Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மிகுந்த கனி தர வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பாஸ்கா காலம் -ஐந்தாம் ஞாயிறு; I: திப: 9: 26-31; II: தி.பா: 22: 26-27, 28, 30, 31-32; III: 1 யோ: 3: 18-24; IV : யோவான்: 15: 1-8n
மனித வாழ்வு என்பது பிறருக்குக் கனி கொடுக்க வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புகளுமே பிறருக்குக் கனி தரும் இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயி விவசாயம் செய்யும் பொழுது தனக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் தன் வியர்வையை மண்ணில் சிந்துகிறார். ஆசிரியர் தங்கள் மாணவர்கள் படித்து நல்ல பலன் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பாடம் கற்பிக்கின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இந்த சமூகத்தில் சிறந்தவர்களாக பலன் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பாசத்தோடு வளர்த்து உருவாகிறார்கள். மரஞ் செடிகள் பருவகாலத்தில் தன்னிடமிருக்கும் பலனை விளைச்சல் வழியாக கொடுக்கின்றன.இவ்வாறாக எல்லா படைப்புகளுமே அதன் பயனையும் பலனையும் பிறருக்குக் கொடுத்து வருகின்றன. அதேபோல நாம் ஒவ்வொருவருமே மிகுந்த கனி தந்து பலன் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் மிகுந்த கனி கொடுப்பவர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திராட்சைச் செடியும், கிளைகளும் பற்றி பேசுகிறார். தன்னை திராட்சை செடியாகவும் நம்மை அதன் கிளைகளாகவும் இயேசு உருவகப்படுத்தியுள்ளார். திராட்சை செடியின் பலன் அதன் கொடியில் தான் தெரியும். கொடியானது மிகுந்த பலன் கொடுக்க வேண்டுமெனில் அதன் செடியோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் கொடியின் வழியாக மிகுந்த விளைச்சலைக் காணமுடியாது. நம்மைப் படைத்த கடவுள் நாம் மிகுந்த பலன் கொடுப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். எனவேதான் ''இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்'' (யோவான் 15:8). நம்மைப் படைத்த தந்தையின் விருப்பம் நாம் இயேசுவின் சீடராய் வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். நாம் மிகுந்த கனி தர வேண்டுமெனில் எப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
முதலாவதாக, கடவுளோடு இணைந்து இருக்க வேண்டும். இணைந்திருத்தல் என்பது நம்முடைய மனித வாழ்வில் அவசியமான ஒன்றாகும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எந்த படைப்புகளுமே தனித்துக் கனி தர இயலாது. மாறாக, இணைந்திருத்தலின் வழியாகத்தான் கனி தர இயலும். தொடக்கத்தில் கடவுள் ஆணைப் படைத்த பொழுது அவருக்கு துணையாக பெண்ணை படைத்தார். இதற்கு முக்கிய காரணம் இணைந்திருத்தலின் வழியாக தான் மனித குலம் இன்னும் பெருகி மண்ணுலகை நிரப்பும் என்பதற்காக ஆகும். அதேபோல ஒரு மரம் கனி தர வேண்டுமெனில் மற்றொரு மரத்தின் மகரந்தச் சேர்க்கைத் தேவை. அதேபோலத் தான் ஒரு மனிதன் வாழ்வில் கனி தரவேண்டுமமெனில் கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். கடவுளோடு இணைந்திருந்த அனைவருமே வாழ்வில் வெற்றியை பெற்றுள்ளனர். கடவுளோடு இணைந்திராதவர்கள் கடவுளின் அருளை இழந்துள்ளனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் ஆவர். கடவுளோடு இணைந்து இருந்ததற்கு மிகச்சிறந்த உதாரணம் அன்னை மரியாள். கடவுளோடு இணைந்து தூய்மையான வாழ்வு வாழ்ந்ததால் தான் 'அருள் நிறைந்த மரியே' என்ற பெயரைப் பெறும் அளவுக்கு பாக்கியம் பெற்றார். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" என்று கூறியுள்ளார். நம்முடைய அன்றாட வாழ்வில் பல நேரங்களில் வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் இடையூறுகளையும் சந்திக்க முடியாமல் துன்பப்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் பல நேரங்களில் நாம் கடவுளோடு இணைந்திருப்பதில்லை. நாம் கடவுளோடு இணைந்திருந்தால் எத்தகைய இடையூறுகளும் தடைகளும் துன்பங்களும் நம் வாழ்வில் வந்தாலும், அவற்றை நாம் முறியடிக்க முடியும். அதற்கு கடவுளோடு நம்முடைய செபத்தின் வழியாகவும் நற்செயல்களின் வழியாகவும் அறச்செயல்களின் வழியாகவும் இணைந்திருக்க முயற்சி செய்வோம்.
இரண்டாவதாக, கடவுளோடு இணைந்த பிறகு நாம் அவரோடு நிலைத்திருக்க வேண்டும். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்" என்று கூறியுள்ளார். கடவுளோடு இணைந்திருந்த பிறகு நம்முடைய உறவைப் பிளவுபடுத்திக் கொள்ளாமல் இறுதிவரை அவரது உறவில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு கூடிய உறவில் நிலைத்திருக்கும் பொழுது எண்ணற்ற துன்பங்களும் தடைகளும் இடையூறுகளும் வரும். அவற்றை கண்டு மனம் தளராமல் துணிவோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாசு தொடக்கத்தில் இயேசுவோடு இணைந்திருந்தார். ஆனால் அவர் இயேசுவோடு நிலைத்திருக்கவில்லை. எனவேதான் மிகப்பெரிய பாவத்தைச் செய்தார். ஆனால் இயேசுவோடு நிலைத்திருந்த மற்ற சீடர்கள் தூய ஆவியின் வல்லமையைப் பெந்தகோஸ்தே நாளிலே பெற்ற பிறகு மிகுந்த வல்லமையோடு நற்செய்தியைப் பறைசாற்றுவதன் வழியாகக் கனி தந்தனர். நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளோடு இணைந்திருந்து அதிலேயே முழுவதும் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுதான் வாழ்விலே மிகுந்த கனி தந்து மகிழ்ச்சியையும் நிறைவையும் காணமுடியும்.
மூன்றாவதாக மிகுந்த கனி தர செயல்பாடு மிக அவசியம்."நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" இன்று இரண்டாம் வாசகத்தில் யோவான் கூறுவதுபோல நம்முடைய சொல்லிலும் செயலிலும் உண்மையான அன்பு இருக்கின்ற பொழுது நான் மிகுந்த கனி தரமுடியும். உண்மையான அன்பு இருந்தால் தான் இயேசுவின் மனநிலையை நம்மால் பிரதிபலிக்க முடியும். புனித அன்னை தெரசாவை போல எண்ணற்ற புனிதர்கள் மனிதம் சார்ந்த பணிகளைச் செய்தனர். இதற்கு முக்கிய காரணம் இயேசுவின் மனநிலையில் உண்மையான அன்பை வாழ்ந்ததேயாகும். எனவே உண்மையான அன்போடு நம் வாழ்வில் செயல்பட கடவுளோடு இணைந்திருந்து நிலைத்திருக்க முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் மிகுந்த கனி தரமுடியும். மிகுந்த கனி தர தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் நாங்கள் உம்மோடு எந்நாளும் இணைந்திருந்து உமது அன்பில் நிலைத்திருக்க அருளைத் தாரும். அதன்வழியாக உண்மையான அன்போடு பிறருக்குப் பலன் கொடுக்க ஆற்றலையும் வல்லமையையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment