உயிரோட்டமுள்ளவர்களா வாழ வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதிநான்காம் திங்கள்; I: தொநூ: 28: 10-22; II  : திபா: 90: 1-4, 14-15; III: மத்: 9: 18-26

நாம் வாழும்  வாழ்வு உயிரோட்டமுள்ளதாக இருக்க இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது . உயிரோட்டம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல ; அது ஆன்மா சார்ந்ததாகும். நம்முடைய உடலும் ஆன்மாவும் நம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகர வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்வில் உயிரோட்டம் நிறைந்த வாழ்வை வாழ முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி.

ஆண்டவர் இயேசு இரண்டு வல்லச் செயல்களை  செய்ததை நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்றோம். இந்த வல்ல செயல்கள் வழியாக உயிரோட்டமுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ நமக்கு இயேசு வழிகாட்டியுள்ளார். நாம் வாழும் இந்த உலகில்  உயிர்த்துடிப்போடு வாழ வேண்டுமெனில் நம்பிக்கை வாழ்வு என்பது மிகவும் அவசியம்.

நம்பிக்கை தான் மனித வாழ்வில் நிறைவு காண அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய வாழ்வு உயிரோட்டமுள்ளதாக இருக்க நம்பிக்கை மிகவும் அவசியமாகும்.  இன்றைய நாளில் இயேசு செய்த வல்ல செயல்கள் நம்பிக்கையின் விளைவாக இயேசுவால் செய்யப்பட்டது. இயேசு தனது சொந்த ஊருக்கு சென்ற பொழுது அவரால் வல்ல செயல்களை செய்ய முடியவில்லை. காரணம் சொந்த ஊர் மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவரை குடும்பத்தின் பெயரை வைத்து குறைவாக மதிப்பிட்டு அவநம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிரோட்டமுள்ள வாழ்வைப் பெற்றனர்.

நம்முடைய அன்றாட வாழ்வில் யோசித்துப் பார்ப்போம். நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையும் 12 ஆண்டுகளாக இரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையும்  உயிரோட்டமுள்ள வாழ்வை கொடுத்தது. ஏனெனில் அவர்களின் நம்பிக்கையில் உறுதிப்பாடும் தெளிவும் இருந்தன. எனவே நாமும் உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ்ந்திட இறை நம்பிக்கையில் சிறந்து வாழ முயற்சி செய்வோம். உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ உறுதிப்பாடோடும் தெளிவோடும் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள ஆண்டவரே! எங்கள் அன்றாட வாழ்வில் நம்பிக்கையில் நாங்கள் நிலைத்திருந்து உமது அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 6 =