Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனித யோசேப்பு வழியில் நடக்க தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் -நான்காம் சனி
தொழிலாளரான புனித சூசையப்பர் திருவிழா ; I: திப: 13: 44-52; II: தி.பா: 98: 1, 2-3ab, 3cd-4; III : யோவான்: 13: 54-58
உரோமைத் திருவழிபாட்டு நாள்காட்டியின்படி ஆண்டிற்கு இரண்டுமுறை புனித யோசேப்புக்கு விழா எடுக்கப்படுகிறது. மார்ச் 19ஆம் நாள் “தூயகன்னிமரியின் கணவர்” என்ற பெயரிலும் மே முதல் நாள் “தொழிலாளர்” என்ற பெயரிலும் புனித யோசேப்பு நினைவு கூறப்படுகிறார். புனித யோசேப்பு நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். கடவுளின் மீட்புத் திட்டம் இந்த உலகில் செயல்படுத்தப்பட மிகச் சிறந்த கருவியாகப் பயன்பட்டவர் புனித யோசேப்பு ஆவார்.
ஒரு அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த ஒரு மாணவர் கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதேபோல நன்கு படிக்கக்கூடிய முதல் மாணவனாகவும் திகழ்ந்தார். ஒருமுறை அவர் பிறந்த ஊரில் கபடி போட்டி நடத்தப்பட்டது. ஆர்வத்தின் மிகுதியால்இரவு முழுவதும் கபடி போட்டியைக் கண்டுகளித்தார். அடுத்த நாள் பள்ளிக்குச் செல்லாமல் உறங்கிவிட்டார். எனவே தன்னுடைய வகுப்பாசிரியருக்கு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் காய்ச்சல் என்று பொய்யான காரணத்தை எழுதாமல், கபடி விளையாட்டு போட்டியைப் பார்க்கச் சென்றதால் பள்ளிக்கு வரவில்லை என்று உண்மையை எழுதினார். இதைப் பார்த்த வகுப்பாசிரியர் மிகுந்த ஆச்சரியத்தோடு அந்த மாணவனை பார்த்தார். அந்த மாணவனின் நேர்மை தன்மையைக் கண்டு உற்சாகமூட்டி ஊக்கமூட்டினார். பிற மாணவர்களையும் அழைத்து அந்த மாணவனின் நேர்மையான மனநிலையை மேற்கோள்காட்டி நேர்மையாக வாழவேண்டும் என்று வழிகாட்டினார். நேர்மையாக வாழ்ந்த இந்த மாணவன் தான் அந்த வகுப்பிலே முதல் மதிப்பெண் எடுக்க கூடிய மாணவனாக இருந்தார். மற்றவர்கள் நேர்மையாகக் கடிதம் எழுதிய மாணவரைப் பார்த்து "எவ்வாறு இவ்வளவு நேர்மையாக இருக்க முடிந்தது?" என்று கேட்டனர். அதற்கு அந்த மாணவர் "நேர்மையும் உண்மையும் ஒழுக்கமும் ஒரு மாணவரிடம் இருந்தால், அவரால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற தனது ஆசிரியர் கூறிய வார்த்தைகள் தான் தன்னையே நேர்மை உள்ளவராக வாழ வழிகாட்டியுள்ளது" என்று கூறினார்.
நேர்மை நிறைந்த வாழ்வுக்கு இன்று விழா கொண்டாடுகின்ற புனித யோசேப்பு முன்னுதாரணமாக இருக்கின்றார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை உள்ளவராக வாழ்ந்தார். எனவே தான் தன்னோடு மனம் ஒப்பந்தமான மரியா திருமணத்திற்கு முன்பாக கருவுற்று இருக்கிறார் என அறிந்ததும் அவரைக் கேவலப்படுத்த விரும்பாமல், அவரை மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார். இது அவரின் நேர்மைகக்குச் சான்றாகும். அதேபோல புனித யோசேப்பு நேர்மையோடு உழைக்கக்கூடிய ஒரு மனிதராக வாழ்ந்தார். திருஅவை புனித யோசேப்புவை உழைப்பாளர்களின் பாதுகாவலராக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு உழைப்பாளியாக இருந்தாலும் நேர்மையோடு கடவுளுக்குப் பயந்து உழைக்க வேண்டும் என்பதாகும்.
