இயேசுவின் நினைவாகச் செய்வோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


புனித வியாழன்; I: வி.ப 12: 1-8,11-14; II: தி.பா   115:12-13,15-18; III: 1 கொரி 11:23-26; IV: யோவான் 13:1-15

வீட்டிலே அனைவரும் அமர்ந்து மகிழ்வுடன் திரைக்கு புதிதாய் வந்த திரைப்படத்தைக் கண்டுகொண்டிருந்தனர். அப்போது வாசலிலே ஒரு பிச்சைக்காரர் "அம்மா தாயே" என்று மிகவும் பரிதாபமான குரலில் அழைத்தார். வீட்டில் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. படம் பார்க்கும் ஆர்வத்தில் அப்பெரியவரின் சப்தம் அவர்கள் காதிற்கு எட்டவில்லை. அப்போது வேறு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்தப் பிச்சைக்காரரிடம் அப்பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவர் அனைவரையும் சற்று கோபத்துடன் பார்த்தார். பின் தன் பேரனை அருகில் அழைத்து " தாத்தா செய்ததைப் பார்த்தாய் அல்லவா. இனிமேல் யாராவது பிச்சை கேட்டு வந்தால் உடனே எதாவது கொடுக்க வேண்டும். அப்போது இந்த தாத்தாவையும், தாத்தா செய்த செயலையும் நினைத்துக்கொள் " என்று கூறிவிட்டு மீண்டுமாக தன் அறைக்குள் சென்றார்.

இன்று புனித வியாழன். இன்றைய நாளில் நாம் இயேசு தன் சீடர்களோடு பாஸ்கா உணவு அருந்திய நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.இந்நாளில் இயேசு தன்னையே தாழ்த்தி தலைவன் என்ற நிலையிலிருந்து இறங்கித் தன் சீடர்களின் பாதங்களைக்  கழுவும் நிகழ்வையும் நாம் நினைவு கூறுகிறோம். மேலும் இயேசு "இது என் உடல்.இது என் இரத்தம். இதைப் பெற்று உண்ணுங்கள்,பருகுங்கள் " என்று கூறி என்றும் அழியா தன் உடனிருப்பாக  நற்கருணையையும், தன் நினைவாக பலியை நிறைவேற்ற குருத்துவத்தையும்  ஏற்படுத்திய நாளிது.

இந்நாளில் இயேசு தாழ்ச்சியும் பணிவிடை புரிவதுமே உண்மையான தலைமைத்துவம் என்ற கருத்தையும் இயேசு நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கற்றுத்தருகிறார். அதிலும் குறிப்பாக தன்னையே உணவாகக் கையளித்து " இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்று தம் சீடரிடம் கூறுகிறார் இயேசு. அதே வார்த்தைகளை இன்று நம்மிடமும் கூறுகிறார் நம் ஆண்டவர் இயேசு. 
இவ்வாறு கூறி இயேசு நம் உடலையும் இரத்தத்தையும் பிறருக்காக கையளிக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக நம் அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இயேசுவை நாமும் நினைவு கூர்ந்து பிறரும் நினைவு கூறும் வண்ணம் நாம் வாழ வேண்டும் என்பதையே அவர் கூறுகிறார்.

பிறரை அன்புடனும் கரிசனையுடனும் சிரித்த முகத்துடனும் நோக்குதல், தனிமையாய் இருப்பபவரிடம் சென்று சில மணித்துளிகள் உரையாடுதல், தாங்கித் தள்ளாடி நடப்பவர்களுக்கு கரம் கொடுத்து உதவுதல் , இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பகிர்ந்து கொடுத்தல், விழுந்தவரைத் தூக்கி விடுதல், தெரிந்தே நமக்கெதிராய் தீமை செய்பவர்களையும், நம்ப வைத்து ஏமாற்றுபவர்களையும் மன்னித்தல், பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பாசமாய்ப் பழகுதல், போன்ற சின்னச் சின்னக் காரியங்கள் கூட இயேசுவின் நினைவாகச் செய்யப்படும் காரியங்களே.

சுருங்க்கூறின் சுயநலம் துறந்த எல்லா பிறரன்புச் செயல்களும்,  சிறியதானாலும் பெரியதானாலும் இயேசுவின் நினைவாகச் செய்யப்படும் செயல்களே. ஏனெனில் இயேசு தன்னலம் நாடாதவர். மனித நேயம் கொண்டவர். அவருடைய மனநிலையை நமதாக மாற்றி பிறரன்புப் பயணிகள் செய்யும் போது நாம் அவரை நினைவு கூறுவதோடல்லாமல் பிறருக்கும் இயேசுவை நாம் நினைவூட்டுகிறோம். எனவே அதற்கான வரத்தை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா தன்னலம் துறந்த பிறரன்புப் பணிகளை இயேசுவின் நினைவாகச் செய்யும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

13 + 0 =