பெண்மையைப் போற்றுவோமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறு; I: சஞா:  1: 13-15; 2: 23-24; II  : திபா 30: 1,3. 4-5. 10,11ய,12b; III: 1கொரி:  8: 7,9,13-15; IV: மாற்:   5: 21-43

படிப்பிலும் விளையாட்டுத் துறையிலும் புலமை பெற்ற மாணவி ஒருவர் இருந்தார். மாவட்ட அளவில் அவர் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பற்பல விருதுகளை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிக்காகப் பெற்றுள்ளார். மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அந்த மாணவியின் திறமையைப் பாராட்டினார். இப்படிப்பட்ட திறமையும் அறிவுக்கூர்மை மிகுந்த மாணவிக்கு அவரின் பெற்றோர்  பன்னிரண்டாவது வகுப்பு முடித்தபிறகு கல்லூரிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட மாணவியின் ஆசிரியர் "உங்கள் மகளைப் படிக்க வையுங்கள். மிகச்சிறந்த மனிதராக திகழ்வார் " என்று கூறினார்.  அவர் பெற்றோர் ஆசிரியரின் பேச்சு கேட்காமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இறுதியில் திறமையான அந்த மாணவி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் குடும்பப் பெண்ணாக மாற சூழல் ஏற்பட்டது. தன்னுடைய சுயத்தையும் கனவுகளையும் ஒரு பெண்ணாக பிறந்த காரணத்திற்காக இழக்கு நேரிட்டது.

பெண்கள் மனுக்குலத்தின் கண்கள். ஒரு குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பெண்ணாகிய தாய். பெண்கள் தான் இந்த உலகத்திலே  மிகச் சிறந்த வீராங்கனைகள். இதற்கு முக்கிய காரணம் பத்து மாதம்  சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து   புதிய உயிரை இந்த உலகிற்கு கொடுப்பது நாட்டைப் பாதுகாக்கும் படைவீரர்களின் வீரச் செயலுக்குச் சமம். ஏனெனில் தாயின் பிரசவ வலி ஒரு போரிலிருந்து வெற்றி பெற்ற நபருக்கு சமம். அந்த அளவுக்கு போராட்டங்களும் கடினமான சூழலும் பிரசவத்தின்போது இருக்கும். இருந்தபோதிலும் மனத்துணிவோடும் தியாக உள்ளத்தோடும் ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதேபோல குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் குழந்தையை வளர்த்தெடுக்க பலவற்றைத் தியாகம் செய்கிறார். அதில் வருகின்ற சவால்களையும் இடையூறுகளையும் மனத்துணிவோடு எதிர் கொள்கின்றார்.இவ்வாறாக பெண்ணாகிய தாய்க்கு மனவலிமை அதிகம் இருக்கின்றது.

பெண்கள் உடல் வலிமையில் சற்று ஆண்களை விடச் சற்று குறைவாக இருந்தாலும், மனவலிமையில் ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள். கணவனை இழந்த போதும்  மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைக்காகவே வாழக்கூடிய எண்ணற்றத் தியாகம் சிங்கப் பெண்களைக் காண முடியும். ஆனால் மனைவியை இழந்த சில ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் சூழலை நாம் அதிகம் இச்சமூகத்தில் காண முடிகின்றது. இதற்குக் காரணம் பெண்களுக்கு அதிக மன வலிமை உண்டு. ஆனால் பல நேரங்களில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட எண்ணற்றவர்கள் பெண்களை வலுவிழந்தவர்களாகவும்   சமூகத்தில் பேச உரிமை இல்லாதவர்களாகவும் இருக்க அவர்களை ஒடுக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலிலும் எண்ணற்ற சிங்கப்பெண்கள் பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டித் தங்கள் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர்.  

