர் தம்முடைய சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக் கொடுத்தபோதும், “உமது திருஉளம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும்  நிறைவேறுக" என்றார். நம் அன்பான அன்னை மரியாவும், "உமது  வார்த்தையின்படி எனக்கு  நிகழட்டும்" என்றார். அப்படியானால் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

கடவுளின் விருப்பம் என்ன? அதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?
கடவுளுடைய சித்தத்தைச் செய்ய முதலில் நாம் அதை அறிந்து கொள்வது அவசியம்.  அவ்வாறு இறை திருஉளத்தை நாம் அறிந்து கொள்ள  அவருடன் நெருங்கிய உறவில் இருக்க வேண்டும்.  கடவுளுடனான நமது தனிப்பட்ட உறவு நம்முடைய சொந்த திட்டங்களை ஒதுக்கி வைக்கவும், மனிதர்கள்,  நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகின்ற கடவுளுடைய சித்தத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் உதவுகின்றது.

அன்புக்குரியவர்களே இறைதிருஉளம் என்பது நாம் எங்கோ தேடி அலைய வேண்டிய ஒன்றல்ல. வீரதீர செயல்கள் செய்வதும், அதிசயங்கள் புரிவதுமல்ல இறைஉளம். நம் அனுதின வாழ்க்கையை நற்செயல்களால் நிரப்பி, அனைவரையும் அன்பு செய்து இறைவனுக்கு பெருமை சேர்ப்பதுதான் அவருடைய திருஉளம். நாம் இருக்கின்ற இடத்தில், செய்கின்ற பணிகளில் உண்மையைக் கடைபிடித்து, இன்ப துன்பங்களைச் சமநிலையில் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக கடவுளின் பிள்ளைகளாக வாழ முயற்சிப்போம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா உமது திருஉளத்தை மனதார ஏற்று உம் பிள்ளைகளாய் நிறைவேற்ற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 3 =