நமக்காகக் காத்திருக்கிறார் ஊதாரி தந்தையாம் கடவுள்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -இரண்டாம்  சனி   
I: மீக்:  7: 14-15, 18-20
II:  தி.பா: 103: 1-2. 3-4. 9-10. 11-12 
III: லூக்: 15: 1-3, 11-32

நான் சிறுவயதில் மறைக்கல்வி வகுப்புக்குச் செல்லும் போது, அருள்தந்தை  ஒருவர் மிக வேடிக்கையாகச் சொல்லுவார் " கடவுளுக்கும் மனிதனுக்கும்  இடையே ஒரு கயிறு இருக்கிறது. இருவரும் ஆளுக்கொரு முனையைப் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் கயிறு துண்டிக்கப்படுகிறது.தவறை உணர்ந்து மனிதன் மீண்டும் கடவுளுடன் சேரும் போது கயிறு முடிச்சிடப்பட்டு இணைக்கப்படுகிறது. இதனால் கயிறின் நீளம் குறைகிறது. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயுள்ள தூரம் குறைகிறது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும் தவறி விழுந்து எழும்பும் போது கடவுளுடன் நெருக்கமடைகிறான் மனிதன். ஆனால்  மனந்திரும்பாவிட்டால் துண்டிக்கப்பட்ட கயிறு துண்டிக்கப்பட்டதாகவே இருந்துவிடும். மனிதனும் கடவுளும் பிரிந்து விடுவார்கள். அதனால் தவறை நினைத்து வருந்தி கடவுளுடன் நெருக்கமாக இருக்க நாம் எல்லாரும் முயற்சி செய்ய வேண்டும் "

 இச்செய்தியை மேலோட்டமாக  யோசித்துப்பார்த்தால் நமக்கே வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அது உண்மை எனப் புரியும். இரு நண்பர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களிடையே உள்ள அன்பு, புரிதல், அக்கறை போன்றவை இருவருக்கும் இடையே இணைப்புக் கயிறாய் இருக்கிறது.  மனத்தாங்கலோ, தவறான புரிதல்களோ பிரிவை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் நிச்சயம் நடந்தேறும். ஆனால் அவற்றுக்குப் பிறகு மீண்டும் இணையும் அந்த நண்பர்களுக்கிடையில் அதிக அன்பும், புரிதலும் இருக்கும். தன் தவறை உணர்தல், அறிக்கையிடுதல், மன்னித்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய நான்கு பரிமாணங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் நாம் ஊதாரி தந்தை மகன் உவமையைக் காண்கிறோம். தந்தை அன்பு செய்வதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் ஊதாரியாய் இருந்தார். மகன் தன் தந்தையைப் புறக்கணிப்பதிலும் சொத்தை அழிப்பதிலும் ஊதாரியாய் இருந்தான். 
தன்னுடைய இழிவான செயல்களால் அனைத்தையும் இழந்த பின்தான் தன்னிலை உணர்ந்தான் அவன். உணர்வதோடு நிறுத்தி விடவில்லை. தன் தவறை அறிக்கையிட்டான். தன் மகன் எப்போது வருவான் என ஊதாரித்தனமான அன்போடு காத்துக் கொண்டிருந்த தந்தை  தவற்றை அறிக்கையிட்டத் தன் மகனை மன்னித்தார். மன்னிப்பதோடு நிறுத்திவிடவில்லை அவனை மீண்டும் ஏற்றுக்கொண்டார். இருவரும் முன்பைவிட அதிக அளவு நெருக்கமாயினர். 

நம்முடைய வாழ்வை அலசிப்பார்க்கும் நேரமிது. நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் அயலாருக்குமுள்ள உறவு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என ஆய்வு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். உறவு விரிசல்கள் ஏற்படும் நேரங்களில் அவற்றிற்கு நாம் காரணமாக இருந்தால் தவறை உணர்ந்து அறிக்கையிடும் குணம் நம்மில் இருக்கிறதா? இல்லை பிறர் காரணமாக இருக்கும் பொழுது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் உள்ளதா?அனைத்திற்கும் மேலாக ஆன்மீகப் பயணத்தின் சறுக்கல்களில் மீண்டும் எழுந்து நமக்காக ஊதாரித்தனமான அன்போடு  காத்திருக்கும் தந்தைக் கடவுளிடம் திரும்பிச்செல்ல முயற்சி செய்கிறோமா? நம்மையே சோதித்து இறைவனிடமும் சக மனிதருடனுமுள்ள உறவைப் புதுப்பிப்போம். கடவுள் நமக்காக அன்போடு காத்திருக்கிறார்.

இறைவேண்டல் 

அன்பு இறைவா நீர் எனக்காகக் காத்திருப்பதை உணர்ந்து மனந்திரும்பி உம்மிடம் திரும்பி வர வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 13 =