Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கிரேக்க கணித மேதை | Maths
மிகப்பழங்கால கிரேக்க கணித மேதை பித்தகோரஸ். இவரது காலம் கி.மு. 582-500. இவர் துருக்கிக்கு அப்பால் உள்ள சாமோஸ் என்ற தீவில் கி.மு. 582இல் ஓர் செல்வகுடியில் பிறந்தவர். இளமையிலேயே சிறந்த நுண்ணிய அறிவும், ஆர்வமும் பெற்று விளங்கினார். ஆரம்பகாலத்தில் இவரது கேள்விக்கு ஆசிரியர்களே விடை கூறமுடியாது இருந்தது.
இவர் மிலிட்டசைச் சார்ந்த 'தேல்ஸ்' என்பவரிடம் கல்வி கற்றார். அப்போதுதான், கணிதத்தில் புகழ் வாய்ந்ததாக பேசப்படும் பிதகோரஸ் தேற்றத்தை உருவாக்கித் தந்தார். இது இன்றுவரை கணிதத்தில் பயன்பாடு மிக்கதாக உள்ளதே இதன் சிறப்பு.
இது ஒரு செங்கோணத்தில் உள்ள நீண்ட பக்கத்தில் வரையப்படும் சதுரத்தின் பரப்பு, மற்ற இருபக்கங்களில் வரையப்படும் சதுரங்களின் பரப்பளவு கூடுதலுக்குச் சமமாகும் என்பதே இத்தேற்றம்.
அதுபோலவே ஒரு முக்கோணத்திற்கு உள்ளே இருக்கும் மூன்று கோணங்களின் அளவின் கூட்டுத் தொகை, இரண்டு செங்கோணங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் என்ற தேற்றத்தையும் இவரே தந்தார்.
இக்காலம் கி.மு. பல நூல்கள் கொண்டு கற்க முடியாத மிகப்பழங்காலம். பல அறிஞர்களை நாடியே கற்பது வழக்கம். எனவே இவர் அரேபியா, பாபி லோனியா, பாரசீகம் என பல நாடுகளுக்கும் கல்விக்காகவே பயணம் செய்தார். (இந்தியாவிற்கும் வந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான தகுந்த ஆதாரமில்லை) அதோடு, புகழ்பெற்ற எகிப்துக் கும் சென்றார்; அங்கே இசையும் கற்றார். அதையும்கூட இவர் கணிதமாக்கி, 'ஓர் இசைக் கருவியின் நரம்பினது நீளம் அது எழுப்பும் நாத ஓசைக்கு எண் அளவில் தொடர்புள்ளது' என்று கண்டார். இசைக்கென்று 'ஒத்திசைவுக் கொள்கை' (Theory of Harmony) என்பதை யும் தந்தவர் இவர்.
எல்லாப் பொருள்களின் அம்சமும் எண்தான். அதன் எல்லாத் தொடர்புகளையும் எண்ணைக் கொண்டு வெளியிடலாம். எனவே இப்பிரபஞ்சத்தின் முதல் கொள்கையே எண்தான் என்பதில் இவர் உறுதியாய் இருந்தார்.
இவரது சொந்த பூமியான சமோசில் அடக்குமுறை அதிகம். எனவே அதைவிட்டு விலகி தனது 50ஆம் வயதில், கலைகளின் புகலிடமான இத்தாலி சென்றார். தெற்கு இத்தாலியில் உள்ள 'க்ரோடோனா' என்ற இடத்தில் ஒரு பள்ளியை நிறுவினார். இவரிடம் அங்கே ஏறத்தாழ 300 மாணவர்கள் கல்வி பயின்றனர். தனது அனுபவம், கல்வி, கணிதம், திறனை அவர்களுக்கு இவர் அள்ளி வழங்கினார். கணிதம், இசை, தத்துவம், வான சாஸ்திரம் என பல்கலை பயிற்றுவிக்கப்பட்டது.
தத்துவம் என்றால், இவர் வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்பதையும், வாழ்வில் நேர்மை மிக அவசியம் என்பதும் அசையா நம்பிக்கை கொண்டு, அதனை வலியுறுத்தினார்.
உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை என்கிற 'அழிவில்லாக் கொள்கை' என்ற தத்துவத்தில் இவருக்கு பிடிப்புண்டு. நல்ல ஆன்மா சொர்க்கம் என்றும், சொர்க்கம் செல்லாத ஆன்மா மனிதனை, அல்லது விலங்கினை அடைகிறது என நம்பினார். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நன்னடத்தை ஒழுக்கம் என்பதன் உயர்வை வலியுறுத்தினார். அகிம்சையை ஆதரித்தார். மது,புலால் இரண்டையும் வெறுத்தார்.
இப்படி வானியல், கணிதம், தத்துவம், கல்வி போதனை என நாட்டம் கொண்ட இவருக்கு 'சூரிய குடும்பம்' பற்றிய வானியல் அறிவும் இருந்தது. பூமி தன்னைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பது இவர் கருத்து. பூமியை அன்றே ஒரு 'கோளம்' என்று சொன்னார். இவர் கி.மு.500இல் மறைந்தாலும், இன்றளவிலும் உலகினை மாற்றிய உயர்ந்தோர் பட்டிய லில் இவர் பெயரும் இருக்கிறது எனலாம். "எவ்வளவு கரடுமுரடு ஆயினும் எப்போதும் சிறந்ததையே தேர்வு செய். பழக்கம் அதனை எளிதாக்கும்" என்ற கருத்துடை யவர் இவர். அதனை இவர் போதிக்கவும் செய்தார்.
Add new comment