தூய ஆவியால் மறுபிறப்பா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-இரண்டாம் திங்கள்; I: திப: 4:23-31; II: தி.பா: 2:1-3 ,4-6,7-9; III : யோவான் 3:1-8

இன்றைய வாசகங்கள் நாம் ஆவியாரின் துணைகொண்டு புதுபிறப்பெடுக்க நம்மை அழைக்கின்றன. யோவான்(3-5)
"இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார்.
இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." 
என்ற இவ்வார்த்தைகள்  பதுப்பிறப்பு அல்லது மறுபிறப்பின் அர்த்தத்தை நமக்கு விளக்குகின்றன. 

நாம்  திருமுழுக்கு பெறுவது தண்ணீராலும் தூய ஆவியாலும் அடையும் புதுப்பிறப்பே.ஆனால் அப்பிறப்பு தந்தையின் திருவுளப்படி அமையாவிட்டால் அது பெயரளவில் மட்டுமே இருக்கும். அப்பிறப்பு வாழப்பட வேண்டும். அவ்வாறு தூயஆவியால் மறுபடிப் பிறந்தவர்கள் திருஅவை வரலாற்றில் ஏராளம்.

திருத்தூதர்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இயேசுவின் இறப்புக்குப் பின் வலுவிழந்து, வாழ்விழந்து யூதர்களுக்கு அஞ்சி தங்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள் தூய ஆவியால் புதுப்பிறப்படைந்து இயேசு விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றினார்கள் என திருத்தூதர் பணி விளக்குகிறது. பயந்து ஒளிந்தவர்கள் யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கினர். இயேசுவைப்போல் அருஞ்செயல்கள் புரிந்தனர். மனித இயல்பிலிருந்து வேறுபட்டு இயேசுவின் இயல்பைப் பரதிபலிக்கத் தொடங்கினர்.

நம்முடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் புதுப்பிறப்பு அடைய வேண்டும்.தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதிக்க வேண்டும். அத்தூய ஆவியின் துணையால் உலக மாயை என்ற சுவர்களுக்குள் பயந்து ஒளிந்து கிடக்கும் நாம் நிச்சயமாக வெளிவர முடியும். நம்முடைய பலவீனங்களை வெல்ல முடியும். துணிச்சலோடு சவால்களை சந்தித்து இயேசுவின் நற்செய்தியைப் பரப்பமுடியும்.இயேசுவைப் போல மாறி நமக்கும் பிறருக்கும் பயன்தரும் நற்செயல்கள் புரிய முடியும்.

நிக்கதேம் இயேசுவிடம் கடவுளோடு இருந்தாலன்றி இத்தகைய செயல்களை யாரும் செய்ய இயலாது எனக் கூறினார். உண்மையான புதுப்பிறப்பு இறைவனோடு இணைந்து இருப்பதே. இறைவனோடு இணைந்திட தூய ஆவியானவர் நமக்குத் துணை செய்கிறார்.எனவே  தூய ஆவியாரால் புதுப்பிறப்பு அடைந்து இயேசுவுக்குச் சான்று பகரும் வாழ்வு வாழ அருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

தூய ஆவியானவரே எம்முள் எழுந்து வாரும். நாங்கள் புதுப்பிறப்படைந்து இயேசுவின் நற்செய்தியை திருத்தூதர்களைப்போல வல்லமையுடன் பறைசாற்ற அருள் தாரும். ஆமென்

Add new comment

1 + 2 =