கடவுளுக்குக் கீழ்படிபவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-இரண்டாம் வியாழன்; I: திப: 5:27-33; II: தி.பா: 34: 1,8. 16-17. 18-19 ; III: யோவான் 3: 31-36

 சிறுவர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து  விடுமுறை நாளில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதே தெருவைச் சேர்ந்த ஒரு சிறுவன் வாசலிலே அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கோ அவர்களோடு விளையாட வேண்டுமென்ற ஆசை. ஆனால் அச்சிறுவனின் அம்மா அவனை விளையாடச் செல்லவேண்டாம் எனத் தடுத்தார். அவன் தன் அன்னைக்குக் கீழ்படியாமல் விளையாடச் சென்றான். விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நேரம் விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் அவன் தன் அன்னைக்குக் கீழ்படியாத தவறை உணர்ந்தான்.

கீழ்படிதல் நம் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று.பெற்றோருக்குக் கீழ்படிந்தால் தான் பிள்ளைகள் வாழ்வில் முன்னேற முடியும். ஆசிரியருக்குக் கீழ்படிந்தால்தான் அறிவில் வளர முடியும்.நம் ஆண்டவர் இயேசு தந்தையாம் கடவுளுக்கு கீழ்படிந்ததால்தான் அவர் உயர்த்தப்பட்டார். நாமெல்லோரும் மீட்படைந்தோம். 

இன்றைய முதல்வாகத்திலும் நாம் திருத்தூதர்கள் கீழ்படிவதைக் காண்கிறோம். இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவிக்கக் கூடாது என்று சொன்ன தலைமைக் குருக்களிடம் "கடவுளுக்குக் கீழ்படிவதுதான் நல்லது. மனிதருக்கு அல்ல "என்று கூறி தங்கள் உயிரையும் விட கடவுளுக்குக் கீழ்படிவதே மேலானது என்பதை உறுபடுத்தினர் சீடர்கள்.ஏனென்றால் கடவுள் தீயவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றி உயர்த்துவார் என அவர்கள் நம்பினர்.

இன்றைய நற்செய்தியிலும் கடவுளிடமிருந்து வருபவர்களுக்கும் உலகைச் சார்ந்தவர்களுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
உலகக் காரியங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் கடவுளின் அருளை அடைவதில்லை. ஆனால் கடவுளுக்குப் பணிந்து வாழ்பவர்கள், அனைவருக்கும் மேலானவர்களாய் இருப்பார்கள். எனவே நம்முடைய வாழ்விலும் நாம் உலகத்திற்கும் நம்மை அடிமைப்படுத்தும் காரியங்களுக்கும் கீழபடிவதைத் தவிர்த்து கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் திருஉளத்தை நிறைவேற்றும் வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா எத்தகைய சூழலிலும் உமக்குக் கீழ்படிந்து வாழ்வில் உயர்வடைய அருள் தாரும். ஆமென்.

Add new comment

5 + 15 =