தந்தையாம் கடவுளை அறிய ஆர்வப்படுகிறோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


 பாஸ்கா காலம் -ஐந்தாம் திங்கள்  
திருத்தூதர்களான புனித பிலிப்பு, யாக்கோபு; I: 1 கொரி: 15: 1-8; II: தி.பா: 19: 1-2. 3-4 ; III : யோவான்: 14: 6-14

இன்றைய நாளில் நம் தாய்த்திருஅவையோடு இணைந்து திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபுவின் விழாவினைக் கொண்டாடுகின்றோம். இந்தப் புனிதர்களின் வாழ்வு நம்மைக் கடவுளை இன்னும் அனுபவிக்க வழிகாட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய நாம் பலவற்றை ஆர்வத்தோடு பெற்றுக்கொள்ள அறிந்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோமா என்றால் அது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இன்றைய விழா புனிதர்கள் தந்தையாம் கடவுளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தங்கள் வாழ்வை வாழ்ந்தனர்.

திருத்தூதர் பிலிப்பு இயேசுவிடம் "'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இது பிலிப்பின் ஆன்மீகத் தேடலை சுட்டிக்காட்டுகின்றது. இந்த தேடல் பிலிப்பின் மேலோட்டமான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டினாலும் தந்தையாம் கடவுளை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை பார்க்க முடிகின்றது. பிலிப்பின் கேள்வியைப் புறக்கணிக்காமல் இயேசு ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10) என்று கேள்வி கேட்டார். தேடல் உள்ளவர்களைக் கடவுள் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்தக் கேள்வியின் மூலம் இயேசு தன் வழியாகவும் தந்தையாம் கடவுள்  செயல்படுகிறார் என்ற இறையியல்  உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்று விழா கொண்டாடுகின்ற இரு புனிதர்களுமே கடவுள் மீது உள்ள தேடலில்  இருந்தனர். கடவுளைத் தேடுவது என்பது வெளிப்படையான ஒன்றல்ல ; மாறாக,  உள்ளத்தின் ஆழத்திலிருந்து கடவுள் மீது கொண்ட தேடல் இருக்க வேண்டும்.  இயேசுவைப் பின்பற்றிய திருத்தூதர்கள்  அனைவருமே தொடக்கத்தில் மேலோட்டமான புரிதலை இயேசுவின் மீது கொண்டிருந்தாலும், இயேசுவை முழுமையாகப் புரிந்து கொண்டு இறை அனுபவத்தைப் பெற்ற பிறகு இயேசுவிடம் தந்தையாம் கடவுளைக் கண்டனர். அந்த நம்பிக்கையை உலகெல்லாம் நற்செய்தியாகப் பறைசாற்றினார். அப்படி நற்செய்தி அறிவித்தவர்களின்  வரிசையில் வருபவர்கள் தான் இன்றைய புனிதர்கள் பிலிப்பு மற்றும் யாக்கோபு.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இந்த இரு புனிதர்களைப் போல தந்தையாம் கடவுளை இயேசுவிடம் கண்டு அனுபவித்து அவரின் மதிப்பீடுகளின் படி வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் வாழும் வாழ்வை கிறிஸ்துவின் மனநிலையில் வாழ முடியும். கிறிஸ்துவின் மனநிலையை வாழும் பொழுது நம் வாழ்வில் இயேசுவின் இறையாட்சி செயல்பாடுகளை வாழ்வாக்க முடியும். தேடல் உள்ளவர்தான் உண்மையை அறிந்து கொள்வார். கடவுளை நாம் தேடி செல்லும் பொழுது தான் கடவுள் தரும் இறை அனுபவத்தை நாம் பெற முடியும். அந்த இறை அனுபவத்தைப் பெற்றால்தான் பிறருக்கும் அதனை வழங்க முடியும். பிறருக்கு நாம் பெற்ற இறைஅனுபவத்தை நற்செய்தியாக வழங்கும்  பொழுதுநாம் இயேசுவின் கருவிகளாக மாறுகிறோம். எனவே  நம்முடைய அன்றாட வாழ்வில்  இறை அனுபவத்தை அறிந்து கொள்ளத் தடையாயுள்ள இவ்வுலகம் சார்ந்த சிற்றின்பங்களையும் தவறான சிந்தனைகளையும் எதிர்மறையான எண்ணங்களையும் அகற்றிவிட்டு,  கடவுளுக்கு உகந்த வகையில் வாழ ஆர்வத்தோடு செயல்படுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபை போல எந்நாளும் உண்மையை அறிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் ஆர்வத்தோடு தேடி வர அருளையும் ஆசியையும் தாரும். இதன் வழியாக உம்முடைய இறையாட்சி விழுமியங்களுக்குச் சான்று பகரக் கூடிய  கருவிகளாக மாறத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 4 =