யாவே இறைவன் நம்மை விழித்திருந்து காக்கிறார்! |குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 15ஆம் சனி
மு.வா: வி. ப:  12:37-42
ப.பா  : தி.பா: 135:1,10-15,23-24
ந. வா:  மத்:  12: 12:14-21

யாவே இறைவன் நம்மை விழித்திருந்து காக்கிறார்!

தாயன்புக்கு ஈடாக இவ்வுலகத்தில் ஏதுமில்லை. ஒரு தாயானவள் தன் குழந்தையை எப்போதும் கண்விழித்து கவனித்துக்கொண்டே இருப்பாள். அதிலும் குறிப்பாக ஏதேனும் உடல் நலக்குறைவோ, பிரச்சினையோ ஏற்பட்டால் எத்தனை இரவுகளானாலும் கண்ணயராமல் பாதுகாப்பாள். நம்முடைய சொந்தத் தாய்மார்கள்  நம்மைக் கண்விழித்துக் காத்திருந்த அனுபவங்கள் நமக்கு உண்டல்லவா?

திருப்பாடல் 121 வார்த்தைகள் 3-4 ல் இவ்வாறாக சொல்லப்பட்டுள்ளது.
" உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை." இன்றைய முதல் வாசகத்தில் இவ்வார்த்தைகள் உண்மையாவதை நாம் காண்கிறோம். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறும் போது கடவுள் இரவு முழுதும் கண்விழித்துக் காத்தார் என்ற வார்த்தைகள், கடவுள் தான் தேர்ந்தெடுத்த மக்கள் மேல் கொண்டுள்ள உடன்படிக்கை அன்பையும், நீதியையும் மறவாமல் நிறைவேற்றுகிறார் என்பதைப் புலப்படுத்துகிறது. தன் மக்களை அடிமைத்தளையிலிருந்து உண்மை விடுதலைக்கு அழைத்துச்செல்ல கடவுள் கண்விழித்திருந்தார்.

யாவே இறைவனின் மறு உருவாக விளங்கிய இயேசு, சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் வாழ்ந்த  மக்களிடம் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் இருந்தார்.  ஆனால் யூதர்கள் அவருக்கு எதிராக சதி செய்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆகவே, இயேசு தனது உயிரைப் பாதுகாப்பதற்காக ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த சூழ்நிலையில் கூட  தன்னை அணுகிய அனைவருக்கும் அவர் நன்மை செய்தார். அவர்களை குணப்படுத்தினார் இயேசு.

அன்புள்ள நண்பர்களே, நாம் கடினமான தருணங்களிலும் பிரச்சினை மிகுந்த சூழலிலும் இருக்கும்போது கடவுள் நம்மிடமிருந்து விலகி இருக்கிறார் என்று பலமுறை நினைக்கிறோம். நம் துன்பங்களை அவர் கண்டு கொள்வதில்லை என அவரைப் பழிக்கிறோம். ஆனால் அந்த தருணங்களில் தான் அவர் முழுமையாக விழித்திருக்கிறார். தாயைப் போல கண்விழித்துக் காத்து நம் அனைவரையும் உண்மையான விடுதலை  வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.  நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட பல்வேறு காரியங்களைச் செய்கிறார். எனவே அவர் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்க்கையை அவருடைய கைகளில் ஒப்படைப்போம்.

இறைவேண்டல்

எம்மை தாய் போல விழித்திருந்து காக்கும் தெய்வமே, உண்மையான விடுதலையை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க வரம் தாரும். ஆமென்.

Add new comment

5 + 15 =