தூய ஆவியாரின் தூண்டுதலின் படி வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


தூய ஆவி ஞாயிறு; I: திப: 2:1-11; II: தி.பா: 104: 1ab,24ac. 29bc-30. 31,34; III: கலா:  5: 16-25; IV : யோவான் 15: 26-27; 16: 12-15

ஒரு அருட்சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு.  அவருடைய ஆரம்ப பயிற்சி காலத்திலே குழும அனுபவத்திற்காக சென்றபொழுது அவ்வில்லத்திலிருந்த மற்றொரு அருட்சகோதரி இவரை அன்பியக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அன்பியம் நடக்கின்ற வீட்டிற்குச் சென்ற உடன் அவ்வருட்சகோதரி பயிற்சியில் இருக்கும் சகோதரியிடம் இறைவார்த்தைப் பகிர்வைச் செய்யுமாறு கூறிவிட்டாராம். முதலில் சற்று தயங்கிய இச்சகோதரி பிறகு தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார். ஆயினும் முன்னரே கூறியிருந்தால் ஏதாவது ஒரு பகுதியை நன்கு வாசித்துத் தயார் செய்திருக்கலாமே என்ற ஒரு சிந்தனை அவர் மனதிற்குள் இருந்தது. அத்தோடு அன்பியத்திற்கு வந்திருப்பவர்கள் எல்லாரும் தன்னை விடப் பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்கள், என்றெல்லாம் பய உணர்வுகள் தோன்றியது. பின் ஒருவழியாகத் தன் மனதை மாற்றிக்கொண்டு அமைதியாகக் கண்களை மூடி இவ்வாறு செபித்தார்." தூய ஆவியாரே நானல்ல. நீர் தான் பேசப்போகிறீர். என் நாவில் தங்கும். என்னை வழிநடத்தும்" . அவ்வாறு செபித்த பிறகு தூய ஆவியாரின் வழிநடத்துதலை உண்மையாக உணர்ந்தவராய் இறைவார்த்தையைப் பகிர்ந்ததாக அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை தான் எச்செயலைச் செய்தாலும் தூய ஆவியை விரும்பி அழைப்பதாகவும் அவரின் தூண்டுதலை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நாம் தூய ஆவியாருடைய விழாவைக் கொண்டாடுகிறோம். "நான் சென்று உங்களுக்குத் துணையாளரை அனுப்புவேன். அவர் உங்களுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்துவார். அவர் நான் சொன்னவற்றிற்கு சான்று பகர்வார் "என இயேசு கூறிய வார்த்தைகளை கடந்த நாட்களில் நாம் தியானித்தோம்.
வாக்களிக்கப்பட்ட அத்துணையாளர் சீடர்கள் மீது இறங்கி அவர்களை திடப்படுத்திய அந்தாளைத் தான் நாம் இன்று கொண்டாடுகிறோம். அவ்விழா "பெந்தேகோஸ்தே பெருவிழா " எனவும் அழைக்கப்படுகிறது.

வெற்றிடமாய் இருந்த அவ்வுலகை கடவுள் தன் படைப்புக்களால் அலங்கரித்த போதே தூய ஆவியார் இருந்தார் என்பதை நாம் தொடக்க நூலில் வாசிக்கிறோம். தந்தை கடவுளின் மீட்புத் திட்டத்தில் தூய ஆவியாரின் பங்கு அளப்பரியது.
இவ்வுலகத்தை மீட்க வந்த இயேசு எனும் மெசியா தூய ஆவியாரால் கன்னியாக இருந்த மரியாவிடம் கருவானார். இயேசு கருவானதிருந்து அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் தூய ஆவியானவர் இயேசுவை வழிநடத்தினார் என விவிலியம் சான்று பகர்கின்றது. இயேசுவின் நாற்பது நாள் தவம், அவர் சோதனைகளை வெற்றிகொண்ட நிகழ்வு,திருமுழுக்கு, தாபோர் மலைமேல் உருமாறிய நிகழ்வுகளெல்லாம் தூய ஆவியார் இயேசுவுடன் வழிநடந்தார் என்பதற்குச் சான்றுகள்.

அதே தூய ஆவியார் இயேசுவின் வழிநடந்த சீடர்களை ஆட்கொண்டு அவர்களை கடவுளின் மீட்புத்திட்டத்தின் கருவிகளாகப் பயன்படுத்தினார். இன்றைய முதல் வாசகம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இறைவார்த்தையை அறிவிக்கும் வல்லமையை தூய ஆவியார் சீடர்களுக்கு அளித்தார். அவர்களின் பயத்தை நீக்கினார். எதிரிகளின் முன் நின்று இயேசுவுக்குச் சான்று பகர திடம் தந்தார். தூய  ஆவியார் இன்று வரை திருஅவை உறுப்பினர்களான நம் ஒவ்வொருவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இல்லையெனில் திரு அவை என்றோ முடங்கிப்போயிருக்கும்.

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தூய ஆவியாருடைய வழிநடத்துதலை நம்மால் உணரமுடியும். கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்த நாம் அனைவருமே ஒவ்வொரு நாளையும்,ஒவ்வொரு செயலையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால்தான் தொடங்குகிறோம். நம்முடைய கூட்டங்களைத் தூய ஆவியாரின் பாடலோடு தொடங்குகிறோம். இவையெல்லாம் நம்முடைய முன்னோர்கள் தூய ஆவியாரின் வழிநடத்துதலை அனுபவித்து அவ்வனுபவத்தையே நமக்கும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதையல்லவா உணர்த்துகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதலின் படி வாழ புனித பவுல் நம்மை அழைக்கின்றார். ஆவியார் நம்முடன் இருந்தால் தேவையற்ற உலக நாட்டங்களில் சிக்கி அழிந்து போகாமல் நம் வாழ்வு கனிகொடுக்கும் வாழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வளர்ந்து வரும் இவ்வுலகம் நம்மைப் பணம், பதவி, சிற்றின்பம், பொழுதுபோக்கு போன்றவற்றிற்குத்தான் அழைத்துச் செல்கின்றது. நாமும் அவற்றுள் நாளுக்கு நாள் விழுந்து கொண்டே இருக்கிறோம். தூய ஆவியாரை நாம் நாடுவோம். அவர் நம் மனச்சான்றாக இருந்து  நல்லற்றை நாடவும் அவற்றையே செய்யவும் நம்மைத் தூண்டுவார். இறைவனை நம்முள் உணரவைப்பார். 

இறைவேண்டல்

தூய ஆவியாரே எம்முள் எழுந்து வாரும். இறைவனுக்கு உகந்தவற்றை மட்டுமே செய்ய எம்மைத் தூண்டியருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

17 + 2 =