இயேசுவை முழுமையாகப் பின்பற்ற தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 13 வாரம் திங்கள்; I: தொநூ:  18: 16-33; II  : திபா 103: 1-2. 3-4. 8-9. 10-11s; III: மத்:   8: 18-22

இயேசுவை பின்பற்றுதல் என்பது எளிமையான காரியம் அல்ல.  பல்வேறு சவால்களையும் இடையூறுகளையும் சோதனைகளையும் வேதனைகளையும் வென்று பின்பற்ற வேண்டும். ஏனெனில் இயேசுவின் மதிப்பீடுகள் ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் அறநெறி. மனிதமும் மனிதநேயமும் இந்த மண்ணில் விதைக்கப்படவும் வாழ்வாக்கப்படவும் இயேசு தன் பணிக்காலம் முழுவதும் பற்பல போதனைகளைப் போதித்தார். இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மக்கள் பல மனநிலை கொண்டவர்களாக இருந்தனர். ஒரு சில மக்கள் இயேசுவின் போதனைகளை ஆழமாக புரிந்து கொண்டனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மனமாற்றம் அடைந்த சக்கேயு மற்றும்  பவுல் போன்றோர் ஆவர்.  இயேசுவின் போதனைகளை மேலோட்டமாகவும் பலர் புரிந்து  கொண்டனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்ட  இரண்டு நபர்கள்.

 மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் " போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இது மறைநூல் அறிஞருக்கிருந்த ஆர்வமிகுதியைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஆனால் அவரின் உள்ளம் மேலோட்டமாக இருந்ததை இயேசு அறிந்து அழைத்தல் வாழ்வின் மேன்மையை அவருக்குச் சுட்டிக்காட்ட "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்று கூறினார்.

இயேசு மறைநூல் அறிஞருக்கு அத்தகைய பதிலை கொடுத்ததற்குக் காரணம் ஒருவேளை அவர் இயேசுவின் பின்னால் சென்றால் தனக்குப் புகழும் செல்வமும் உபசரிப்புகளும் கிடைக்கும் என நினைத்திருக்கலாம். எனவேதான் இயேசு மானிட மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை என கூறியுள்ளார். அழைத்தல் வாழ்விலே எத்தகைய பொருட்கள் மீதும் இவ்வுலகம் சார்ந்த புகழின் மீதும் ஈடுபாடும் நாட்டமும் கொள்ளாமல்,  பிறர் நலத்தோடு உழைக்க வேண்டும் என்ற இந்த வாழ்வியல் சிந்தனைகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும். இயேசு தன் இறையாட்சி பணிக்காலங்களில்  எத்தகைய சூழலிலும் தன்னுடைய பெயருக்காகவோ புகழுக்காகவோ எந்தப் போதனைகளையும் வல்ல செயல்களையும் செய்யவில்லை. இறையாட்சியின் மதிப்பீடுகள் வழியாக மனிதமும் மனிதநேயமும் மதிக்கப்படவும் தங்கள் ஆன்மாவை கடவுளுக்குகந்த ஆன்மாவாக மாற்றிக் கொள்ளவும் தான் பறைசாற்றினார். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் பல நேரங்களில் நம்முடைய பெயருக்காகவும் புகழுக்காகவும் ஆடம்பர வாழ்வுக்காகவும் இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் பதவிகளின் மீதும் அதிகாரங்களின் மீதும் ஆசை கொள்வதைத் தவிர்த்து  அவை அனைத்தும் நிலையற்றவை, இறையாட்சி மதிப்பீடுகள் மட்டுமே உயர்ந்தது என உணரும் பொழுது  இவ்வுலகிலே இயேசுவைப் போல மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நம் வாழ்வின் மதிப்பீடுகள் ஒவ்வொன்றும் பிறருடைய வாழ்வை சீர்குலைப்பதாக இல்லாமல், சீர்ப்படுத்துவதாக இருக்க வேண்டும். எனவே பெயருக்காகவும் புகழுக்காகவும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் பிறர் வாழ்வு வளம் பெற மனிதநேய சிந்தனையோடு செயல்பட முயற்சி செய்வோம்.

இறைவேண்டல்:
வல்லமையுள்ள இறைவா!  நாங்கள் எங்கள்  வாழ்வில் முழுமையாக உம்மைப்  பின்பற்ற அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

12 + 6 =