Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செயல் புரிபவர்களை மதிப்போமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -நான்காம் சனி; I: ஏரே: 11: 18-20; II: திபா: 7: 1-2. 8-9. 10-11; III: யோ: 7: 40-53
ஒருமுறை அருட்சகோதரர் ஒருவர் தன்னுடைய பயிற்சி காலத்தில் வீடுகள் சந்திப்பிற்காகச் சென்றிருந்தார். குடும்பங்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி அக்குடும்பத்தின் தேவைகளுக்காக செபித்து விட்டு வருவது வழக்கம். ஆனால் அன்று அவருக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைத்தது. அவ்வீட்டிலிருந்த குடும்பத்தலைவி தன்னுடைய அண்டை வீட்டிலிருக்கும் மற்றொரு பெண்ணைப் பற்றி புகார் செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணின் ஊர்,தொழில் அனைத்தையும் சுட்டிக் காட்டி "அவ்வூரிலிருந்து வருகிற அந்த வேலை செய்பவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்கள்" என்று கூறினார். வழக்கமாக சிரித்த முகத்துடன் குடும்பங்களைச் சந்திக்கும் அச்சகோதரர் அவ்வாறாகப் பேசிய அக்குடும்பத்தலைவியைப் பார்த்து "நீங்கள் இவ்வாறாகப் பேசுவது முறையல்ல" என்று கூறி வருத்தத்தோடு வெளியேறினார்.
இத்தகைய மனநிலை நம்மில் பரவலாகக் காணப்படுவதுதான். ஒருசிலர் புதிதாக யாரையாவது கண்டு உரையாடும் வாய்ப்புகிடைத்தால் அம்மனிதரைப் பற்றி விசாரிப்பதைவிட, அவர்களுடைய ஊர், வேலை, பூர்வீகம் இவற்றை விசாரித்து அவர்களை ஒருவரையறைக்குள் வைத்துவிடுவார்கள்.
இதுதான் இயேசுவுக்கும் நடந்தது. அவருடைய போதனைகளும் வல்ல செயல்களும் பலரை ஈர்த்து. அவரை இறைவாக்கினர் எனவும் ,மெசியா எனவும் பலர் கருதினாலும்,அவர் கலிலேயாவிலிருந்து வந்ததால் அவரை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் தயங்கினர். அவருக்கு ஆதரவாக பேசியவர்களைக் கூட தவறாகப் பார்த்தனர். தாங்கள் சொல்வது தான் உண்மை என நிருபிக்க திருநூலையும் சுட்டிக்காட்டி இயேசுவின் மதிப்பை மற்றவர்கள் முன் குறைக்கவும்,அவரைக் கைதுசெய்யவும் கொலை செய்யவும் திட்டம் தீட்டினர் என நாம் இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
இச்சிந்தனைகள் வழியாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
நன்மை புரியவும், நல்லவராக வாழவும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறவும் குறிப்பிட்ட ஊரில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட சமூகத்தில் பிறந்தவராகவோ,மொழி பேசுபவராகவோ அல்லது குறிப்பிட்ட சமயத்தைத்வழுவுபவராகவோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் அதை அறவே ஒழித்து விடுவோம். நன்மை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்கவும் மதிக்கவும் கற்றுக்கொள்வோம். அதே போல நாமும் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் தொடர்ந்து நன்மைகள் செய்வதில் கருத்தாய் இருப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா இடம், மதம்,மொழி, இனம் அனைத்தையும் கடந்து அனைவரையும் மதிக்கவும்,அவர்களின் நற்செயல்களை ஆதரிக்கவும் அருள் தாரும். ஆமென்.
Add new comment