இன்றைய காலகட்டத்தில் உழைப்பிலே ஊழல் நிறைந்துள்ளது. வியாபாரம் என்ற பெயரில் மனிதமும் மண்ணும் சுயநலத்தோடு சுரண்டப்படுகிறது. சாதாரண பொருளுக்கு கிடைக்கும் மதிப்பு உயிருள்ள மனிதனுக்குக் கிடைப்பது இல்லை. உண்மைக்குப் பதிலாக பொய்மையும் நீதிக்கு பதிலாக அநீதியும் இந்த உலகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலை சமூகத்தில் மாறும் பொழுது இந்த உலகம் நேர்மை நிறைந்த உலகமாக மாறும். இதைத் தான் இன்றைய விழா நாயகர் புனித யோசேப்பு நமக்கு தன் வாழ்வின் வழியாக அறிவுறுத்துகின்றார்.
"உழைக்காதவன் உண்ணலாகாது " என்று திருத்தூதர் பவுல் தன்னுடைய திருமுகத்தில் எடுத்துரைத்துள்ளார். மனித உழைப்பு என்பது மனித வாழ்வுக்கு அவசியமான ஒன்றாகும். உழைப்பின் வழியாக மனிதன் தன்னுடைய ஆற்றலையும் அறிவையும் பயன்படுத்தி உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார். அந்த உருவாக்கம் தான் இந்த உலகை அழகாக வைத்துள்ளது. ஆனால் ஒரு சில சுயநலவாதிகளின் உருவாக்கம் இந்த உலகை அசிங்கப்படுத்தி வைத்துள்ளது. புனித யோசேப்பு தனது உழைப்பின் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் இந்த உலகை அழகு படுத்தினார். அதே போல நாமும் நம்முடைய உழைப்பின் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் இவ்வுலகை அழகுப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
புனித யோசேப்பு தூய்மை நிறைந்த வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். இறைவனின் மீட்புத் திட்டத்திற்காக மரியாவை திருமணம் செய்த போதிலும் இல்லறத்தில் துறவற வாழ்வை வாழ்ந்து தூய வாழ்வுக்கு சான்று பகிர்ந்துள்ளார். திருமண வாழ்வின் முக்கிய நோக்கங்களாக இருப்பது அன்பும் பிள்ளைப் பேறுமாகும். யோசேப்புவின் வாழ்வில் திருமணம் ஒன்று நடந்தாலும் அவர் வாழ்ந்த இல்லற வாழ்வில் அன்பு நிறைவாக இருந்தது. ஆனால் இல்லற உறவை தியாக மனநிலையோடு இறைவனின் மீட்புத் திட்டத்திற்காக முழுமையாகக் கையளித்தார். எனவேதான் இந்த உலகை மீட்க வந்த இறைமகன் இயேசுவை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்று இயேசு வளர்ப்புத் தந்தையாக மாறினார். குடும்பங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியான திருக்குடும்பத் தலைவராக மாறினார். யோசேப்புவைப் போல ஒவ்வொரு குடும்பத் தலைவரும் முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்திட அழைக்கப்பட்டுள்ளனர்.
புனித யோசேப்பு தன் மனைவியையும் குழந்தையையும் பாதுகாத்ததில் மிகச் சிறந்தவராக இருந்தார். மரியாவை ஏற்றுக் கொண்ட நாள் முதல் தன் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் பெத்தலேகம் தொடங்கி எகிப்து வரை ,எகிப்து தொடங்கி தன் சொந்த ஊர் வரை, பாதுகாத்தார். இவ்வாறாக ஒவ்வொருவரும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக புனித யோசேப்பு நம் ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார். எனவே ஊழலும் சுயநலமும் நிறைந்த காலத்தில் இந்த உலகத்தில் புனித யோசேப்பு போல உண்மை, நேர்மை, நீதி, உழைப்பு, தூய்மை, பாதுகாக்கும் மனநிலை, பிறர் நலம், இறைத் திட்டத்திற்கு கீழ்படியும் மனநிலை போன்ற நற்பண்புகளை நமதாக்க இன்றைய விழா நாளில் அழைக்கப்பட்டுள்ளோம். புனித யோசேப்புவைப் போல வாழ நாம் தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! புனித யோசேப்புவைப் போல எந்நாளும் உம்முடைய திட்டத்திற்குச் சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment