தூய ஆவியால் இயக்கப்படத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஏழாம்  திங்கள்; I: திப: 19: 1-8; II: தி.பா: 68: 1-2, 3-4, 5-6; III : யோ: 16: 29- 33

இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை தூய ஆவியால் இயக்கப்பட்ட வாழ்வு வாழ அழைப்பு விடுக்கின்றது. தூய ஆவியார் நம்முடைய வாழ்வுக்கு அருளையும் ஆற்றலையும் வழங்குகின்றார். ஒரு குழந்தை பிறந்த பிறகு திருமுழுக்கு என்னும் அருள்சாதனத்தின் வழியாகத் தூய ஆவியைப் பெறுகின்றது.இந்தத் தூய ஆவியார் அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆற்றலையும் அருளையும் வழங்குகின்றார். தூய ஆவியால் இயக்கப்படும் குழந்தை கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இம்மண்ணுலகில் மனிதராக பிறந்த இறைமகன் இயேசு.

இயேசு கருவாய் உருவானது தூய ஆவியால்தான் . அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலைநிலத்தில் நாற்பது நாள் நோன்பு இருக்கத் தூண்டப்பட்டது தூய ஆவியாலேயே. திருமுழுக்குப் பெறும் போதும், தாபோர் மலையில் உருமாறும் போதும் தூயஆவியார் புறா வடிவில் இறங்கியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். இவ்வாறாக இயேசுவின் வாழ்வு தூய ஆவியாரால் முற்றிலும் இயக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.அவருடைய வாழ்வு தந்தையாம் கடவுளுக்கு உகந்ததாகவும் மக்களுக்கு வாழ்வளிப்பதாகவும் இருந்தது.

அத்தகைய தூய ஆவியாரையே இயேசு நமக்கும் தருவதாக வாக்களிக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றவர்களின் மேல் தூய ஆவியார் இறங்கி வருவதையும் அவர்கள் பரவசப்பேச்சு பேசுவதையும் நாம் வாசிக்கிறோம். அவர்கள் தூய ஆவியால் இயக்கப்பட்டார்கள். இயேசுவின் சீடர்களாய் ஆனார்கள்.

நாமும் தூய ஆவியைப் பெற்றவர்களே. திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் போன்ற அருட்சாதனங்கள் வழியாகத் தூய ஆவியை நாம் பெற்றிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் நாம் நம்பிக்கையோடு செபிக்கும் போதும்,இறைவார்த்தையைத் தியானிக்கும் போதும் தூய ஆவியார் நம்மில் வாழ்கிறார். ஆயினும்  முழுமையாகத் தூய ஆவியாரால் இயக்கப்பட நாம் அனுமதிக்கிறோமா என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாட நம்மையே நாம் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நாளைய நிலை என்னவென்று அறியாத காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். நம்மையே முழுமையாக தூய ஆவியாரிடம் ஒப்படைப்போம். நம் நம்பிக்கையை அவர் ஆழப்படுத்துவார். நம்மை அவர் வழிநடத்துவார்.

இறைவேண்டல்

அன்பு இறைவா உமது தூய ஆவியால் இயக்கப்பட நாங்கள் விரும்புகிறோம். எங்களை வழிநடத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 1 =