எண்ணற்ற பெண்கள் அறிவியல் துறையிலும் கல்வித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் அரசியல் துறையிலும் அரசுத் துறையிலும்   சாதனைகள் பல புரிந்து வருகின்றனர். ஏன் அரசு பொதுத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக தேர்ச்சி விழுக்காட்டைப் பெறுகின்றனர். இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டுவது ஆண்களை குறைவாக மதிப்பிட்டு கூறுவதற்காக அல்ல. மாறாக,  பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே . எனவே பெண்மையை நாம் போற்றி அவர்கள் மென்மேலும் வளர ஒவ்வொரு ஆணும் ஊக்கம் ஊட்டவேண்டும்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்டனர். சமூகத்தில் அவர்கள் கருத்து சொல்வதையும் சமூகத்தில் அதிகமாக நடமாடுவதையும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட யூத ஆண்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவர்களுக்கு ஆன்மாவே இல்லை என்ற பார்வை கூட இருந்தது. ஆனால் இயேசுவின் பார்வை அவர்களின் பார்வையை விட சற்று மேலோங்கி இருந்தது. தன்னுடைய இறையாட்சிப் பணியில் ஆண்களைப் போல பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஆண் சீடர்கள் இருந்ததைப் போல பெண் சீடர்களும்  இயேசுவுக்கு இருந்திருக்கின்றார்கள் என விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். நலமளிக்கக்கூடிய பணியில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்களுக்கு நடந்த இரண்டு வகையான வல்ல செயல்களை நாம் காண்கிறோம். முதலாவதாக தொழுகைக் கூட தலைவர் யாயிர் மகளை இயேசு நலமாக்கினார். இரண்டாவதாக 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரின் நம்பிக்கையின் பொருட்டு நலமளித்தார். இந்த இரண்டு வல்ல செயல்களிலும் பெண்கள் மீது இயேசு கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் மாண்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. இறையாட்சிப் பணியில் இயேசு பரபரப்பாக  இருந்த பொழுதும் தொழுகை கூடத் தலைவரின் மகளுக்கு நலமளிக்க அவருடைய வீட்டிற்குச் செல்வதைப் பார்க்கிறோம். அதேபோல 12 ஆண்டுகளாக இரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எண்ணற்ற பாதிப்புகளை அடைந்திருக்கலாம். ஆனால் மனத் துணிவோடு அந்தப் பெண் ஆணாதிக்க சிந்தனை கொண்ட அந்த ஆண்கள் மத்தியில் சிங்கப் பெண்ணாக இயேசுவிடம் வந்தார். தன்க்கு நலம் கொடுக்குமாறு இயேசுவைத் தொந்தரவு செய்யாமல் அவரின் ஆடையைத் தொட்டாலே நான் நலம் அடைவேன் என்ற ஆழமான நம்பிக்கையில் நலம் பெற்றார். இயேசு அந்தப் பெண்ணின் நம்பிக்கையின் பொருட்டும் இந்த சமூகத்தில் அவரை நலமோடு வாழ வைக்க வேண்டுமென்ற மனிதநேய பார்வையின் பொருட்டும் அவருக்கு நலமளிக்கும் பணியினை செய்தார்.

இன்றைய நற்செய்தி நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் பெண்கள். என்றாலே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுகின்றனர். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. பல நேரங்களில். பெண்கள் படித்து மிகச்சிறந்த திறமையாளர்களாக இருந்த போதிலும்  புரிதலற்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் வீட்டுப் பெண்களாக மாற்றி  அவர்களை விடுகின்றனர். வன்முறை சிந்தனை கொண்ட ஒரு சில ஆண்கள், தான் ஒரு பெண்ணாகிய தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் என்பதை மறந்து பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை மாறி நம்மோடு வாழக்கூடிய நம் தாய் வயதுக்கு ஒத்த பெண்களைத் தன் தாயாக கருத வேண்டும். நம்முடைய வயதுக்கு முந்திய பெண்களை அக்காவாகவும் வயதுக்கு குறைவாகவுள்ள பெண்களை தன் தங்கையாகவும் மகளாகவும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்ற பொழுது எந்தப் பெண்ணுக்கும் எத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாது. சிங்கப் பெண்களாக இரவு நேரத்தில் கூட மனத் துணிச்சலோடு வலம் வர முடியும். எனவே நம்மோடு வாழக்கூடிய பெண்களை உற்சாகப்படுத்தி அவர்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற நாம் ஒவ்வொருவரும் ஊன்றுகோலாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

ஆணாதிக்க சிந்தனை என்பது ஆண்களிடத்தில் மட்டுமல்ல. பெண்களிடத்திலும் அதிகம் இருக்கின்றது. அவற்றை களைந்து பெண்களும் ஆண்களும் சமம் என்ற மன நிலையைப் பெற வேண்டும். அவர்கள் பற்பல சாதனைகள் செய்ய ஊக்கமும் வழியும் காட்ட வேண்டும். அவ்வாறு பெண்மையைப் போற்றி அவர்கள் வாழ்வு வளம் பெற உதவி செய்யும் பொழுது, இந்தச் சமூகம் உயர்வு பெற்ற சமூகமாக மாறும். இந்த உலகத்தில். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அதே போல் இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் உயர்ந்தவர்கள் இல்லை. அப்படித் தாங்கள் தான் உயர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டால் , அவர்களைப்போல முட்டாள்கள் இந்த உலகத்தில்  இல்லை. எனவே நம்மால் முடிந்தவரை பெண்மையை போற்றுவோம், ஆண்டவர் இயேசு கண்ட இறையாட்சி சமத்துவ சமூகத்தை இந்த மண்ணிலே படைப்போம். வாரீர் ...

இறைவேண்டல் : 
அன்புத் தந்தையே இறைவா! எங்களைப் பெற்று வளர்த்த தாய்க்காகவும்  எங்கள் மனைவிக்காகவும் எங்கள்  சகோதரிகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அவர்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் பெண்மையை போற்றி அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல உம் திருமகன் இயேசுவை போல கருவிகளாகப் பயன்படத் தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 8 =