நல்ல ஆயர்களாக இருப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்
(18.07.2021)
பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு
மு.வா: எரே: 23: 1-6
ப.பா  : தி.பா: 23:1-6
இ. வா:எபே 2:13-18
ந. வா:  மாற்கு 6:30-34

நல்ல ஆயர்களாக இருப்போமா!

ஒரு ஆயராக இருப்பதென்பது ஆடுகளுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், அவர்களை வழிதவறாமல் பாதுகாப்பதும், எல்லா ஆடுகளையும் பாகுபாடின்றி நேசிப்பதும், அவற்றின் அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் பூர்த்திசெய்து, எல்லா பாதிப்புகளிலிருந்தும் பாதுகாப்பதும் ஆகும்.இத்தகைய நற்குணங்கள் நிறைந்த ஆயர்களாக வாழவே நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

 நல்ல ஆயனாம் மேற்குறிப்பிட்ட  எல்லா பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தார்.  அவர் தம்முடைய சீடர்களுக்கு நல்ல ஆயராக இருந்தார். அவர் தனது போதனைகள் மூலம் அவர்களுக்கு விண்ணக ஞானத்தை அளித்தார். மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது அவர்களுக்காக வாதாடினார்.  அவர் கைது செய்யப்பட்டபோதும் கூட, அவர் தம்முடைய சீடர்களுக்கு எவ்வித தீங்கும் நேராதபடி தப்புவித்ததை நாம் விவிலியத்தில் காண்கிறோம்.  இன்றைய நற்செய்தியில், அவர்கள் பணிசெய்து பிறகு சோர்வாக திரும்பி வந்தபோது  அவர்களுக்கு ஓய்வு கொடுத்தார் என்று வாசிக்கிறோம். விடுதலை வாழ்வுக்கு வழிகாட்ட யாருமின்றிஅலைக்கழிக்கப்பட்ட  மக்களைக் கண்டு  மனமிறங்கினார் .

நாமும் நல்ல ஆயர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
நம்முடைய பணித்தளங்களில் நம்முடைய வழிகாட்டுதலின் கீழ்  ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்லஆயர்களாகவும், இயேசுவைப் போன்ற உண்மையான வழிகாட்டிகளாகவும் வாழ நாம்  பணிக்கப்பட்டுள்ளோம். ஒரு நல்ல ஆயனாய் நம் கடமைகளை நாம்  நிறைவேற்றுவது நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட சிறப்பான பணி. அதேவேளையில்  நாம் நமது கடமையில் தோல்வியுற்றால், அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஆம்.  இன்றைய முதல் வாசகத்தில் "தவறான ஆயர்களை அவர்கள் செய்த தவறுகளுக்கு நான் கவனித்துக்கொள்வேன்" என்று யாவே இறைவன் கூறுகிறார். அன்புள்ள நண்பர்களே, நமது வாழ்வில் நல் எண்ணங்களோடும் அக்கறையோடும் நமக்கு  பலர்  வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் வழழங்கியுள்ளனர். நாம் அவற்றை  அனுபவித்து வாழ்வில் வளர்ந்து  வருகிறோம். அவர்களைப்போலவே நம்முடைய அன்பான பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஆயர்களாக இருந்து வழிநடத்துவோம்.

இறைவேண்டல்

 நல்ல ஆயனாம் இறைவா, எங்கள் பணி இடங்களில் நல்ல ஆயர்களாக   இருக்க வரமருளும் ஆமென்.

Add new comment

9 + 2 =