Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனின் இறைவாக்கினர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் பதிநான்காம் ஞாயிறு; I: எசே2:2-5; II : திபா: 122:1-5; III: 2 கொரி 12:7-10; IV:மாற்கு 6:1-6
இறைவாக்கினர்கள் கடவுளின் நாவுகளாக செயவ்படுகிறவர்கள். அவருடைய வார்த்தைகளை தைரியத்துடன் மிகைப்படுத்துதலின்றி அறிவிக்கக் கூடியவர்கள். கடவுளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்கள். அவர்கள் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் இணைப்பாளர்களாக இயங்கக் கூடியவர்கள். கிறிஸ்தவர்களான நாம் அனைவரும் இன்றைய இந்த உலகில் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
முதல் வாசகத்தில் கடவுள் எசேக்கியேலை இஸ்ரயேலர்களிடையே ஒரு இறைவாக்கினராக அனுப்புகின்ற நிகழ்வைக் காண்கிறோம்.கடவுள் எசேக்கியேலை சிறப்பாகத் தயார் செய்வதையும் வாசிக்கிறோம். ஒரு இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு மக்கள் செவிகொடுத்தாலும் செவிகொடுக்காவிட்டாலும் அவருடைய இருத்தலே கடவுளுடைய உடனிருப்பை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என்கிற உண்மையைத் தெளிவுபடுத்தி துணிவுடன் இறைவார்த்தைகளை உரக்கச் சொல்ல வேண்டும் என கடவுள் எசேக்கியேலைப் பணிக்கிறார். இது ஒரு இறைவாக்கினரின் கடமையைத் தெளிவுபடுத்துகிறது, மக்களின் அலட்சியம் பற்றி கவலைப்படாமல் கடவுளுடைய செய்தியை உண்மையுடனும் துணிச்சலுடனும் அறிவிக்க நாமும் கடைமைப் பட்டுள்ளோம் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல இறைவார்த்தை அறிவிக்கப்படும் போது அலட்சியம் செய்யாமல் செவிகொடுத்துக் கேட்டு அதன்படி வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.
இயேசு தனது சொந்த ஊரில் புறக்கணிக்கப்படுவதை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். அவர் ஞானத்துடன் கற்பித்தாலும், மக்கள் அவருடைய குடும்ப வரலாற்றைக் கொண்டு அவரைத் தீர்ப்பளித்தனர். அவர் அறிவித்த நற்செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் தவறினர். எனவே, இயேசுவால் தம்முடைய சொந்த மக்கள் நடுவில் வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை. சில நேரங்களில் நமக்கும் இவ்வகை அனுபவங்கள் ஏற்படக்கூடும். நம்முடைய சொந்த மக்களால் நாம் புறக்கணிக்கப்படலாம். ஆனால் நாம் இறைவாக்கினராகப் பணி செய்யவும், நற்செய்தியைப் பரப்பவும் இவ்வனுபவங்கள் நமக்கு தடைகளாக இருக்கக்கூடாது.
நாம் அனைவரும் பலவீனமான மனிதர்கள். ஆயினும் கடவுள் நம் அனைவரையும் அவருடைய இறைவாக்கினர்களாகப் பணி செய்யத் தேர்வு செய்கிறார். நற்செய்தியை நம் வாழ்வாலும் வார்த்தைகளாலும் எடுத்துரைப்பதே நமக்கான அழைப்பு.பிறர் நம்மை அலட்சியம் செய்யலாம். ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். சில சமயங்களில் புனித பவுல் கூறுவதைப் போல நம்முடைய சொந்த பலவீனங்களே கடவுளின் பணியைத் தொடரவிடாமல் தடையாய் இருக்கலாம். அந்த நேரங்களில் நாம் கடவுளின் வல்லமையை நம்ப வேண்டும். அவருடைய பலம் நம் பலவீனத்தில் வெளிப்பட நாம் அனுமதிக்க வேண்டும். அப்போது தீமை நிறைந்த இந்த உலகில் நாம் அனைவரும் உண்மையான இறைவாக்கினர்களாக இருக்க முடியும்.இறைவனின் வாக்கை உரைக்கத் தயாரா?
இறைவேண்டல்
அன்புள்ள ஆண்டவரே, உமது அருளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும் . நாங்கள் உம்முடைய இறைவாக்கினர்களாக உழைத்து உமது வார்த்தைகளைத் துணிச்சலுடன் எடுத்துரைக்கத் தேவையான வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment